தொல்.திருமாவளவன் எம்.பி. வரவேற்பு
சென்னை, அக். 15– “ஜாதிப் பெயர்களை நீக்கும் அரஜாணையை வரவேற்கிறோம். அதற்காக முதலமைச்சருக்கு நன்றி கூறினோம். இனி வரும் காலங்களில் எந்த பெயரும் ஜாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு.” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜாதி பெயர் நீக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்ர் ஸ்டாலினை, விசிக தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது, “கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள் ஜாதிப் பெயர்களுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர்கள் கொண்டிருந்த அடையாளத்தை பின்பற்றுவதால் ஜாதியை வளர்க்கிறோம் என்று ஆகாது.
கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை ‘ஜி.டி பாலம்’ என்று பெயர் வைத்து புதிய தலைமுறையிடம் கொண்டு போய் சேர்த்தால் மகிழ்ச்சி தான். ஆனால் ‘ஜி.டி.நாயுடு பாலம்’ என்ற பெயரில்தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்று அரசு ஒரு முடிவை எடுத்திருப்பதால், அது ஜாதியை வளர்ப்பதற்கானதாக இருக்காது என நம்புகிறோம்.
இனிவரும் காலங்களில் எந்தப் பெயரும் ஜாதி அடிப்படையில் இருக்கக் கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு. இன்னும் சில ஜாதிப் பெயர்களில் உள்ள “ன்” என்ற விகுதியை மாற்றி “ர்” விகுதியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பின்னர் ஜாதிப் பெயர்களை நீக்கும் அரஜாணையை வெளியிட்டதற்காக முதலமைச்சரிடம் நன்றி கூறினோம். நியமன தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
வட சென்னை பகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காஜா தொடர்பான தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஒரு சில கோரிக்கைகள் குறித்து தான் முதலமைச்சரிடம் பேசினோம். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து இனிவரும் நாட்களில் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் குரல் கொடுப்பார்கள். தனியார் மயத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்.” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.