– சஞ்சய் ஹெக்டே
(உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்)
(உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருபவர் பாபா சாகேப் அம்பேத்கர். அவரால் தான் அது உருவக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவு. ஆனால் ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கிளப்பியே ஆக வேண்டும் என்று துடிக்கும் சிலர் அம்பேத்கர் அதை உருவாக்கவில்லை – சர் பெனகல் நரசிங் ராவ் என்ற அதிகாரிதான் அதை உருவாக்கியவர் என்று விதண்டாவாதம் செய்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவருக்கு அந்தப் பெருமை கிடைத்ததை பொறுத்துக் கொள்வார்களா இவர்கள்? வரலாற்றைத் திரிக்கவும், திருத்தவும் புதிதாக சிலவற்றை அதில் திணிக்கவும் துடிப்பவர்கள் இவர்கள்.
உண்மையில் நடந்தது என்ன?
ஓர் ஓவியத்திற்கான வடிவத்தை திரு.பி.என்.ராவ் அமைத்துத் தந்தார். ஆனால் அதை அழகுற வரைந்து எழிலோவியமாக மாற்றியவர் அம்பேத்கர். ஒரு திறன்மிக்க பொறியாளர் போல் கட்டிடத்திற்கான மாதிரி வரைப்படத்தை மட்டுமே பி.என்.ராவ் கொடுத்தார். கல் சுமந்து, மண் சுமந்து ஒவ்வொரு அங்குலமாக சீர்படுத்தி எழில் மிக்க மாபெரும் கட்டடமாக உருவாக்கும் பணியாளர்களைப்போல் அதை முழுமையாக்கி நமக்குத் தந்தவர் அம்பேத்கர்.
அரசமைப்புச் சட்டக் குழுவில் ஓர் ஆலோசகராக இருந்தவர் பி.என்.ராவ். அவர்தான் முழுக்க முழுக்க அரசமைப்புச் சட்டத்தைத் தயாரித்ததாகவும், அம்பேத்கர் ஆங்காங்கே சில திருத்தங்களை மட்டுமே செய்ததாகவும் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது. இந்தியாவின் அடித்தளமான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பெருமை தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துவிட்டதால் ஏற்படும் காழ்ப்புணர்வுதான் இது. அம்பேத்கரைச் சிறுமைப்படுத்தும் விஷமத்தனமான முயற்சி இது.
ஒன்றிணைந்த பணி – போட்டியிட்ட பணியல்ல
அரசியலமைப்புச் சட்டம் உருவானதில் இருவருக் குமே தவிர்க்கமுடியாத பங்களிப்பு இருந்துள்ளது. அவர்கள் செயலாற்றிய விதம் மட்டுமே வெவ்வேறாக இருந்தது. திரு.பி.என்.ராவ் அரசியலமைப்புச் சட்டக் குழுவின் ஆலோசகராக 1946 ஜூலையில் நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ‘இந்திய அரசுச் சட்டம் 1935’ – தயாரிப்பில் உதவி புரிந்தவர் அவர். பதினொரு ஆண்டுகளுக்குப் பின் 1946இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் பணியில் அவருடைய ஆற்றலும், அறிவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களைத் தெரிந்து கொண்டு தரவுகளைச் சேகரித்து வைத்திருந்தார் அவர். எனவே முதல் கட்டப் பணியில் அவர் ஓர் ஆலோசகராக மட்டுமே இருந்து தொடக்கப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். 1947 அக்டோபரில் பி.என். ராவ் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். 243 பிரிவுகளும் 13 பட்டியல்களும் அதில் இருந்தன. அவருடைய அறிக்கை அரசியலமைப்புச் சட்ட உருவாக்கப் பணியை தொடக்கி வைத்தது என்று மட்டும் சொல்லலாம். அந்தக் குழுவில் அவர் உறுப்பினராக இருக்கவில்லை. ஆலோசகராக மட்டுமே இருந்தார். ஒரு சட்ட வல்லுநர் என்ற வகையில் மட்டுமே அவர் சேர்க்கப்பட்டிருந்தார். எவருக்கும் எதற்கும் அவர் பிரதிநிதித்துவம் வகிக்கவில்லை.
அம்பேத்கரின் பணி மாறுபட்டிருந்தது
வரைவுக் குழுவின் தலைவர் என்ற முறையில் சட்ட வரைவாக மட்டுமே இருந்த ஆவணத்தை ஓர் அரசியல் உடன்படிக்கையாக (covenant) மாற்றவேண்டிய பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாடு பிரிக்கப்பட்டு கொந்தளிப்பு ஏற்பட்டிருந்த காலக்கட்டம் அது. காந்தியார் கொல்லப்பட்டதால் நாடே புரட்டிப் போடப்பட்டிருந்த பரபரப்பான சூழ்நிலை. அப்படிப்பட்ட கலவரங்கள் பெருகிய ஒரு காலக்கட்டத்தில், அம்பேத்கர் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுச் சட்டப்பிரிவுகளையும், விதிகளையும் உன்னிப்பாகக் கவனித்து எழுதிக் கொண்டிருந்தார். விவரிக்க இயலாத பணிச்சுமை அது. எளிதான காரியமே அல்ல அது. எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளும்படியும் எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையிலும் இருக்கும்படி அரசியலமைப்புச் சட்டத்தை மிகவும் கவனமாக உருவாக்கினார் அவர்.
புள்ளிகளை மட்டுமே வைத்துவிட்டுப் போனவர் பி.என். ராவ். அவற்றைக் கொண்டு கண்கவரும் கோலத்தை வரைந்தவர் அம்பேத்கர். ஓர் உருவத்திற்கேற்ற ஆளுயரப் பளிங்குக் கல்லை வைத்துவிட்டு அவர் நகர்ந்து விட்டார். வியர்வை சிந்தி, உளி பிடித்துச் செதுக்கி ஓர் அழகுச் சிலையை உருவாக்கிய சிற்பி போல் அல்லவா அம்பேத்கர், பி.என்.ராவின் வடிவத்திற்கு உயிர் கொடுத்து அரசியலமைப்புச் சட்ட உயிரோவியத்தை இந்தியக் குடியரசுக்கு அளித்தார்? பெருமைக்குரியவர் அவரல்லவா? அவரை நாம் பெருமைப்படுவதால் பி.என். ராவைச் சிறுமைப்படுத்துவதாக ஒரு நாளும் ஆகிவிடாது. இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து நமக்கில்லை.
நீதியை நிலைநாட்டும் கருவியாக அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் மாற்றியமைத்தார். பி.என்.ராவ் அழகான கட்டமைப்புச் சட்டம் தந்தார். அதற்குள் அற்புதமான ஒரு சித்திரத்தைப் பொருத்தியவர் அம்பேத்கர் அல்லவா? வெறும் கல்லாக இருந்ததை அற்புதச் சிலையாகச் செதுக்கிய சிற்பியல்லவா அவர்?
பி.என்.ராவின் பங்களிப்பை அம்பேத்கர் ஒரு நாளும் மறுத்ததில்லை. பி.என்.ராவும் அது முழுக்க முழுக்க தன் சாதனைதான் என்று என்றுமே பெருமைப்பட்டுக் கொண்டதில்லை. தேவையின்றி, சம்பந்தமில்லாத சிலர் உள்நோக்கத்துடன் வரலாற்றைத் திரித்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதே உண்மை. ஓர் அரசியல் சார்ந்த உள்நோக்கம் கொண்ட விஷமம் இது.
1949 நவம்பர் 25 ஆம் நாளன்று தனக்கு அளிக்கப்பட்ட பணிப் பொறுப்பினை நிறைவு செய்து அம்பேத்கர் அரசமைப்புச் சட்டக்குழு கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்:
“இந்தப் பணி முழுக்க முழுக்க என் சாதனை அல்ல. இதில் ஒரு பகுதி பி.என்.ராவுடையது. அவர் அளித்த வரைபடத்தை வைத்து நான் என் பணியை முடித்துள்ளேன். 141 நாட்கள் என்னுடன் உழைத்த வரைவுக்குழு உறுப்பினர்களுக்கும் இதில் பங்கு உண்டு. பேருதவி புரிந்த எஸ்.என்.முகர்ஜி அவர்களும் போற்றுதலுக்குரியவர்.”
அம்பேத்கரால் முழுமை பெற்ற அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னடக்கம் நிறைந்த பி.என்.ராவ் “இது என் சாதனை” என்று சொன்னதாக எந்தச் சான்றும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. “அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை” என்று பி.என்.ராவை இன்று சிலர் போற்றுவது வரலாற்றுப் பிற்போக்கான திரிபு மட்டுமல்ல; பி.என்.ராவின் தன்னடக்கத்தையே இழிவுபடுத்தும் செயலும் ஆகும் என்றால் அது மிகையாகாது.
அரசியல் நோக்கம்:
அரசியலமைப்புச் சட்டம் வெறும் ஒரு சட்ட ரீதியான ஆவணம் மட்டுமல்ல, சமூக அறிக்கையுமாகும். தனி மனிதனின் சுயமரியாதையை அங்கீகரிக்கும் ஆவணம் அது. பல போராட்டங்களிலிருந்து உருவான ஆவணம் அது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அதிகாரப் பங்களிப்பு உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்று முழங்கும் சங்கு அந்த ஆவணம்! அம்பேத்கரை அதிலிருந்து பிரித்துப் போடுவது அதன் உயிரோட்டத்தையே அழிப்பதற்குச் சமமான இழிச்செயலாகும்.
அம்பேத்கரை அரசியலமைப்புச் சட்டக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் பரிந்துரைத்தவர் காந்தியார்தான். அவர்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டக்குழுவில் பங்குபெற்றே ஆகவேண்டும் என்பதில் காந்தியார் உறுதியாக இருந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு இல்லாமல் உருவாக்கப்படும் எந்த அரசியலமைப்புச் சட்டமும் ஏற்புடையதாகாது என்றாராம் காந்தியார். அவருடைய இந்த முன்யோசனை நற்பயன் விளைவித்தது.
1947இல் மதவெறிப் போராட்டங்களால் நாடே பிளவுப்பட்டுக் கிடந்த காலக்கட்டத்தில் இந்த அரசியலமைப்புச் சட்ட உருவாக்கப் பணியில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அம்பேத்கர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் ஒரு நன்மைக்கே! அவர் தவிர்க்கப்பட்டிருந்தால் நாட்டில் மேலும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கக்கூடும். அம்பேத்கரை அந்தக் குழுவில் சேர்த்ததால் காந்தியார் அதை முன்யோசனையுடன் தவிர்த்தார் என்றே கூறலாம். இல்லாவிட்டால் குடிஅரசின் துவக்கமே பாதிக்கப்பட்டிருக்கும். அம்பேத்கரின் சிறந்த பங்களிப்பால் நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது. அவரால் உருவாகி முடிந்த அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டபின் அமைதி ஏற்பட்டு நாடு ஒன்றுபட்டது.
பி.என்.ராவ் வடிவமைத்த சட்டத்திற்கு ஒரு தார்மீக அலங்காரம் தந்தார் அம்பேத்கர். அடிப்படை உரிமைகள் சார்ந்த சட்டப்பிரிவுகளுக்கு அவரே நன்றிக்குரியவர். பல கோட்பாடுகளும், விதிமுறைகளும் அம்பேத்கரின் அறிவால் பதிவு செய்யப்பட்டவை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு உரிமைகள் யாவுமே அவருடைய அறிவாற்றலிலிருந்து பிறந்தவை. அவருடைய உரைகள் அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு நிரந்தர தார்மீகத் தத்துவமாகவே மாற்றி விட்டன.
சமூகச் சமத்துவமும், பொருளாதாரச் சமத்துவமும் இல்லாவிட்டால் வெறும் அரசியல் சமத்துவத்தால் எந்தப் பயனும் இல்லை என்று எச்சரித்தவர் அம்பேத்கர்.
“எத்தனை காலம்தான் நாம் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை மக்களுக்கு அளிக்காமல் இருக்க முடியும்? சமூகத்திலும், பொருளாதாரத்திலும் சமத்துவம் ஏற்படுத்த நாம் தவறினால் அரசியல் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டு விடும்” என்று எச்சரித்தார் அம்பேத்கர்.
இந்த முரண்பாடு விரைவில் நீங்க வேண்டும் என்றார் அவர். இதை நாம் நீக்கத் தவறினால் சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொதித்தெழுந்து அரசியல் ஜனநாயகத்தையே தரைமட்டமாக்கி விடுவார்கள் என்றும் கூறினார் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் இன்றும் அம்பேத்கரின் மேற்கண்ட எச்சரிக்கைகள் வலிமைமிக்க தார்மீக அறிக்கைகளாக நிலைத்துள்ளன.
மறதியின் ஆபத்து
ஒவ்வொரு குடியரசும் கடந்த கால நிகழ்வுகளை மறக்காமல் இருக்க வேண்டும். மறதி என்பதே அபாயகரமான ஒன்று. அம்பேத்கருக்கு மேல் பி.என்.ராவை உயர்த்திப் பிடித்துக் காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே முரணான செயல். ஜாதி பாகுபாட்டை எதிர்க்கும் அரசியலமைப்புச் சட்டத்தையே அது சிறுமைப்படுத்தும் செயலாகி விடும். அம்பேத்கரைக் கவுரவிப்பது பி.என்.ராவை குறைத்து மதிப்பிடுவதாகி விடாது. இருவருமே குடியரசுக்காக மனசாட்சிக்கு விரோதமின்றி பணியாற்றியவர்கள்.
அரசியலமைப்புச் சட்டம் வெறும் ஒரு சட்டப் புத்தகம் போன்றதல்ல. அது தேசிய நோக்கம் உள்ள ஓர் உன்னத அறிக்கை. ஒரு சட்ட வல்லுநரின் அறிவுக் கூர்மையும், ஆற்றலும் அதற்குத் தேவைப்பட்டது. ஒரு சீர்திருத்தவாதியின் கொள்கைப் பற்றும் அதற்குத் தேவைப்பட்டது. ஒன்றை பி.என்.ராவ் அளித்தார். மற்றொன்றை அம்பேத்கர் வழங்கினார்.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது நேரு, பட்டேல், ராஜேந்திர பிரசாத் உட்பட அனைவரும் அம்பேத்கரின் முக்கிய பங்களிப்பைப் போற்றிப் புகழ்ந்தனர். பி.என்.ராவின் பங்களிப்பையும் பாராட்டினர். பாரபட்சமான முறையில் எவரும் எதையும் கூறவில்லை. பி.என்.ராவ் சிறந்த ஆலோசகராக விளங்கினார். அம்பேத்கர் தார்மீக சட்டக் கட்டமைப்புக் கலைஞராக விளங்கினார். இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள். இருவருமே நன்றிக்குரியவர்கள். ஒரு பொறியாளர் போல் செயல்பட்டவர் பி.என்.ராவ். ஈடு இணையற்ற சட்டக்கலை கட்டமைப்பு நிபுணர் போல் பணியாற்றியவர் அம்பேத்கர். இதை எவரேனும் ஏற்க மறுத்தால் குடியரசையே ஏற்க மறுத்தது போலாகும்.
(திரு. சஞ்சய் ஹெக்டே அவர்கள் எழுதி ‘தி இந்து’ (17.10.2025) ஆங்கில நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் மய்யக்கருத்து)
நன்றி. ‘தி இந்து’ – 17.10.2025
மொழியாக்கம் : எம்.ஆர். மனோகர்.
