சென்னை, அக் 15 தமிழ்நாட்டில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இனி பிளஸ் 2 வகுப்புக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், அதன் மதிப்பெண் பட்டியல் மட்டுமே அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 – 2018 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாட்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, இரண்டு வகுப்புகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுடன் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு வந்தது.
சமீபத்தில், மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டபோது, ஏற்கனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 10, பிளஸ் 1, பிளஸ் 2 என்ற கல்வி முறையே தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது, பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 2025 – 2026ஆம் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி பிளஸ் 2 மட்டுமே பொதுத்தேர்வாக நடத்தப்பட்டு, அதன் மதிப்பெண் பட்டியல் மட்டுமே அரசு தேர்வுத் துறையால் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும், ஏற்கெனவே பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக, வரும் 2030 ஆம் ஆண்டு வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடத்தி, அவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கவும் தேர்வுத் துறைக்கு அனுமதி வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
நவ.5, 6இல் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு
சென்னை, அக்.15 நவ.5, 6இல் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 நாள்கள் ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்கிறார்.