புதுடில்லி, மே 19 லண்டனை தலைமையிடமாகக் கொண்ட நைட் பிராங்க் நிறுவனம், உலகளாவிய பெரும் பணக்காரர்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8.2 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 7,97,714 ஆக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 17 லட்சமாக உயரும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. 30 மில்லியன் டாலருக்கு (ரூ.25 கோடி) மேல் சொத்து மதிப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கை 12,069 ஆக உள்ளது. 2027-ல் இது 19,119 ஆக உயரும். அதேபோல், 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) சொத்து மதிப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கை தற்போது 161 ஆக உள்ளது.
இது அடுத்த 5 ஆண்டுகளில் 195 ஆக உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைட் பிராங்க் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சிசிர்பைஜால் கூறுகையில், “ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் இந்தியா உலக அளவில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்” என்றார்.