தஞ்சாவூர் அக்.18- பொள்ளாச்சியைச் சேர்ந்த தம்பதியினர் ஒரு காரில் தங்களுடைய 60ஆம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று கொண்டிருந்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60) அவரது மனைவி கலாவதி(59) உள்ளிட்ட 5 பேர் நேற்று (17.10.2025) அதிகாலை ஒரு காரில் தங்களுடைய 60ஆம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று கொண்டிருந்தனர். தஞ்சாவூர் மாவட் டம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை அருகே இவர்களுடைய கார் சென்றபோது எதிரே வந்த லாரியோடு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுப்பிரமணியன், கலாவதி தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கார் ஓட்டுநர் உள்பட 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
சென்னை, அக்.18- தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த அக்.14ஆம் தேதி தொடங்கி முதல்நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு, கரூர் சம்பவத்தில் இறந்த 41 பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்தி
வைக்கப்பட்டது. அக்.15ஆம் தேதி இந்த நிதியாண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 17.10.2025 அன்று பேரவை மீண்டும் கூடும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைப்பதற்கான தீர்மானத்தை, அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பேரவை மீண்டும் கூடும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.