தீபாவளிபற்றி ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்

4 Min Read

தொகுப்பு :
குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்

 

”தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு எவ்வகை யிலும் ஒவ்வாதது” என்றும், “காட்டுமிராண்டிக் காலக் கற்பனைகள் நிறைந்தது” என்றும், “அறிவுக்கும்,  ஆராய்ச் சிக்கும்,  அனுபவத்திற்கும்,  உண்மை யதார்த்த நிலைக்கும்,  இயற்கைத் தன்மைக்கும் முரணானது” என்றும் தந்தை பெரியார் அவர்களும், திராவிட சுயமரியாதை இயக்கத்தவர்களாகிய நாமும் முக்கால் நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகப்  பேசியும்,  எழுதியும், அறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறோம். என்றாலும்,  நமது பகுத்தறிவு சுயமரியாதை நாத்திக இயக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடான, வேறுபாடான எண்ணங் கொண்ட தமிழக  முப்பெருந்தமிழ் அறிஞர்களின் கருத்தாய் வுரைகள் நமது கொள்கைக்கு வலுவூட்டி அரண் செய்வதாக அமைந்திருக்கின்றன. மொத்தத்தில் அத் தமிழறிஞர்களின் கருத்தாய்வுரைகள் “தீபாவளி தமிழர் விழா’’ அன்று என்பதையும், “தீபாவளிக்கு இலக்கியச் சான் றுகள் ஏதும்இல்லை” என்பதையும், ‘‘தீபாவளி வடநாட்டு குஜராத்தி மார்வாரிகளின் பண்டிகை’’ என்பதையும், ‘‘தீபாவளி சமண சமயப் பண்டிகை நன்கு’’ என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. தீபாவளி கொண்டாடி மகிழ முனைப்பு கொண்டிருக்கும்  பக்க தமிழ் அன்பர்கள்  மதி நலமும், மானஉணர்வும் பெற வேண்டும் என்ற நன்னோக்கில் அம்முப்பெரும் தமிழ் அறிஞர்களின் கருத்தாய்வுகள் ஈண்டுத் தொகுத்துத் தரப்படுகின்றன.

 தீபாவளி தமிழர்க்கு ஏற்றதன்று!

தீபாவளிப் பண்டிகை தமிழருக்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்கு அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பார் இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும், சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப் பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர்  ஆதலின், அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்பர்.

கா.சுப்பிரமணியன் (பிள்ளை), எம். ஏ., எம்.எல்., எழுதிய  “தமிழ் சமயம்’’ என்ற நூலில் பக்கம் 62

 வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தி யாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்கப்படுகின்றன. தமிழ கத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு (Financial New Year) விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக்கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோ லோடிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும், மார்வாரி களுக்கும் புதுக்கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜயநகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வரு கிறார்கள். தீபாவளி அன்று புதுக்கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. இச்சொற்றொடர் பின்பு தீபாவளி எனத் திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள்; புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாள் அன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை, செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென்தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்படப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளி அன்று புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்தது இல்லை.

பேராசிரியர், “அ.கி. பரந்தாமனார்”   எழுதிய “மதுரை நாயக்கர் வரலாறு” என்னும் நூலில் பக்கம்; 433-434

சமண சமயப் பண்டிகையே தீபாவளி

தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்திலே, அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்தபோது, அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர்.  அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா தீபாவலி என்னும் பெயரால் கொண்டாடப்படுகிறது. (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கேற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள்   இந்தப் பண்டிகையை வழக்கமாகக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு – ஆரியர்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்’’ என்ற நூலில் பக்கம் 79–80

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *