அக்டோபர் 17 மறக்க முடியாத நாள்!

ஆம் 2025 அக்டோபர் 17ஆம் நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல; ஹிந்து மதம் பரவியிருக்கும் அனைத்து நாடுகளுக்குமே சிந்திக்க வைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று வைர நாளாகும்.

2025 அக்டோபர் 4ஆம் நாள் செங்கற்பட்டையடுத்த மறைமலை நகரில், திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு  வெகு நேர்த்தியுடன் நடைபெற்றது. கரு மேகங்கள் கைகோர்த்துக் கொண்டு கடுமழையைக் கொட்டும் என்ற ஓர் அச்சம் இருந்த அந்த நாளில், கருமேகங்களுக்குப் பதிலாக கருப்புச் சட்டை வெள்ளம் கரை புராண்டிருந்தது கண் கொள்ளாக் காட்சி ஆகும்.

‘‘திராவிடர் கழகத்தில் இவ்வளவு இளைஞர் பட்டாளமா’’ என்று திகைத்தவர்கள் உண்டு. நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க. ஸ்டாலின் நமது தாய்க் கழகம் இளைஞர் பாசறையாக  இருப்பதைக் கண்டு உள்ளம் பூரித்து, கம்பீரமாக ‘‘கருப்புச் சட்டைக்கு எனது சல்யூட்!’’ என்றாரே – ஆம் அந்தத் தருணம் 93ஆம் வயதைத் தொடர இருக்கும் தலைவர் முதல் கடல் கடந்த சுயமரியாதைக்காரர்களுக்கும் மிகப் பெரிய விவரிக்க முடியாத உற்சாகத்தை ஊட்டியது; கால்கள் மண்ணில் பாவிக்கவில்லை – விண்ணுக்கே சென்றன!

தந்தை பெரியாருக்குப் பின் இயக்கம் இருக்குமா என்று எண்ணியிருந்தவர்கள் மத்தியிலும் ஒரு மின்சாரத் தாக்குதலைக் கொடுத்தது.

மாநாட்டில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு பல தீர்மானங்கள் நிறைேவற்றப்பட்டன. ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும்தானே சுயமரியாதை இயக்கத்தின் – அதன் மறுவடிவமான திராவிடர் கழகத்தின் உயிர்க் ெகாள்கைகள்!

19ஆம் தீர்மானம் கூறுவது என்ன?

‘‘ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த சட்டம் அவசியம் தேவை!’’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மறைமலைநகர் மாநாட்டு மேடையிலும், முற்பகல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பட்டியலை  முதலமைச்சரிடம் வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி வீரமணி அவர்கள்.

ஒன்று விடாமல் அத்தனைத் தீர்மானங்களையும் கவனமாகப் படித்தார் நமது முதலமைச்சர். திராவிடர் கழகமும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அறிஞர் அண்ணா கூறினாரே – அந்த உணர்வின் அடிப்படையில் திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முதலமைச்சரிடம் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியம் ஏதுமில்லை!

அதன் பிரதிபலிப்பு தான் நேற்று (17.10.2025) சட்டப் பேரவையில் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பு!

மறைமலைநகர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எடுத்துக்காட்டி ‘ஜாதி ஆணவக் கொலையை ஒழிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படும்’ என்று அறிவித்தார்.

முறையாக – நேர்த்தியான ஜனநாயக முறையில் அந்த சட்டம் அமைய வேண்டும் என்ற பொறுப்புமிகு சிந்தனையின் அடிப்படையில் திராவிட மாடல் அரசின் கொள்கை உணர்வோடு, ‘ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் கூறும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும்’ என்று முதலமைச்சர் அறிவித்தார். (17.10.2025).

இந்தியத் துணைக் கண்டத்திலேயே இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கிடையாது. எதிலும் முதல் இடத்தில் முன் மாதிரியாகச் செயல்படும் முதலமைச்சர் அல்லவா – நமது மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்.

1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பிற்காலத்தில் வந்த ஆட்சிகளால் சட்டங்களாக நிறைவேற்றப்படவில்லையா?

பெண்ணுக்குச் சொத்துரிமைச் சட்டம், ஆசிரியர் பணியிலும், இராணுவம், காவல்துறையிலும் பெண்களுக்கு இடம் அளிக்கப்பட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் இன்றைக்கு 96 ஆண்டுகளுக்குமுன் செங்கற்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன; அவை எல்லாம் சட்ட வடிவம் கொடுக்கப்பட்டு, இன்று செயல்பாட்டில் இல்லையா?

தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை கோரும் தீர்மானம் செங்கற்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்குப்பின் மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அதற்குரிய சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார்.

ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியில் 2005ஆம் ஆண்டு இத்தகைய சட்டம் நிறைவேற்றப்பட்டது. (Succession Amendment Act. – 2005 – Dated 9.9.2005)

ஆனால் செங்கற்பட்டு மறைமலை நகரில் திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் (4.10.2025) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான உத்தரவாதம் பதின்மூன்றே நாட்களில் கிடைத்திருப்பது இதற்கொரு தனித் தன்மையாகும்.

இந்த அரிய அறிவிப்பின் மூலம் செங்கற்பட்டு மறைமலை மாநாட்டுக்கும் சரி, ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சருக் கும் சரி வரலாற்றில் மிக முக்கியமான முத்திரை உறுதியாகப் பொறிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், முதலமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பைப் பாராட்டி வரவேற்று, நேற்றையதினமே ‘டபுள் சல்யூட்’’ அடித்து அறிக்கை வெளி யிட்டுள்ளார்.

ஓர் ஆட்சியின் மற்ற செயல்பாடுகள் என்பவை வழக்கமாக எல்லா ஆட்சிகளும் செய்யக் கூடியவைதான். ஆனால் சமுதாய மாற்றத்திற்கான இத்தகைய சட்டங்களை எல்லா ஆட்சிகளிலும் எதிர்பார்க்க முடியாது; காரணம் மற்ற ஆட்சிகளுக்கு தி.மு.க.வுக் குக் கிடைத்துள்ள அடிப்படைக் கோட்பாடுகள் என்ற பலம் கிடையாது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், பெண்ணுரிமைச் சட்டங்கள் போன்றவை காலத்தால் நிலைத்து நின்று கை கூப்பி நன்றி உணர்வுடன் வரவேற்கப்படக் கூடியவை!

இதுதான் திராவிடத்தின் தனித் தன்மை!

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *