ஜ |
ாதிப்பெயரை ஒழிப் பதில் தமிழ்நாடு அரசு அண்மையில் பிறப்பித்த அரசாணை, நீதிக்கட்சி, தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் நீண்டகாலப் போராட்டத்தின் தொடர்ச்சியாகும். சமூக சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட இவை ஆற்றிய பணிகள் மகத்தானவை.
தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என அண்மையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை நீக்கி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிக்கும் பெயர்களை அகற்றவும் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையானது, தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த ஜாதி ஒழிப்பு சமத்துவச் சிந்தனையின் விளைவு
ஆகும்.
தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பையே தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டார். அவர் தொடங்கிய நூற்றாண்டை கடந்த சுயமரியாதை இயக்கம், பின்னாளில் உருவான திராவிடர் கழகம் ஆகியவை ஜாதி ஒழிப்பில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தன.
பெரியாரின் ஜாதி ஒழிப்பு உத்தி:
பெரியார், மக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பெயர்களைச் சேர்ப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டில் மக்கள் தங்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர், தான் காங்கிரசில் சேருவதற்கு முன்பே 1917 இல் ஈரோடு நகரமன்றத் தலைவராக இருந்தபோது, ‘கொங்குப் பறத்தெரு’ என்பதை ‘திருவள்ளுவர் தெரு’ என்று மாற்றியதன் மூலம், தெருப் பெயர்களில் இருந்த ஜாதிப் பெயர்களை ஒழிக்கும் பணியைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பல இடங்கள் பெயர் மாற்றம் பெற்றன. எடுத்துகாட்டாக மதுரைப் புதூரில் உள்ள ‘காலனி தெரு’ என்பதை ‘திருவள்ளுவர் தெரு’ என்று மாற்றியதைக் கூறலாம்
கடவுள், மதம், சாஸ்திர மறுப்பு: ஜாதி முறைக்கு அடிப்படையாய் இருக்கும் மதம், சாஸ்திரங்கள் மற்றும் கடவுள் நம்பிக்கைகளை எதிர்த்துப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார்.
சடங்குகள், மதகுருமார்கள் இன்றி நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணங்களை அறிமுகப்படுத்தி, ஜாதி மறுப்பு மற்றும் கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை நீக்கக் கோரி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார்.
நீதிக்கட்சி (Justice Party)
1916-இல் பார்ப்பனர் அல்லாதோருக்காகத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து கல்வி, வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை (இட ஒதுக்கீடு) வலியுறுத்திப் போராடியது. இது பார்ப்பனர் அல்லாத சமூகத்தினருக்கு அரசியல் மற்றும் சமூக அதிகாரத்தைப் பெற முதல் அடித்தளமிட்டது.
தமிழ்நாட்டின் சமூக வரலாற்றில் ஜாதி ஒழிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான போராட்டமாகவும், புரட்சிகர இயக்கங்களின் விளைவாகவும் அமைந்துள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றியிருந்தபோது, தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள் ஜாதி முறையை வேரறுத்து, சமூக நீதியை நிலைநாட்டும் முயற்சிகளை முன்னெடுத்தன. இதில் தந்தை பெரியார் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் ஜாதிப்பெயர்களை ஒழிப்பதற்கான புரட்சிகர போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மேலும், தமிழ்நாடு அரசின் சமீபத்திய அரசாணைகள் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே கருதப்படுகின்றன.
‘ஆதி திராவிடர் காலனி’, ‘ஹரிஜன் குடியிருப்பு’, ‘வண்ணான்குளம்’ போன்ற ஜாதிப் பெயர்களைக் கொண்டுள்ள ஊர் மற்றும் குடியிருப்புப் பெயர்களை நீக்க வேண்டும். நீக்கப்பட்ட பெயர்களுக்குப் பதிலாக திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன்,
தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தமிழ் தலைவர்களின் பெயர்களையும், நீர்நிலை
களுக்குப் பூக்கள், மரங்கள் அல்லது இயற்கை அமைப்புகளின் பெயர்களையும் சூட்ட அரசு பரிந்துரைத்துள்ளது.
இந்த மாற்றங்களைச் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ளன.
பொது இடங்களில் ஜாதி அடிப்படை யிலான பிரிவினைகளை நீக்கியது. ரயில் நிலையங்கள், உணவகங்கள், பொது போக்கு வரத்து போன்ற இடங்களில் ‘பார்ப்பனர்களுக்கு மட்டும்’ என்ற பிரிவினைகள் அகற்றப்பட்டன. மேலும், தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்தை 1929இல் நிறைவேற்றியது, இது ஜாதி அடிப்படையிலான பாலியல் சுரண்டலை எதிர்த்தது. கோயில்களில் பிராமணரல்லாதோரை பூசாரிகளாக நியமிக்கும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் ஜாதி மேலாதிக்கத்தை சவால் செய்து, சமூக சமத்துவத்தை நோக்கிய முதல் அடிகளாக அமைந்தன. இருப்பினும், நீதிக்கட்சி பிரிட்டிஷ் ஆட்சியுடன் இணைந்து செயல்பட்டதால், சில விமர்சகர்கள் இதை ‘ஆங்கிலேயர்களின் கைப்பாவை’ என்று விமர்சித்தனர்.
ஜாதிப் பட்டப் பெயர்களைக் கைவிடுதல்
சுயமரியாதை இயக்கம் மக்களின் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பட்டங்களை நீக்குமாறு வலியுறுத்தியது, பலரும் இயக்க மாநாட்டுப் பந்தலிலேயே தங்களது ஜாதிப் பெயர்களைத் துறந்தனர்.
சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு
தந்தை பெரியார் தலைமையிலான ‘சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாடு’ 1929 ஆம் ஆண்டு ‘பிப்ரவரி 17 மற்றும் 18’ ஆகிய தேதிகளில் ‘செங்கல்பட்டில்’ நடைபெற்றது. இந்த மாநாடு தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த மாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களில் ஒன்று, மக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பட்டம்’ அல்லது ஜாதிக் குறியீடுகளை நீக்க வேண்டும் என்பதாகும். ஜாதிய ஒடுக்குமுறையையும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்தத் தீர்மானத்தை இராமச்சந்திர (சேர்வை) என்பவர் முன்மொழிந்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடனே, மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய ஊ.பு.அ.சவுந்தரபாண்டிய (நாடார்) மற்றும் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பலர் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டங்களை மேடையிலேயே நீக்கி அறிவித்தனர். இதற்கு முன்னதாகவே, பெரியார் தனது பத்திரிகையான ‘குடிஅரசு’ ஆசிரியராக இருந்தபோது, தனது பெயருக்குப் பின்னால் இருந்த நாயக்கர் என்ற ஜாதிப் பெயரை நீக்கி, ஈ.வெ.ராமசாமி என்று மட்டுமே குறிப்பிட்டு வந்தார். இந்தச் செயல்பாடு, ஜாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு வலுவான தொடக்கத்தை அளித்ததுடன், பிற்காலத்தில் தமிழ்நாட்டில் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடுவதைக் கைவிடும் ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்டது. இன்றும் சமூகவலைதளங்களில் ஜாதிப்பெயரை போட்டுக்கொள்ளும் துடுக்குக்கார இளசுகள் தங்கள் பள்ளியிலோ அல்லது இதர ஆவணங்களிலோ ஜாதிப்பெயரைப் போட்டுக்கொள்வதில்லை. இதற்கு காரணம் சுயமரியாதை இயக்கம் விதைத்த ஆழமான கொள்கை ஆகும்
திராவிடர் கழகம் (Dravidar Kazhagam – DK):
1944 இல் நீதிக்கட்சியின் பெயரை மாற்றியமைத்து திராவிடர் கழகம் உருவானது. இது பெரியாரின் தலைமையின் கீழ் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை இயக்கமாகத் தொடர்ந்தது. 1952-1954 இல் இராஜாஜி கொண்டு வந்த ‘குலக்கல்வித் திட்டத்தை’ (ஜாதியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை) கடுமையாக எதிர்த்து, இத்திட்டம் கைவிடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 1967 க்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் பெரியாரின் கருத்தை மய்யமாக கொண்டே இயங்கியது. ‘குடிஅரசு’ போன்ற இதழ்கள் மூலம் இயக்கம் தனது கருத்துக்களை பரப்பியது, ஜாதி ஒழிப்பை சமூக மாற்றத்தின் அடிப்படையாக்கியது.
பெரியார், உணவகங்களில் ‘பார்ப்பனர் களுக்கு மட்டும்’ என்ற பெயர்ப்பலகைகளை அகற்ற போராட்டங்கள் நடத்தினார், இது ஜாதி பாகுபாட்டை நேரடியாக சவால் செய்தது. இயக்கம் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை ஆதரித்தது, ஜாதி அடுக்குகளை உடைத்தது. இன்றும் இயக்கத்தின் கொள்கைகள் சமூக நீதியின் அடித்தளமாக உள்ளன.
தமிழ்நாடு அரசின் ஜாதிப்பெயர் ஒழிப்பு அரசாணைகள்
தமிழ்நாடு அரசு, ஜாதிப்பெயர்களை ஒழிப்பதற்கான 2025 அக்டோபர் 8ஆம் தேதி வெளியான அரசாணை, கிராமங்கள், தெருக்கள், பொது சொத்துக்களில் ஜாதி சார்ந்த பெயர்களை (‘ஆதி திராவிடர் காலனி’ போன்றவை) நீக்க உத்தரவிட்டது. நவம்பர் 19, 2025க்குள் இதை செயல்படுத்த வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை, பெரியாரின் ஜாதிப்பெயர் ஒழிப்பு இயக்கத்தின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. இருப்பினும், சிலர் இதை திமுக அரசின் அரசியல் சூழ்ச்சி என்று விமர்சிக்கின்றனர். ஆனால், இது சமூக சமத்துவத்தை நோக்கிய முக்கிய முன்னெடுப்பாகும். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் ஆகியவை தமிழ்நாட்டில் ஜாதி ஒழிப்பை ஒரு சமூக இயக்கமாக மாற்றின. இவை இட ஒதுக்கீடு, சமத்துவம், பெண் உரிமைகள், சுயமரியாதைத் திருமணங்கள் போன்ற மாற்றங்களைக் கொண்டுவந்தன. பெரியாரின் புரட்சிகர இயக்கம் ஜாதிப்பெயர்களை ஒழிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தது. எனவே இது இன்று அரசு அரசாணைகளில் எதிரொலிக்கிறது. இருப்பினும், இன்னும் ஆங்காங்கே ஜாதிப் பாகுபாடுகள் இன்னும் இருப்பதால், இந்த போராட்டம் தொடர வேண்டியது அவசியம். இவை தமிழ்நாட்டை சமூக நீதியின் முன்மாதிரியாக்கியுள்ளன.
தேவதாசி முறை
ஒழிப்பதும், ஜாதி ஒழிப்பும்
ஒழிப்பதும், ஜாதி ஒழிப்பும்
தேவதாசி முறை என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட சமூகங்கள், குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பெண்களை இலக்காகக் கொண்டதாக இருந்தது. இந்த அமைப்பு, பெண்களை கோவிலுக்கு “அர்ப்பணிப்பது” என்ற பெயரில் மதத்தின் பெயராலும், ஜாதி அமைப்பின், மேலாதிக்கத்தின் கீழும் அவர்களைப் பாலியல் சுரண்டலுக்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் உட்படுத்தியது.
தேவதாசி முறை ஒழிப்பு என்பது சுரண்டல், அடிமைத்தனம், பாலியல் வன்முறையிலிருந்து பெண்களை விடுவிப்பதுடன் தொடர்புடையது. ஜாதி ஒழிப்பின் முக்கிய நோக்கமும் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதையும், பிறப்பின் அடிப்படையில் எவரும் உயர்ந்தவரோ – தாழ்ந்தவரோ இல்லை என்பதையும் நிலைநாட்டுவதாகும். இரண்டு போராட்டங்களும் மனித மாண்பு மற்றும் சமத்துவத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டவை.
தேவதாசி முறை ஒழிப்புக்கான போராட்டத்தில், தந்தை பெரியார், டாக்டர். முத்துலட்சுமி (ரெட்டி), மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் போன்றவர்கள் முக்கியப் பங்காற்றினர். இவர்களில் பலர் ஜாதி ஒழிப்பு மற்றும் சுயமரியாதை இயக்கங்களின் முன்னோடிகளாகவும் இருந்தனர். சுயமரியாதை இயக்கம், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் நிலவும் மூடநம்பிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைகளை எதிர்த்தன. தேவதாசி முறை, மதத்தின் சடங்கு நடைமுறையுடன் இணைந்திருந்ததால், அது ஜாதி ஒழிப்புக்கான ஒரு பகுதியாகவே கருதப்பட்டது.
1930இல் முத்துலட்சுமி (ரெட்டி) “தேவதாசி ஒழிப்பு மசோதா”வை மதராஸ் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது, பெரியார் அதற்கு தீவிர ஆதரவு அளித்தார். அவர் குடியரசு பத்திரிகையில் (30.03.1930) “தேவதாசி முறை தடுக்கவல்லது மட்டுமல்ல, அறவே ஒழிக்கும்” என்று எழுதினார். மதராஸ் தலைமைச் செயலர் அலுவலகத்துக்கு கடிதங்கள் எழுதி, முறையை ஒழிக்க அழுத்தம் கொடுத்தார்
1947 அக்டோபர் 9இல் “மதராஸ் தேவதாசி (அர்ப்பணம் தடுப்பு) சட்டம்” நிறைவேறியது. இது பெண்களுக்கு திருமண உரிமை அளித்து, கோயில் அர்ப்பணத்தை தடை செய்தது. பெரியார் இதை “பெண்கள் உரிமைகளுக்கான வெற்றி” என்று கொண்டாடினார். வந்தனா தேவி போன்றவர்களின் முயற்சிகளுக்குப் பிறகு, 1927இல் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேறியது. பெரியாரின் போராட்டம் வெறும் சட்டம் மட்டுமல்ல, சமூகத்தில் பாலின சமத்துவத்தையும்,ஜாதி ஒழிப்பையும் வலியுறுத்தியது. தந்தை பெரியாரின் பார்வை “பெண்களின் சுதந்திரம் இல்லாமல் சமூகம் முன்னேறாது” என்றது. இது தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த வரலாற்றில் இன்றவும் நிலைத்து நிற்கிறது. இதுமேலும் இது நிலைக்கும்.