மதச் சார்பின்மைக்குப் பேராபத்து! பேராபத்து!!

3 Min Read

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹினா கானை  ‘ஸநாதனத்திற்கு எதிரானவர்’ என்று கூறி அவருக்கு எதிராக அவரது அலுவலகத்திற்கு முன்பாக ராமாயணம் பஜனை பாடும் போராட்டத்தை இந்துத்துவா குழு ஒன்று அறிவித்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்தப் போராட்டத்தைத் தடுக்க வந்த இஸ்லாமியரான காவல்துறை கண்காணிப்பாளரை, அக்குழு வற்புறுத்தி ‘ஜெய் சிறீராம்’ என்று சொல்ல வைத்த சம்பவம் பெரும் பதட்டமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

குவாலியர் நீதிமன்றத்தின் நுழைவு வாயிலில் அம்பேத்கர் சிலை அமைப்பை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்ட பார்ப்பன வழக்குரைஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாலேயே மாவட்ட கண்காணிப்பாளர் ஹினா கானை ‘ஸநாதன விரோதி’ என்று முத்திரை குத்தி, அவரது அலுவலகத்திற்கு முன்பு ராமாயணம் பஜனை பாடும் போராட்டத்தை பார்ப்பன வழக்குரைஞர் அனில் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதனை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தடுக்க வந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஹினா கானை, போராட்டக்காரர்கள் ‘ஸநாதன விரோதி’ என்று கூறி அவரைச் சூழ்ந்துகொண்டு முழக்கம் எழுப்பினர். இந்த நிலையில், பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலர்களும் பின்வாங்கி விட்டதால், கூட்டத்தில் சிக்கிக்கொண்ட கண்காணிப்பாளர் ஹினா கானை, தொடர்ச்சியாக ‘ஜெய் சிறீராம்’ என்று முழங்கச் சொல்லி அக்குழுவினர் வற்புறுத்தியுள்ளனர்.

வேறு வழியின்றி அவரும் ‘ஜெய் சிறீராம்’ என்று முழக்கமிட்ட பிறகே, அனில் மிஸ்ராவும் அவரது ஆதரவாளர்களும் அதிகாரியை வெளியே அனுப்பி உள்ளனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓர் இஸ்லாமியர் என்று தெரிந்தும், அவரை ‘ஜெய் சிறீராம்’ என்று முழக்கமிடச் சொல்லி மிரட்டியது; முக்கியமாக, அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்கள் கலவரக்காரர்களிடையே அவரை சிக்க வைத்துப் பின்வாங்கியது போன்ற கொடூரங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சட்டம் – ஒழுங்கு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

“ஸநாதனத்தின் பெயரால் தலைமை நீதிபதி மீதே செருப்பு வீசுவது, தற்போது காவல்துறை அதிகாரியையே  ‘ஜெய் சிறீராம்’ என்று முழங்கச் சொல்லி, மிரட்டி, அவரைப் பணிய வைப்பது – இவை எல்லாம் அரசு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவோடு தொடர்ந்து நடப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கைக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எந்தக் கொடுமைக்கும், சட்ட மீறலுக்கும் ஓர் எல்லை உண்டு.

ஆனால் ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருக்கக் கூடிய அரசு மதவெறியையே சாப்பிட்டு, மதவெறியையே மூச்சுக் காற்றாக சுவாசித்தும், வெளியிட்டும் வருவது – ‘ஹிட்லரின் நாஜிசமே பிச்சை வாங்க வேண்டும்’ என்கிற அளவுக்கு மதவெறி முற்றி வெடித்துக் கொண்டு இருக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை. குடியரசுத் தலைவர் தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கோ – திறப்பு விழா நிகழ்ச்சிக்கோ அவர் அழைக்கப்படவில்லை.

குடியரசுத் தலைவராக இருந்த நிலையிலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் மாண்பமை ராம்நாத் கோவிந்தும், அவரின் குடும்பத்தினரும் பூரி ஜெகந்நாதர் கோயில், அஜ்மீர் பிர்மா கோயிலிலும் உள்ளே நுழையவிடாமல் தடுக்கப்படவில்லையா?

மிகவும் ஆபத்தான மதவெறி எரிமலை அனலைக் கக்கிக் கொண்டிருக்கிறது! அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை காலில்போட்டு மிதிக்கப்படுகிறது – எச்சரிக்கை! எச்சரிக்கை!!

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *