திருச்சி, அக்.19- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் “பண்டி கைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும்” என்ற தலைப்பிலான மூடநம்பிக்கை ஒழிப்பு சிறப்புக்கருத்தரங்கம் 17.10.2025 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வரவேற்புரையாற்றினார். அவர் தமது உரையில் நோய்களை போக்கும் மருந்துகளை தயாரிக்கக்கூடிய மருந்தாளுநர்களாக மட்டும் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் இல்லாமல் சமுதாயத்தின் கொள்ளை நோயாக இருக்கும் மூடநம்பிக்கைகளை போக்கும் சமூக மருந்தாளுநர்களாக திகழ வேண்டும் என்று உரையாற்றினார். மேலும் நமது நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மருத்துவப் பயனாளிகள் என அழைக்க வேண்டும் என்று மனிதநேயத்துடன் சிந்தித்து, விடுதலை நாளிதழில் அறிக்கையாக வெளியிட்டதனை நம்முடைய தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டிருக்கின்றது. அத்தகைய சிறப்பிற்குரிய தலைவரின் தலைமையில் பயணிக்கும் நாம் ஒவ்வொருவரும் பகுத்தறிவான சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என்று உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளருமான முனைவர் க. அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். அவர் தமது உரையில் தலைமுறைக்கு தலைமுறை மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பல தலைமுறைகளுக்கு கிடைக்காத கல்வி வாய்ப்பு இத்தலைமுறைகளுக்கு கிடைத்திருக்கின்றது. உடையில் மாற்றம், உணவில் மாற்றம், நாகரிகத்தில் மாற்றம் என காலத்திற்கேற்ப அனைத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் புராணக் கதைகளையும் கற்பனைக்கு எட்டாத ஆபாச புரட்டுக்களையும் பின்புலமாக கொண்ட பல பண்டிகைகளை படித்தவர்களே கொண்டாடக்கூடிய அவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தீபாவளி கொண்டாடு வதன் காரணத்தை பலரும் அறிந்திருப்பர். எதற்கும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் கேட்டு சிந்திக்கச் சொன்னவர்தான் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள். திராவிட தமிழினத்தின் முன்னேற்றத்திற்கும் பகுத்தறிவிற்கும் ஒத்துவராத ஆபாசங்கள் நிறைந்த ஒரு பண்டிகைதான் தீபாவளி என்றும் இதன் பொருட்டு பணத்தை விரயமாக்கும் நேரத்தை வீணடிக்கும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஒரு பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது என்றால் அது தீபாவளிதான் என்பதனை எடுத்துரைத்து நலவாழ்வுத்துறையில் இருக்கக்கூடிய மருந்தாளுநர்கள் தீபாவளி அன்று கரும்புகையால் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்தும் சுற்றுப்புற சூழல் சீர்கேடு அடைவது குறித்தும் எடுத்துரைப்பது ஒவ்வொரு மருந்தாளுநரின் கடமை என்றும் உரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, திராவிட மாணவர் கழக செயலாளர் செல்வன் ரா. வெங்கடேஷ் மற்றும் அமைப்பாளர் மாணவி வி. ஜாக்லின், ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மன்றச் செயலர் அ.ஷமீம் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.