நூல்: “மொழியும் வாழ்வும்”-
ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்
வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம், 120, என்.டி.ஆர். தெரு, ரெங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை – 600 024.
விலை: 120/-
“மொழியும் வாழ்வும்” நூல் பேரா.சுப.வீ. அவர்கள் பேச்சு மற்றும் எழுத்துகளின் தொகுப்பு.
பேராசிரியர் சுப.வீ. அவர்கள் அதிகமாய் அரசியல் களத்திலும் மேடைகளிலும் அரசியல் உரைகளை நிகழ்த்தியும், தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஒரு நிமிடம் பேச்சு போன்ற நிகழ்ச்சிகளை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் வல்லமை படைத்தவர் என்பதில் வேறு மாற்றுக் கருத்து இல்லை.
இந்த நூலில் பதினொரு தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் ஏழு கட்டுரைகள் மேடைப் பொழிவுகள் என்னும் வலைப்பூவில் இடம் பெற்ற மூன்று கட்டுரைகளும், ஒரு நூலுக்கு எழுதிய அணிந்துரை கட்டுரைகளும் சேர்ந்தே நூலாக இடம் பெற்றுள்ளன.
மொழி என்பது கற்றுக்கொண்ட மொழியை நம் சிந்தனைக்கு எதிராகப் பயன்படுத்துவதில்தான் மொழி ஆற்றல் வெளிப்படுகிறது. நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அது இரண்டு செய்திகளைப் பொறுத்தது. ஒன்று தேவை. இன்னொன்று நம் திறமை. இரண்டும் இல்லையென்றால் தாய்மொழியை மட்டுமாவது ஒழுங்காகக் கற்றுக் கொள்ளலாம் என்று “மொழியும் சிந்தனையும்” என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
மேலும் மொழியின் சிறப்பை கூறும்போது, இன்றைக்கும் கணிப்பொறியில் கூடுதலாக பயன்படுத்தப்படுகிற மொழிகள் மூன்று என்று வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். முதலிடத்தில் ஆங்கிலம் இருக்கிறது. இரண்டாவது இடத்திலே அய்ரிஸ் மொழி இருக்கிறது. மூன்றாவது இடத்திலே தமிழ்மொழி இருக்கிறது என்று சொல்கிறபோது இதைக் காட்டிலும் நமக்கு மகிழ்ச்சி பெருமை வேறு என்னவாக இருக்க முடியும் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
“பாலியல் சிக்கலும் பண்பாட்டுக் காவலர்களும்“ என்னும் கட்டுரையில், தம்மிடம் பணியாற்றுகின்ற, தம்மிடம் பயில்கின்ற அக்கம் பக்கத்தில் வசிக்கின்ற பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகப் பலர் மீதும் இன்று வழக்குகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர் தொடங்கி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விரைவில் இந்த குற்றச் சாட்டுகள் தொடங்கியது.
இப்படிக் குற்றங்கள் மலிந்து போயிருக்கிற ஒரு சமூகத்தில், அவைகளை தடுப்பதற்கும் திருந்துவதற்குமான விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் ஒரே ஒரு நடிகையின் நடனத்தைத் தடுத்து விடுவதால் எல்லாம் சரியாகி விடும் என்பது எவ்வளவுப போலித்தனம்! என்று ஆதங்கப்படுகிறார். இவையெல்லாம் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்கள் தேவைப்படுகின்றன. பண்பாடு என்பது காலம்தோறும் மாறக் கூடியதுதான். அதனை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். மேலும் ‘ஓரினச் சேர்க்கை”, “ஒரு நாடும், நான்கு துறைகளும்“, “திருக்குறளும் சமூகநீதியும்”, “தமிழால் ஒன்றுபடுவோம்!” போன்ற கட்டுரைகளின் எண்ணற்ற தரவுகளை எடுத்துரைக்கிறார் ஆசிரியர். படித்துப் பாருங்கள். பிடித்துப் போகும்.
– அய்வன்
நூல்:
“அறிந்தும் அறியாமலும்“
ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்
வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம், 120, என்.டி.ஆர். தெரு, ரெங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை – 600 024.விலை: 200/-
‘அறிந்தும் அறியாமலும்‘ இந்நூல் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் 33 உப தலைப்புகளில் இன்றைய தலைமுறையினர், இளைஞர்கள், மாணவர்கள் பெரும்பாலும் அறிந்திராத தமிழ் இலக்கிய நூல்கள் உள்ளூர் தகவல்கள் உள்ளிட்ட பல உலக நிகழ்வுகளை, மாற்றங்களை மிகச் சிறப்பாக எளிய நடையில் விவரித்து மாணவர்கள், இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் உரையாடியுள்ளார்.
திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களை எல்லாம் தமிழ்நாட்டு பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதின் அவசியம் மற்றும் ஏழு நீதி நூல்களை நம் இளம் தலைமுறையினர் கற்று, கல்வித்திறன் பெற வேண்டியதின் அவசியத்தை விளக்கியுள்ளார். தமிழை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும், தமிழிலேயே ஏன் பேச வேண்டும், தமிழில் என் பெயர் வைக்க வேண்டும் என்றும், தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கின்றார்.
உலகில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகர சிந்தனை மாற்றங்களால் புதிய கண்டுபிடிப்புகள், மத மோதல்கள் ஊடான போர்களுக்கு அடிப்படையாக அமைந்த மத நம்பிக்கைகளும், மத எதிர்ப்புகளும் அவற்றால் ஏற்பட்ட இரண்டு உலகப் போரினால் ஏற்பட்ட புதிய மறுமலர்ச்சி சிந்தனைகளின் வளர்ச்சியால் உலக நாடுகளில் முதலாளித்துவம், சமதர்மக் (கம்யூனிசம்) கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளில் புதிய வளர்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டன. இதன் விளைவாக அமெரிக்க, ரஷ்யா நாடுகள் நேரடி ராணுவப் போர் முறைகளை விடுத்து, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கின. இதன் விளைவாக அமெரிக்கா, ரஷ்யா நாடுகளுக்கு இடையே பனிப்போர் தொடங்கியது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்களாட்சி மலரத் தொடங்கியது.
அய்ரோப்பிய நாடுகளின் தலையீடு – அரபு நாடுகளின் பெட்ரோலிய எண்ணெய் வளங்களை சுரண்ட முனைப்புக் காட்டியது. அமெரிக்காவின் இத்தகைய தலையீட்டை எதிர்த்த சதாம் உசேன் உள்ளிட்ட தலைவர்களை தூக்கிலிட்டு, பெட்ரோலிய எண்ணெய் வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததின் பின்னணியும், இந்தியாவில் ஏற்பட்ட ஜாதி, மத அடிப்படையிலான, பார்ப்பனிய ஜாதி படிநிலை கட்டமைப்புகள், வர்ண ஜாதி பேதங்கள், இங்கு வாழ்ந்த மக்களை சுரண்டலுக்கு உட்படுத்தி காலங்காலமாக குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவிர அனைத்து மக்களுக்கும் கல்வி உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து நீதிக்கட்சித் தலைவர்கள் போராடி, கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அளிக்க தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம். அதன் செயல்பாடுகளான பார்ப்பனர் அல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்த இச்சங்கம் நடத்திய ஜஸ்டிஸ் பத்திரிகை மக்களிடம் பிரபலம் அடைந்து பிற்காலத்தில் (ஜஸ்டிஸ் கட்சி) நீதிக்கட்சி என நிலைப்பெற்ற வரலாறையும், பணிகளையும் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
நீதிக்கட்சியின் அரசியல் கொள்கைகள் பார்ப்பனர் அல்லாத மக்களின் கல்வி பொருளாதார முன்னேற்றங்களை அரசியல் பிரதிநிதித்துவத்தை முன்னிறுத்தி சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைத்து பல திட்டங்களை நிறைவேற்றி வந்த நிலையில், இம்மாற்றங்கள் தந்தை பெரியாரைக் கவர்ந்தது. அப்போதைய காங்கிரசின் தலைவராக இரு:நத தந்தை பெரியார். ஆரம்ப காலத்தில் காந்தியார் மீது பற்றுக் கொண்டிருந்தார். பின்னாளில் காந்தியார் மீதும் அவரின் சனாதன கொள்கை மீதும் முரண் ஏற்பட்டு காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடமங்கி சுயமரியாதை, பெண்ணடிமை எதிர்ப்பு, சம உரிமை, தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு போன்ற மனித உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் ஆதரவுடன் தன் வாழ்நாள் முழுவதும் பல சாதனைகளை தந்தை பெரியார் செய்து காட்டினார்.
தமிழ்நாட்டில் பார்ப்பனர் அல்லாத மக்களின் முன்னேற்றத்திற்காக திட்டங்களை, கல்வி உரிமைகளை மிக விரிவாகவும், எளிய நடையியல் இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் செம்மையான முறையில் அளித்துள்ளார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். உலக நிகழ்வுகள் முதல் தமிழ்நாடு வரையிலான, நிகழ்ந்த பல முக்கிய மாற்றங்களை அறிந்துகொள்ள அனைவரிடமும் இருக்க வேண்டிய, படித்து அரிய தகவல்களை அறிந்துகொள்ள வேண்டிய நூல் ‘அறிந்தும் அறியாமலும்’.
– பொ.அறிவன், கழனிப்பாக்கம்