நூல்:“விலங்குகளும் பாலினமும்“
ஆசிரியர்: நாராயணி சுப்ரமணியன்
வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், சென்னை
விலை: 170/-
பக்கங்கள் : 135
‘விலங்குகளும் பாலினமும்’ நூலில் நவீன விலங்குகள் ஆய்வு குறித்து என்ன கூறுகிறது என்பதைக் சுவைபட இந்த நூலில் நாராயணி சுப்ரமணியன் விளக்கி கூறியுள்ளார்.
தாய்மை – குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பேணுதல் பெண்களின் பொறுப்பு என ஒதுக்கி வைக்கப்பட்ட வேலையை ஓர் ஆண் விலங்கு செய்கிறது…. அது என்ன விலங்கு?
ஆண் – பெண் என்ற இறுக்கமான பால் இருமைகளுக்கு அப்பால் உள்ள பால் வகைகள், எந்த விலங்குகளில் இப்படி உள்ளது? அவை இனப்பெருக்கம் செய்வது எப்படி?
இப்படிப் பல கேள்விகளை எழுப்பி நமது ஆர்வத்தைத் தூண்டி ஆழமான சிந்தனையை அற்புதமாக விதைத்துச் செல்கிறார். அறிவுக்கண் திறந்து வெறுப்பை அழித்து, அன்பை விதைக்கும் நூல்.
எப்படிப் பார்த்தாலும், மனித இனத்தின் பார்வையிலிருந்து நாம் சொல்லும் ‘பாலினம்‘ என்பதற்கும் விலங்குகளின் பால் சார்ந்த சமூகப் பங்களிப்புக்கும் மலையளவு வித்தியாசம் உண்டு. எல்லா பெண் விலங்குகளும் சற்றே நாணத்துடன் அமைதியாகவும் தாயன்பின் ஊற்றாகவும் நடந்து கொள்வதில்லை. ஆண் விலங்குகள் எல்லாம் மூர்க்கமானவையும் அல்ல. பிரசவித்து பிள்ளை பெறும் ஆண் விலங்குகள், ஆண்பாலே இல்லாமல் பெண்கள் மட்டுமே கொண்ட விலங்குகள் உடலளவில் பெரிய பெண்களைக் கொண்ட விலங்கினங்கள் பெண் வழி சமூகமாக இயங்கும் விலங்குக் கூட்டங்கள் என்று விலங்கியல் உலகில் பல்வேறு பாலின நெகிழ் தன்மைகள் உண்டு.
விலங்குகளின் உலகைக் கூர்ந்து கவனித்தால், பாலினம் பற்றிய மனிதர்களில் கட்டமைப்புகளை இன்னும் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.
– அய்வன்