பெரியார் உலகத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ.1,70,20,000 நிதிக்கான காசோலையை தமிழர் தலைவரிடம் நேரில் வழங்கினார் முதலமைச்சர்!
சென்னை, அக்.18 பெரியார் உலகத்திற்கு தி.மு.க. சார்பில், ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் வழங்கினார்.
2025, அக்டோபர் 4 ஆம் தேதி செங்கல்பட்டையடுத்த மறைமலைநகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, நாள் முழுவதும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்றது.
மாநாட்டிற்கு வருகை தந்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பெரியார் சமூகக் காப்பணி மரியாதையை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அம்மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் (நான்), அமைச்சர் பெருமக்கள், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை, திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் ‘‘பெரியார் உலகத்திற்கு’’ ரூ.ஒரு கோடியே 50 லட்சம் அளிக்கப்படும் என்று கடல் அலைகள் ஆர்ப்பரித்ததுபோல், எழுந்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கருஞ்சட்டை இளை ஞரணியின் எழுச்சியைக் கண்டு, கருப்புச் சட்டைக்கு ‘சல்யூட்’ என்று கூறி,‘சல்யூட்’ அடித்தது – வரலாற்றில் மறக்கப்படவே முடியாத மாநாட்டு நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.
மாநாட்டில் அறிவித்தபடி நன்கொடை நிதியை வழங்கிட, தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை பெரியார் திடலுக்கு இன்று (18.10.2025) காலை 10.30 மணியளவில் வருகை தந்தார்.
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன், தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடன் வந்தனர்.
திராவிடர் கழகத் தலைவருக்கு முதலமைச்சர் முந்திக்கொண்டு பொன்னாடை அணிவித்தார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதலமைச்சர் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தியும், இயக்க நூல்களை வழங்கியும் சிறப்பித்தார்.
முதலமைச்சர் கழகத் தலைவரிடம், கழக மாநாட்டில் அறிவித்ததைவிட கூடுதலாக ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கரவொலிக்கிடையே வழங்கினார்.
நன்றியுடன் பெற்றுக்கொண்டார் திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவ னத்தின் செயலாளருமான கி.வீரமணி அவர்கள்.
நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் துணைத் தலைவர்
கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதலமைச்சருடன் வருகை தந்த பெருமக்களுக்கு இயக்க நூல்கள் வழங்கிச் சிறப்புச் செய்யப்பட்டது.