கேள்வி 1: சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டுவந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே படிப்பறிவுமிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று ‘தி வீக்’ ஆங்கில ஏட்டின் இணைய இதழ் தமிழ்நாடு அரசை பாராட்டியுள்ளது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
– இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.
பதில்: தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் சரியாகச் செய்யவேண்டிய, செய்யத்தவறிய ஒரு முக்கியப்பணியை, கேரளத்திலிருந்து வரும் ‘தி வீக்’ ஆங்கில வார ஏடு செய்திருக்கிறது – பாராட்டுக்குரிய ஒன்று!
கேள்வி 2. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீன தத்துவ மேதை லாவோ சூ முன்வைத்த தத்துவமான ‘மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்கள் அறிந்தவற்றில் இருந்து தொடங்கு, அவர்களிடம் உள்ளவற்றைக் கொண்டு கட்டமை’ எனும் கூற்றுக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு எத்தகையது?
– பா. செல்வம், கலைஞர் நகர்.
பதில்: அறிஞர் அண்ணா பல ஆண்டுகளுக்கு முன் தனது இயக்கப் பொறுப்பாளர்களுக்கு விடுத்த அன்புக்கட்டளை என்ற முறையில் முதலமைச்சர் தனது வாழ்நாள் தொண்டை அமைத்து செயல்பட்டு வருகிறார்.
சீனப்பேரறிஞர் லாவோ சூ 2500 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார் என்ற தகவலுக்கு நன்றி!
கேள்வி 3. தமிழ்நாட்டில் உள்ள ஒருசில ஊர்களின் பெயர்கள் மற்றும் தெருக்களின் பெயர்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜாதியின் பெயரை நீக்குவதற்கு ‘திராவிட மாடல்’ அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒருசில அரசியல் கட்சிகள் முட்டுக்கட்டையாக இருப்பது ஏன்?
– எஸ். சின்னப்பொண்ணு, சின்ன சேலம்.
பதில்: சிலர் குழப்பவாதிகள், சிலர் குதர்க்க வாதிகள். ஜாதி ஒழிப்புப் பணி பற்றி இப்படிப் பேசி, தமிழ்நாட்டின் சமூகப் புரட்சியை திசை திருப்பி விட முயலும் இந்த ‘அறிவு ஜீவி’கள் ஜாதி ஒழிப்பில், குறிப்பாக ஆதி திராவிடர் உள்பட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற எல்.இளையபெருமாள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை நிறைவேற்றப்படுவதற்கு செய்தது என்ன? தீண்டாமை, ஜாதி ஒழிப்புக்கு எத்தனை போராட்டம் நடத்தியுள்ளார்கள்? ஜாதி காக்கும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பெரியார் பெருந்தொண்டர்கள் எதிர்த்து எரித்த போது ஏதாவது ஒரு களத்தில், எந்த ஓர் ஊரிலாவது அறவழி ஆதரவையாவதுத் தந்துள்ளார்களா?
‘டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்ப்பதா?’ என்று திசை திருப்பியவர்கள் தானே இவர்கள். கொள்கை எதிரிகள் சொல்வது புரிகிறது, சில ‘நண்பர்கள்’ இப்படி குறுக்குச்சால் கோவை ‘ஜி.டி.நாயுடு பாலம்’ மூலம் செய்வது வேதனைக்குரியது.
கேள்வி 4. ஹமாஸ் பிடியில் இருந்த பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது, இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ள போர் நிறுத்தம் இவற்றால் என்ன விளைவுகளை எதிர்பார்க்கலாம்?
– ஆர். பெரியசாமி, பெரியபாளையம்.
பதில்: இது முதல் கட்ட வெற்றி! இறுதிக் கட்டமான போரற்ற புது உலகம் பூத்த மானுட நேயத்தை மன்பதையில் பதிக்கச் செய்வது தொடரலாம்.
அதற்குக் காரணமான அனைத்துத் தரப்பினருக்கும் உலகின் நன்றி என்றும்.
கேள்வி 5. ‘உலகம் பெரியார் மயம், பெரியார் உலக மயம்’ எனும் உயரிய லட்சிய வேட்கையை முன்னெடுத்துச் செல்ல சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா (04.10.2025) மாநாடு எவ்வகையில் உந்துசக்தியாக அமையும்?
– ச. இன்பதுரை, இரும்பேடு.
பதில்: எல்லா வகையிலும் உந்து சக்தியாவதைப் போகப்போகப் புரிந்து ெகாள்ளலாம்.
கேள்வி 6. மூங்கில் இருக்கைகள், அலங்கார வளைவுகளுடன் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான ‘கோவா’ போன்று சென்னை மெரினாக் கடற்கரைத் திகழ்வது தமிழ்நாட்டு மக்களை மட்டுமன்றி, அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. அக்கடற்கரைக்கு தாங்கள் சென்று வந்தீர்களா?
– ம. மனோகரன், திருவல்லிக்கேணி.
பதில்: அதே சாலையில் அன்றாடம் பயணித்திருக்கிறேன். உள்ளே சென்று நீங்கள் குறிப்பிட்டவற்றை இதுவரைப் பார்க்காமல் ஓடிக்கொண்டே உள்ளேன். உங்கள் விருப்பத்தையும் நிறைவேற்றி மகிழ்வேன்.
கேள்வி 7. கரூரில் 41 பேர் பலியான வழக்கை சி.பி.அய். விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஏற்புடையதா?
– கு. கணேஷ், கடப்பாக்கம்.
பதில்: சட்டமுறையின் படி அலசி ஆராய்ந்தால் ஏற்புடையதல்ல. இடைக்காலத் தீர்ப்பில் – இறுதித்தீர்ப்பினை எழுதி விடலாமா? தவறுதானே!
கேள்வி 8. சுதந்திரத்தின் அடித்தளமான கல்வி, ஒரு சிலரின் சிறப்புரிமை ஆகக்கூடாது என்றும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும், சிந்தனையை ஊக்குவிக்கும், நாட்டின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் கல்விமுறை இந்தியாவுக்குத் தேவை என்றும் ராகுல் காந்தி கூறியிருப்பது படி- அத்தகைய சிறந்த கல்வி இதுவரையில் இந்தியாவில் இல்லாமல்போனது ஏன்?
– க. மோகன்காந்தி, செய்யாறு.
பதில்: அரசியலமைப்புச் சட்டப்படி மதச்சார்பற்ற ஆட்சி நடக்காமல் மனுதர்ம ஆட்சியே (கட்சிகளின் ஆட்சி மாறினாலும்) நடந்ததே – நடப்பதே முக்கிய காரணம்.
கேள்வி 9. 100 சதவீத வரி விதித்துள்ள டிரம்பின் மிரட்டலுக்கு பணியமாட்டோம், என்றும் உரிய பதிலடி கொடுப்போம் என்றும் சீனா கூறியிருப்பதைத் தொடர்ந்து வரி விதிப்பில் அமெரிக்க அதிபர் மாற்றம் கொண்டுவருவாரா?
– அ. அப்துல் அகத், அய்தராபாத்.
பதில்: மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது, புத்தர், காரல்மார்க்ஸ், தந்தை பெரியார் போன்றவர்களின் அறிவுரையாகும்.
கேள்வி 10. காசைக் கரியாக்கும் தீபாவளி எனும் மூடப்பண்டிகையை மக்கள் கொண்டாட ஏதுவாக, ஒன்றிய – மாநில அரசுகள் தீபாவளி போனஸ் தருவதும், விடுமுறை விடுவதும் மூடநம்பிக்கையை அரசே ஊக்குவிக்கும் செயல் ஆகாதா?
– ந. நல்லத்தம்பி, நன்னிலம்.
பதில்: ஆம், என்றாலும் ஓட்டு அரசியல் என்பதால் இந்நிலை. மூடநம்பிக்கையை ஒழிக்க ஒரு பெரும் பிரச்சார ‘சுனாமியே’! இதற்கான ஒரே வழி! நம்பங்கை நாம் நடத்தியே வருகிறோம்.