திருச்சி, அக். 16 – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டி இறுதிச்சுற்றில் டெல்டா பகுதியைச் ேசர்ந்த அய்ந்து மாணவர்கள் மாநில அளவில் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.
1988ஆம் ஆண்டு முதல் சிறீராம் இலக்கியக் கழகம் ஆண்டுதோறும் திருக்குறள் பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறது. நடப்பாண்டில் மொத்தம் 6049 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மாநில அளவில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோரின் விவரம் வருமாறு:
இடைநிலைப்பிரிவில்: – முதல் பரிசு கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த பா.வர்ஷா, இரண்டாம்பரிசு திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சேர்ந்த த.தீ.தேவதீரன், மூன்றாம் பரிசு: கோவை மாவட்டம் மூலத்துறையைச் சேர்ந்த பி.சிறீதேவ் ஆகியோர் பெற்றுள்ளனர்.
மேல்நிலைப்பிரிவில்: சேலம் மாவட்டம் சங்கக் கிரியைச் சேர்ந்த பெ.த.சங்கமேஸ்வரன் முதல் பரிசும், புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்த தி.தீஷா இரண்டாம் பரிசும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ந.நந்தினி மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர்.
கல்லூரிப் பிரிவில்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த பு.சுசிமிதா முதல் பரிசும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மு.சந்தோஷ்குமார் இரண்டாம் பரிசும், புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரத்தைச் சேர்ந்த மு.மணிவாசகம் மூன்றாம் பரிசும் பெற்று சாதனை படைத்துள்ளனர். முதல் பரிசு வென்றோருக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்கமும், இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 7,500 ரொக்கமும் மற்றும் அனைவருக்கும் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
உச்சநீதிமன்ற ஆணைப்படி
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி
தமிழ்நாடுஅரசு உத்தரவு
சென்னை, அக்.16 தீபாவளி என்றாலே பட்டாசு தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு உள்ளிட்ட பலவற்றை அதிக சத்தம், அதிக மருந்துகள் கொண்ட பட்டாசுகள் ஏற்படுத்தி வருகின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பட்டாசுகள் வெடிக்க தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 2018-ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.