தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை
அரசு ஏற்றுக்கொண்ட நாள் (19.10.1978)
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த தந்தை பெரியார், அந்தச் சீர்திருத்தத்தை ‘குடிஅரசு’ 20.1.1935 இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: ‘தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாகும்.
1941 சனவரி 18, 19 நாட்களில் மதுரையில் நடைபெற்ற “தமிழ் இலக்கிய மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1978-1979 இல் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாகப் பெரியார் 1935 முதல் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் அய், அவ் தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக அரசு 19.10.1978 அன்று ஏற்று அரசாணை வெளியிட்டது.
1983 இல் சிங்கப்பூர் அரசு இச்சீர்திருத்தத்தை ஏற்றது. 1984 தைத் திங்கள் முதல் செயற்படுத்தியது.
காலந்தோறும் தமிழ் எழுத்துகள், பயன்படுத்தப்படும் ஊடகத்திற்கேற்ப மாற்றம் பெற்றே வந்திருக்கிறது. பானை ஓடுகளில் பதிக்கப்பட்டபோது, பாறைகளில் செதுக்கப்பட்டபோது, பனை ஓலைகளில் எழுதப்பட்டபோது ஒவ்வொரு காலத்திலும் மாற்றம் பெற்றே வந்திருக்கிறது. அச்சுக்கு வந்தபோது அதற்குரிய மாற்றத்தைச் சந்தித்தது. அதை மேம்படுத்த வேண்டும் என்று தந்தை பெரியார் முயன்றார். கடந்த நூற்றாண்டிலும் பெரியார் தொண்டர்களும், நண்பர்களுமான சிங்கப்பூர் அ.சி. சுப்பையா, பா.வே. மாணிக்க நாயக்கர், ‘குமரன்’ ஆசிரியர் முருகப்பா உள்ளிட்ட பலரும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். தந்தை பெரியார் குடிஅரசு ஏட்டில் துணிச்சலாக அதை நடைமுறைப்படுத்தி, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் அவசியத்தை எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் கொண்டு சேர்த்தார். அவரின் வாதங்களுக்குப் பழமை விரும்பிகளாக இருந்த சில பண்டிதர்களால் பதில் சொல்ல இயலவில்லை.
