சென்னை, அக். 21- போலியான யுபிஅய் செயலிகள், க்யூஆர் குறியீடு மோசடி என மோசடியாளர்கள் விதவிதமாக அலைகிறார்கள். டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை அதிகரிப்பது போல மோசடி வழக்குகளும் அதிகரிக்கின்றன.
சிறு தொகை வரவு வைத்து திருடுதல்: யுபிஅய் மூலம் மோசடி செய்ய முயல்வோர், ஒரு சிறு தொகையை ஒரு வங்கிக் கணக்குக்கு அனுப்புவார்கள். அந்த செய்தியைப் பார்த்ததும் வங்கிக் கணக்குக் சொந்தக்காரர் தனது வங்கிக் கணக்கைத் திறந்து பார்ப்பார். அப்போது அவரது செல்போனை கண்காணிக்கும் மோசடியாளர்கள், பின் எண் உள்ளிட்டவற்றை அறிந்துகொண்டு மோசடி செய்கிறார்கள்.
ஒரு சிறு தொகையை அனுப்பிவிட்டு, அதனை திருப்பி அனுப்பக் கோரி, மோசடியாளர், வங்கிக் கணக்குக் சொந்தக்காரரை அணுகுவார்கள். அந்தப் பணத்தைத் திருப்பி அனுப்பும்போது, அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடும் கும்பலும் உள்ளது.
பணத்தைப் பெற்ற நபருக்கு போன் செய்து, தவறுதலாக வரவு வைக்கப்பட்டு விட்டதாகவும், தாங்கள் சிறு தொகையைப் பெற்றுக் கொண்டு பெரிய தொகை அனுப்புவோம் என்று ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றுபவர்களும் உண்டு.
தற்காத்துக்
கொள்வது எப்படி?
உடனடியாக வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டாம்: எதிர்பாராத வகையில், தெரியாத நபர்கள் யாரேனும் பணம் அனுப்பினாலோ, ஒரு சிறு தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று தகவல் வந்தாலோ உடனடியாக வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டாம். குறைந்தது 30 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கைப் பரிசோதிப்பது நல்லது. அதற்குள், அந்த மோசடி கும்பலின் முயற்சி காலாவதியாகியிருக்கலாம்.
சைபர் குற்றத்தினால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
சைபர் குற்றங்களினால் பாதிக்கப்பட்டால் உடனடியாகப் புகார் அளிப்பது அவசியம் என சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சைபர் குற்றங்களில் இந்தியர்கள் ரூ.22,842 கோடியை இழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், மோசடியில் சிக்கிய பலரும் புகார் கொடுக்க மிகவும் தயங்குவதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மோசடி என்று தெரிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
