கோ. ரகுபதி
ஆய்வாளர்
பிரிட்டிஷ் இந்தியாவில், தீபாவளியை ஆதரித்தும் எதிர்த்தும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒடுக்கப்பட்டோரும், சுதேசியவாதிகளும் பிரிட்டிஷ் இந்தியாவில் விவாதித்தனர். அப்போது ஒடுக்கப்பட்ட ஜாதிகளின் விடுதலை. பெண் விடுதலை, சுயமரியாதை, சுதேசி இயக்கங்களும் உலகப் போர்களும் பெரும் போர்க் களமாக்கியதால் வெடிச்சத்தங்கள் ஒலித்தன.
பலவித நரகாசுரர்கள்
திராவிடக் கருத்தியலின் முன்னோடியான அயோத்திதாசர் திராவிடரான நரகாசுரன் அழிக்கப்பட்ட நாளைக் கொண்டாடுவதைப் பவுத்தப் பண்டிகை என்று ’தமிழன்’ இதழில் 1907 நவம்பர் 13-இல் எழுதிய, ‘தீபாவளிப் பண்டிகை என்னும் தீபவதி ஸ்னான விவரம்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டார். சுதேசி இதழான ’ஆனந்தபோதினி’ 1933 அக்டோபரில், ‘உண்மைத் தீபாவளி எது?’ என்ற தலையங்கத்தில், நரகாசுரன் மக்களைத் துன்புறுத்தியதால் சமைக்கவும், விளக்கேற்றவும் இயலாமல் எங்கும் இருள் சூழ்ந்ததாகவும், அவன் கொல்லப்பட்டதால் அதைக் கொண்டாடினர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், ‘‘அந்தக் காலத்தில் ஒரு நரகாசுரன்தான். இந்தக் காலத்திலோ? கொடுமை.. கொடுமை! கல்வி, எழுத்து வாசனை இல்லை. இவை அறியாமை என்னும் நரகாசுரன். நல்ல விவசாயம், கைத்தொழில், வர்த்தகம் இல்லாததால் வறுமை என்னும் நரகாகரன் அட்டகாசம் செய்கிறான். பலவிதப் பிணிகளான நரகாசுரர்கள் மக்களை விழுங்குகின்றன. கள் – சாராய, அந்நியத் துணி நரகாசுரர்களின் கொடுமைகளை வருணிக்க இயலவில்லை. இத்தனை நரகாகார்களும் கோடிக்கணக்கான ஏழைகளைத் துன்புறுத்துகிறபோது. ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுகிறீர்கள்?’’ என அத்தலையங்கம் வினவியது.
‘‘பட்டாசு வேடிக்கைகளில் பாடுபட்டுத் தேடிய பொருளைக் கொட்டிவிடுகிறீர்கள், பகட்டான அந்நியத் துணிகளில் மோகம் வைத்துப் பொருள்களை வீண்விரயம் செய்கிறீர்கள். சுகாதார முறைக்கு முரண்பட்ட பலகாரங்களைச் செய்து உண்டு உடம்பைக் கெடுக்கிறீர்கள். இதுவா தீபாவளி நாளைக் கொண்டாடும் முறை? இந்நாளில் சிலர் கள், சாராயத்தைக் குடித்து மயங்கித் திரிகின்றனர். ஆடு, கோழிகளைக் கொன்று தின்கின்றனர். நமது நாடு அடிமைப்பட்டுக் குழியிலாழ்ந்து பற்பல நரகாகரர்களின் கொடுமைகட்கு உட்பட்டிருக்கும்போது. நீங்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் முறை இதுவா?’’ என வினவியது.
‘இப்பொழுது நமக்கு வேண்டியது விடுதலை. அதற்கு ஆக்கம் அளிக்கும் வழியில் தீபாவளியைக் கொண்டாட வேண்டும்’ என அறிவுறுத்தியது. மேலும், ‘அகிம்சை பரவுதல். ஜாதி சமய வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஏற்படுதல், தாழ்த்தப்பட்ட மக்கட்கு விமோசனம் கிடைத்தல், சுதேசிப் பொருள் பெருகுதல் ஆகிய காந்தி ஜெயந்தியின் நன்நோக்கத்தைப் பூர்த்திசெய்வதாகத் தீபாவளிக் கொண்டாட்டம் இருக்க வேண்டும்’’ எனக் கூறியது. அயோத்தி தாசரும் ‘ஆனந்தபோதினி’யும் வெவ்வேறு கருத்தைக் கூறினாலும் தீபாவளியைக் கொண்டாடுவதை ஆதரித்தனர்.
அருப்புக்கோட்டையில் 1946இல் சுயமரியாதைக்காரர்கள் தீபாவளியை எதிர்த்துக் கருஞ்சட்டைப் படை ஊர்வலமும் கூட்டமும் நடத்தினர். ‘தீபாவளிப் பண்டிகை திராவிடர் பண்டிகையா’?’ என்னும் தலைப்பில் எம்.எஸ். இராமசாமி பேசினார். இவ்வுரையை அவர் ’நரகாசுரப் படுகொலை’ என்னும் நூலாக்கினார். நாடார்குல மித்திரன் பிரஸில் 1947இல் பதிப்பிக்கப்பட்ட இந்நூலை அருப்புக்கோட்டை திராவிடர் கழகத் தலைவர் சிவ.சண்முகசுந்தரன் வெளியிட்டார். இந்நூலில், ‘‘நரகாசுரன் என்பதாக ஒருவன் இருந்தானா, இல்லையா என்பதும் நரகாசுரன் வதை சம்பந்தமான கதை பொய்யோ, மெய்யோ என்பதும், பற்றி நான் கவலை எடுத்துக்கொள்ளவில்லை’ என ஈ.வெ.ரா. முகவுரை எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட கற்பனைகளைச் செய்து ஆரியர்களுக்கு நன்மையும், திராவிடர்களுக்கும் தீமையும் விளைவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தண்டலும், கொண்டாட்டமும்!
விஸ்வகர்ம சமூகத்தினர் அவர்களின் சமூக முன்னேற்றத்துக்காகத் தீபாவளியைக் கொண்டாடினர். தங்களுக்குள் ‘தீபாவளித் தண்டல்’ வசூலித்தனர். இப்பணம் குறைவாக வசூலிக்கப்பட்டதாகவும், வருங்காலத்தில் கூடுதலாக வசூலித்து சமூகத்துக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் ‘விஸ்வகர்மன்’ 1914, 1915ஆம் ஆண்டு இதழ்களில் எழுதப்பட்டிருக்கிறது. ‘கலைமகள்’ 1934 அக்டோபர் இதழில், ‘தீபாவளி மத்தாப்பூப் பெட்டி’ என்னும் கட்டுரையில், குழந்தைகள் பட்டாசுகள் கொளுத்தியதைப் பற்றி எஸ்.ஜெகநாதன் கூறுகிறார். ‘குழந்தைகளே! நீங்கள் ஒவ்வொரு வருஷத்திலும் தீபாவளி தினம் மத்தாப்பூப் பெட்டிகள் வாங்குகிறீர்கள். காசு கொடுத்துப் பெட்டிகள் வாங்கி, நெருப்பில் கொளுத்தி எரியவிட்டு சந்தோஷப்படுகிறீர்கள்’ எனக் கூறியுள்ள அவர், காலியான மத்தாப்பூப் பெட்டிகளால் அலமாரிகள், பீரோக்கள் போன்ற விளையாட்டுப் பொருட்கள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
‘வசந்தம்’ 1943 அக்டோபர் இதழில் ‘தீபாவளி மயம்’ கட்டுரையில் மத்தாப்புக்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கே.வி.ராகவன் குறிப்பிட்டார். அத்துடன் ‘உலகப் போரால் பொருளாதார நெருக்கடியும் விலைஉயர்வும் தாண்டவமாடுவதால். இந்தத் தீபாவளி எப்படி நல்ல தீபாவளியாக இருக்க முடியும்? இந்தக் கொடிய யுத்தம் ஒழிய வேண்டும். அதற்காக இதைவிடப் பெரியதொரு தீபாவளியை நாம் கொண்டாட வேண்டும்’ என்றார்.
சுதந்திர தீபாவளி
உலகப் போர்கள் முடிவுற்றன. அதன் பின்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நரகாசுரனும் வீழ்த்தப்பட்டான். சுதந்திர இந்தியாவின் முதல் தீபாவளி குதூகலமானது. ‘சுதந்திர தீபாவளி’ எனத் தலைப்பிட்டு, ஆடை விற்பனை நிறுவனங்கள் விளம்பரங்கள் வெளியிட்டன. ‘மலிந்த விலையில் 2,000 டிசைன்களில் பட்டாடைகள், 4,000 டிசைன்களில் நூல் ஆடைகள் தீபாவளிக்காகப் புதிய டிசைன்களில் உயர்தரப் பட்டாலும், நூல்களாலும் உத்தரவாதமான கெட்டிச் சாயம் போட்டு, ஸ்பெஷலாகத் தயாராகியுள்ளன. பெங்களூர், பெனாரஸ், பெங்கால். கொள்ளேகாலம், ஆரணி, காஞ்சிபுரம், பட்டுச் சேலைகள் அற்புதமான பார்டர்கள், வசீகரமான முந்திகளுடன் 5, 6, 7, 8, 9, 10 கெழுங்களில் திறமையான நெசவாளர்களால் நிபுணர்களின் மேற்பார்வையில் உயர்தரமாக நெய்யப்பட்டு வந்து குவிந்துள்ளன’ என சிதம்பரம் கஸ்தூரிபாய் கம்பெனி விளம்பரம் செய்தது.
‘குதூகலச் செய்தி, தீபாவளி மங்கள தினத்தன்று மலர் எங்கும் கிடைக்கும். இப்பொழுதே உங்கள் பிரதிக்கு ரிஜிஸ்தர் செய்து கொள்ளுங்கள்’ என ‘வெள்ளிமணி’ இதழ் தீபாவளி மலருக்கு 1947 அக்டோபர் 03 அன்று விளம்பரம் செய்தது. ‘ஆனந்தபோதினி’ குறிப்பிட்ட நரகாசுரன்கள் இக்காலங்களிலும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள்தான் என்றாலும், இன்றும் தீபாவளி ஆர்ப்பரிக்கிறது.
நன்றி: ‘இந்து தமிழ் திசை’, 20.10.2025
