மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
இ |
ப்படி பல வகைகளிலும் கொடுமைக்குள்ளான அடிமைகள், தப்பி ஒடிவிடலாம் என்று நினைத்து, அதை செயல்படுத்த முயன்றால் அதற்கு வாய்ப்பே இல்லை. தப்பித்தவறி தப்பித்தாலும் அவர் எங்கே போவார்? அடுத்த ஜென்மியிடம்தான், அவருடைய நிலத்திற்குதான் செல்ல வேண்டும். ஏனென்றால் எந்த அடிமைக்கும் சொந்தமாக ஓர் அடி நிலம் கூடக் கிடையாது. அவர்களின் ‘மாடம்” (இருப்பிடம்) கூட அவர் முதலாளியுைடயது. ஜென்மிகள் திட்டமிட்டே அடிமைகளின் குடும்பம் ஒன்றாக இருக்கமுடியாதபடி பார்த்துக் கொண்டார்கள். கணவன் ஓரிடம், மனைவி ஓரிடம், குழந்தை ஓரிடம் என்று அடிமைகளாக இருக்கும் நிலையில் ஆண் மட்டும் தப்பித்து ஓடினால், குடும்பத்தினர் நிலை என்ன? அது மட்டுமல்லாமல், தப்பி ஓடிய அடிமையின் ஜென்மி, அவர்களின் குடும்பம் அடிமைகளாக இருக்கும் ஜென்மியிடம் அந்தத் தகவலை சொல்லிவிடுவார். அதன் காரணமாக அவருடய குடும்பத்தினரும் தண்டனைக்குள்ளாவார்கள். தப்பி ஓடிய அடிமை பிடிபட்டால் மிகவும் கடுமையான தண்டனைக்கு ஆளாவார். இதுபோன்ற பல சிக்கல்கள் அடிமைகளுக்கு இருந்ததால் ஒருவர் கூட தப்பிக்கும் எண்ணம் இல்லாமல் அடிமையாக ஒரே ஜென்மியிடமே இருக்க வேண்டிய சூழ்நிலையே அந்த நாட்டில் இருந்தது. இருப்பிடம் இன்றி, உடுக்கும் உடை (மானத்தை காக்க ஒேர ஓர் இடுப்புத் துண்டுதான் ஆடை) இன்றி, உண்ண உணவு இன்றி (செய்யும் வேலைக்கு கப்பக்கிழங்கும், கருவாடும் தினசரி உணவு, வேலை இல்லாத நாளைக்கு அதுவும் கிடையாது. காடுகளில் உள்ள கிழங்குகள், நத்தைகள் போன்றவையேதான்
அவர்கள் உணவு), கொத்தடிமைகளாக உழைத்து தரிசு நிலங்களான ஜென்மிகளின் நிலங்களை சீராக்கி, செழிப்பாக்கும் வேலைகள்தான் இவர்களின் கடமை என்றாகிப் போனது.
கடுமையான வேலை, தேவைக்கான உணவு என்று இல்லாமல் போனதால் இளம் வயதிலேயே பலர் இறந்தனர். ஆனால் இவர்களின் கடின உழைப்பால்தான் செழிப்பும், வளமும் உள்ள நாடாக திருவாங்கூர் நாடு மாறியது. தங்கள் உழைப்பும், முயற்சியும் கொடுத்து அந்த நாட்டையே மாற்றினர் அந்த அடிமைகள். இந்த அடிமைகளுக்கு உதவவோ, ஆறுதல் கூறவோ யாருமே இல்லை. நாட்டையே பத்மநாபசாமிக்கு உரிமையாக்கிய நிலையில், அந்த பத்மநாபசாமியும் அவர்களை காப்பாற்ற வரவில்லை. நாட்டை கொடுத்த மன்னரும் உதவிக்கு வரவில்லை.
கடவுள் முதல் மன்னர் வரை கைவிட்ட நிலையில், முதன் முதலாக இவர்களின் பரிதாபமான நிலையை வெளி உலகுக்குக் கொண்டு வந்தவர் ரெவரன்ட் ஆப்ஸ் என்ற பாதிரியார்தான். கி.பி 1842ஆம் ஆண்டு இவர் இது பற்றிய செய்திகளை வெளியிட்டார். அதோடு நில்லாமல் மெட்ராஸ் பிரசிடென்சி கவர்னருக்கும் கடிதங்கள் எழுதினார். (திருவாங்கூர் நாடு, ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டும் அவர்கள் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டு இருந்த நாடு) ஆங்கிலேய அரசாங்கம் அதைப்பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டது. ஏற்ெகனவே அடிமைகள் அரசுக்கு தாங்கள் படும்பாட்டை அரசாங்கத்திற்கு மனுவாக அனுப்பியிருந்ததும், ெரவரன்ட் ஆப்ஸ் வெளியிட்ட செய்திகளுமே ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆய்வுக்கு அடித்தளமாய் அமைந்தன. திருவாங்கூரில் அடிமைகள் மேல் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை அரசாங்கத்தின் ஆய்வு உறுதி செய்தது. ஆங்கிலேய அரசாங்கம் கி.பி.1843 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. ஆங்கிலேய அரசின் கீழ்தான் திருவாங்கூர் நாடு இருந்தது. ஆனாலும் அந்த சட்டத்திற்கு திருவாங்கூர் அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இந்த இழுபறி 1847 ஆம் ஆண்டு வரை நீடித்துக் கொண்டே இருந்தது. 1847ஆம் ஆண்டு உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மன்னராகப் பதவி ஏற்றார். ஆங்கிலேய அரசு, அடிமை முறையை ஒழிக்கச் சொல்லி மெட்ராஸிலிருந்து கடிதம் எழுதியது. திருவாங்கூர் அரசவையில் இந்தக் கடிதம் பெரும் வாக்குவாதத்தை உருவாக்கியது. அரசவையின் அனைத்து பொறுப்புகளிலும் நம்பூதிரிகளும், நாயர்களுமே இருந்ததால் இந்த உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்று ஒரே குரலில் எதிர்ப்பைக் காட்டினர். அதனால் அரசால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை, அதனால் ஆங்கில அரசுக்கு மன்னரின் சார்பில், திவான் ரெட்டிராவ் (பார்ப்பனர்) ‘‘உடனடியாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது, என மகாராஜா கருதுவதாகவும், எதிர் காலத்தில் இதைப் பற்றிப் பரிசீலிக்கலாம்’’ என்று பதில் எழுதினார்.
26.2.1847இல் பதவியேற்ற மன்னர் உத்திரத் திருநாள் மார்த்தாண்ட வர்மர் முற்போக்கான கொள்கைகளை கொண்டவர். மக்கள் நலனில் அக்கறைக் கொண்டவர். அவர் பதவியேற்ற அடுத்த மாதமே மிஷனரி சங்கங்கள் அடிமை முறைமை ஒழிக்க வேண்டும் என்று ஒரு மனுவை தயாரித்து ஆங்கிலேய பிரதிநிதிக்கு அனுப்பினர். அவர் அதை மன்னருக்கு அனுப்பி வைத்தார். அந்த மனுவில், மீட், மால்ட், பேக்கர், பெய்லி தாம்சன், ரசல், காக்ஸ், ஆப்ஸ், லூயிஸ், ஒயிட் ஹவுஸ் ஆகிய மிஷனரியின் ஆங்கிலப் பொறுப்பாளர்கள் கையொப்ப
மிட்டிருந்தனர்.
திருவாங்கூர் அரசர் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மர் மக்களை நேசிப்பவர் என்பதாலும், அடிமை முறையை ஒழிப்பதன் மூலம், ஒடுக்கப்பட்டவர்களின் “ரட்சகர்” என்று அவர் போற்றப்படுவார் என்றும் எழுதியிருந்தனர். அடிமை முறையை ஒழிப்பதால் அவர்களின் பின் வரும் சந்ததியினர் அவரை பெருமைக்குரிய இடத்தில் வைத்து வணங்குவார்கள் என்றும் அவர்கள் எழுதியிருந்தனர். ஆனால் அந்த மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
1848இல் மீண்டும் மிஷனரி செயல்பாட்டாளர்கள் மனு செய்தனர். அதே ஆண்டு ஆங்கிலேய பிரதிநிதி கல்லன் அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அரசருக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால் மேல்ஜாதியினர் கடுமையான எதிர்ப்பால் மன்னர் ‘‘இரு தலைக் கொள்ளி’’ யாகத் தடுமாறினார். ஆனால் ஆங்கிலேய அரசோ இந்தப் பிரச்சினையை விடுவதாக இல்லை. 1849 மார்ச் மாதம் கல்லன், திருவாங்கூர் திவானுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். அடிமை முறையை உடனடியாக ஒழிக்க முடியாவிட்டாலும், சில வழிமுறைகளையாவது உடனடியாக கடைப்பிடிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்தார். அடிமைத் தகப்பனையோ, தாயையோ, பிள்ளைகளையோ அவர்கள் அனுமதியின்றி பிரிக்கக் கூடாது என்றும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் அவர்களைப் பிரித்து அனுப்பக் கூடாது என்றும், வேலைக்குத் தகுந்த ஊதியம் கொடுக்க வேண்டும் என்றும், வேலையில்லாத நாட்களில் வாழ்வாதாரத்திற்கு பொருள் உதவி செய்ய வேண்டுமென்றும், வேலை செய்ய முடியாதவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் கல்லன் பரிந்துரைத்திருந்தார்.
மன்னர் அதை ஏற்றுக் கொண்டாலும் நம்பூதிரி – நாயர் கூட்டணி அதை ஏற்கவில்லை. கடைசியில் ஆங்கிலேய அரசு, ஒரு மிரட்டல் கடிதம், தன் பிரதிநிதி மூலம் அனுப்பியது. (Ref: சமயத் தொண்டர்களும், சமுதாய மறுமலர்ச்சியும் பக்.118. by, டாக்டர் I.V.பீட்டர், டாக்டர் டி.பீட்டர்)
ஆங்கிலேய அரசாங்கம், தங்கள் ஆணைக்குக் கட்டுப்படாவிட்டால் திருவாங்கூர் நாடு, மெட்ராஸ் பிரசிடென்சியோடு சேர்க்கப்பட்டு விடும் என்று எச்சரிக்கை விட்டது. அந்த எச்சரிக்கைக்குப்பின் திருவாங்கூர் அரசு வழிக்கு வந்தது. 1853 ஆம் ஆண்டு திருவாங்கூர் அரசர் உத்திரம் ஒருநாள் மார்த்தாண்ட வர்மா வரலாற்று சிறப்புமிக்க ஆணையை வெளியிட்டார். அதன்படி 15.9.1853க்குப் பின் பிறந்த அடிமைகளின் குழந்தைகள் சுதந்திர மனிதர்களாகக் கருதப்படுவார்கள். பெற்றோர்கள் அனுமதியின்றி பிள்ளைகள் விற்பதையும், அவர்கள் சட்டத்திற்கு எதிராக விற்றால் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என்றும், இச்சட்டம் கூறியது. அடிமைகளுக்கு சில சலுகைகளையும் இச்சட்டம் வழங்கியது. ஆனால் இச்சட்டத்திற்கு நம்பூதிரி பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதனால் இச்சட்டம் அவர்களை சமாதானப்படுத்தும் விதத்தில் பட்டும், படாமல் இருந்தது. அடிமை முறையை முற்றாக ஒழிக்கும் வகையில் இந்தச் சட்டம் இல்லை. அடிமைகள் மேல் நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் இந்தச் சட்டம் இல்லை. சென்னை ஆங்கில அரசை இச்சட்டம் திருப்திப்படுத்தவில்லை. அடிமைகளுக்கு எந்தவித விடுதலையோ, சம உரிமையோ கொடுக்கவில்லை என்று சென்னை அரசாங்கம் கருதியது. தன் பிரதிநிதி மூலம், திருவாங்கூர் அரசிற்குக் கடுமையான அழுத்தம் மீண்டும் கொடுத்தார்.
வேறு வழியின்றி அரசர் மார்த்தாண்ட வர்மா 1855 அடிமை முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஓர் ஆணையை பிறப்பித்தார். அதன் மூலம் அடிமை முறை ஒழிப்பு திருவாங்கூர் நாட்டில் செயல்பாட்டுக்கு வந்தது. ஏறத்தாழ 1,60,000க்கும் மேற்பட்ட அடிமைகள் விடுதலை அடைந்தனர். எல்லா உரிமைகளும் முதல் முறையாகப் பெற்றனர்.அவர்கள் மேல் விதிக்கப்பட்ட பல கடுமையான வரிகள் நீக்கப்பட்டன. பல நூற்றாண்டுகள் நடந்த கொடுமைகள் நீண்ட போராட்டத்திற்குப் பின் முடிவு -க்கு வந்தது. அடிமைகள் உழைப்பை ஆண்டாண்டாக உறிஞ்சி வாழ்ந்த பார்ப்பனர்களால் இதை செரிக்க முடியவில்லை. பள்ளிக் கூடங்களிலோ, சந்தைகளுக்கோ, பொதுஇடங்களுக்கோ அவர்கள் வந்தால் அவர்களைக் கேவலமாக நடத்துவதோ, இழிவுப்படுத்தப்படுவதோ தொடர்ந்தது. வேண்டுமென்றே பொய்க் குற்றச்சாட்டுகள் அவர்கள் மேல் கூறப்பட்டு, தண்டனை கொடுக்கும் போக்குத் தொடர்ந்தது. மேல்ஜாதியைச் சேர்ந்த நாயர்கள்தான் அரசு அதிகாரிகள். அதனால் அடிமையாக இருந்த மக்களை இழிவாக நடத்தியதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இந்த செய்தி ஆங்கில அரசை அடைந்ததும் அரசு மீண்டும் திருவாங்கூர் மேல் கடுமை காட்டியது.
அதனால் 1858 ஆம் ஆண்டு மீண்டும் ஒருஅரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசாணையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும் என்றும் அதை நிறைவேற்றாத அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்படுவதோடு, கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள் என்று அந்த உத்தரவு கூறியது. அதற்குப் பிறகுதான் பொது இடங்களில் அடிமைகளாக இருந்தவர்களுக்கு நடந்த இழிவு நீங்கியது. நூற்றாண்டுகள் நடந்த கொடுமைகள், ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. (Ref :” திருவாங்கூர் அடிமைகள்” by முனைவர் சா.குமரேசன், சாயத் தொண்டர்களும், சமுதாய மறுமலர்ச்சியும்” by டாக்டர். I.V.பீட்டர், டாக்டர் D.பீட்டர். ta.m. wikipedia.org.)
-தொடருவேன்.