தொகுப்பு: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
சென்னை, அக்.15- ‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதை பாரீர்’ என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் 14.10.2025 அன்று மாலை திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
கண்டனக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைத்து தோழர்களையும் வழக்குரைஞர் அணியின் மாநில தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் வரவேற்று உரையாற்றினார். அவரது உரையில்:
பொதுவாக வழக்குரை ஞர்கள் வாதாடுகின்ற நேரத்தில் நீதிமன்றத்தில் என்ன நடைமுறை இருக்கும் என்பதையும், வழக்கில் தோற்றாலும் நீதிபதியின் மீது நேரடியாக எந்த கோபத் தையும் யாரும் காட்ட முடியாது, காட்டியது இல்லை என்பதையும் தனது அனுபவத்தின் மூலம் பதிவு செய்தார். ஆனால் , இன்றைக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவரின் மீது செருப்பு வீசும் அளவிற்கு என்ன கோபம் என்று கேள்வி எழுப்பி, ஸநாதனத்தை ஏற்றுக் கொள்வதால்தான் இதனை அந்த வழக்குரைஞரால் செய்ய முடிந்திருக்கிறது என்பதையும் பதிவு செய்து, தலைமை நீதிபதி மீதான செருப்பு வீச்சுக்கு திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் சார்பில் கண்டனத்தை தெரிவித்தார்.
நீதித்துறையில் சமூகநீதி இடஒதுக்கீடு தேவை!: கவிஞர் கலி.பூங்குன்றன்
நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரை ஆற்றினார். அவரது உரையில், நடைபெறும் கண்டனக் கூட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துரைத்து, நியாயமாக நாடே கொந்தளித்து இருக்க வேண்டிய செய்தி இது என்றும், குடியரசு தலைவருக்கே பதவிப்பிரமாணம் செய்யக்கூடியவர் தான் இந்தியாவின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி. அவர் மீதே செருப்பை வீசுகிறார்கள் என்றால், அதனுடைய பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றும், வழக்கு விஷ்ணு சிலை சேதாரம் பற்றியது இந்த வழக்கிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றார். மேலும் கடவுளுக்காக இவர் வக்காலத்து வாங்கப் போகலாமா? அதனை நாகரீகமாக நீதிபதி எடுத்துரைத்து கடவுளிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார். கடவுள் நம்பிக்கை இருந்தால் தலைமை நீதிபதியின் பதிலை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், செருப்பு வீச்சு என்றால் ஸநாதனம் இவ்வளவு கேவலமானதா? கடவுளே நீதிபதி மீது செருப்பு வீச சொன்னார் என்கிறார் என்றால் அந்த கடவுளின் தன்மை என்ன? இத்தகைய வெறுப்பு எப்படி ஊட்டப்படுகிறது? என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.
பட்டியல் இனத்தைச் சார்ந்த நீதிபதி என்பது மட்டுமல்லாமல், புத்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர் அவர். புத்த மதமே ஆரியத்தை வீழ்த்ததான் உருவானது. அதை மனதில் வைத்துதான் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தலைமை நீதிபதியின் மீது இந்த செருப்பு வீச்சு நடைபெற்று இருக்கிறது என்றார். தலைமை நீதிபதி அவர்கள் அவரின் சொந்த ஊருக்கு சென்றபோதுகூட அவருக்கான உரிய மரியாதை தரப்படவில்லை. இதுவே நீதிபதி பார்ப்பனராக இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா? நாடே கொந்தளித்து இருக்கும் அல்லவா என்ற கேள்வியை முன் வைத்தார். பார்ப்பனரல்லாத வகுப்பைச் சார்ந்த மேனாள் நீதிபதி களுக்கு ஏற்பட்ட அவமானங்கள், மேனாள் குடியரசுத் தலைவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்று, ஸநாதனத்தின் அடிப்படையில் பார்ப்பனரல்லாத குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த தலைமை பொறுப்பில் இருந்தவர்களுக்கெல்லாம் என்ன மரியாதை கிடைத்தது என்பதை விளக்கினார். இதன்மூலம் ஜாதி எவ்வளவு ஆழமானது என்றும் சங்பரிவார்கள் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதன் அடிப்படையில்தான் நீதித்துறையிலும் சமூகநீதித் தேவை என்று தொடர்ந்து திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது என்றார். நீதித்துறையில் சமூகநீதி கோரி திராவிடர் கழகம் எடுத்த முயற்சிகளையும், திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்த முயற்சிகளையும் எடுத்துரைத்தார். குறிப்பாக 1988 ஆம் ஆண்டு ஒன்றிய சட்ட அமைச்சர் சங்கரானந்த் அவர்களிடம் ஆசிரியர் சந்தித்து கொடுத்த மனுவினை நினைவு கூர்ந்தார். அம்மனுவில் நீதித்துறையில் சமூக நீதியும் இடஒதுக்கிடும் தேவை என்று குறிப்பிடப்பட்டதை விளக்கினார். இன்றுவரை அதற்கான எந்த முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை என்றால், அதிகார மட்டத்தில் ஜாதி பரவி இருக்கிறது என்றும் அதனை ஒழிப்பதற்காகத்தான் சட்ட எரிப்பு வரை தந்தை பெரியார் சென்றார் என்பதைக் குறிப்பிட்டார். தமிழ்நாடு தவிர இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புக் குரல் எந்த மாநிலத்திலும் இல்லை என்றும், இந்த உணர்வில் தமிழ்நாடு மட்டும்தான் இருக்கிறது என்றார் . சம்பவம் நடந்தது டில்லியில். உள்துறை அமைச்சகம் என்ன செய்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டாமா? இதைவிட சட்டம் – ஒழுங்கு பிரச்சினை இருக்க முடியுமா? என்ற பொருள்பொதிந்த கேள்வியை முன்வைத்தார். மேலும் ‘துக்ளக்’ பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆசிரியரிடம் கேள்வி எழுப்புவது போலும், அதற்கு ஆசிரியர் பதில் அளிப்பது போலவும் – அவர்கள் வெளியிட்டிருந்த அட்டைப்பட செய்தியை எடுத்துரைத்து, அவர்கள் கிண்டலாக கேலியாக சொன்னாலும் நாம் கேட்பது அதைத் தான்- நீதித்துறையிலும் சமூகநீதி தேவை! பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பழங்குடியின , சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்று இக்கூட்டத்தின் மூலம் வலியுறுத்தி நிறைவு செய்தார்.
தலைமை நீதிபதி மீதான செருப்பு வீச்சு
Cognizable offence! – மாண்பமை அரிபரந்தாமன்
நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி மாண்பமை அரிபரந்தாமன் கண்டன உரையாற்றினார். அவரது உரையில் : கடந்த செப்டம்பர் 16 அன்று நடைபெற்ற ஒரு வழக்கு, அந்த வழக்கில் நீதிபதி அவர்கள் சொன்ன கருத்து, அதனைத் தொடர்ந்து கடந்த 6.10.2025 அன்று தலைமை நீதிபதியின் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. நடைபெற்ற சம்பவங்கள், வரக்கூடிய செய்திகள், மேலும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் செருப்பை வீசிய அதே வழக்குரைஞர் செப்டம்பர் 16 அன்று தொடுக்கப்பட்ட வழக்கை தொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றும், வேறு யாரோ ஒருவர் தான் அவ்வழக்கை தொடுத்திருக்க வேண்டும் என்றார். கஜூரா பகுதியில் அமைந்திருக்கக் கூடிய அந்த கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகிறது என்றும், தொல்லியல் துறை அதை மாற்றி அமைக்க முடியாது என்று சொல்லுகிறது இதில் நாங்கள் தலையிட முடியாது என்று சட்டப்படி தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக பேசுகின்ற நேரத்தில் உங்கள் கடவுளிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். அது மட்டும் இன்றி இது Public Interest Litigation இல்லை; Publicity Interest Litigation என்பதையும் கூறினார். இது வழக்கமாக கூறும் ஒன்று தான். முதலில் நடந்தது செருப்பு வீச்சு கிடையாது. அதற்கு முன்பே மிகப்பெரிய இணையவழி தாக்குதலுக்கு தலைமை நீதிபதி உள்ளானார். அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக இரண்டு முறை நீதிமன்றத்திலேயே விளக்கம் தந்தார். அவர் ஒரு அம்பேத்கரியவாதி; எந்த மதத்திற்கும் நான் எதிரி இல்லை என்பதை அவர் பதிவு செய்திருக்கிறார். இந்த நேரத்தில் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷாரா மேத்தா அவர்கள் எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு என்று கூறியதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். கடந்த 6.10.2025 அன்று சிவம்சிங் என்ற வழக்குரைஞர் வழக்காடிக் கொண்டு இருந்த நேரத்தில்தான் இந்த செருப்பு வீச்சு நடைபெற்று இருக்கிறது. செருப்பு வீச முயற்சி என்று சிலர் கூறுகிறார்கள் ஆனால் பிபிசியில் தெளிவாக வெளியாகி இருக்கக்கூடிய காட்சிப்பதிவில் தலைமை நீதிபதியின் மீது செருப்பு வீசப்பட்டு இருக்கிறது என்பது உறுதியாகிறது என்றும், ‘‘இதை பொருட்படுத்த வேண்டாம் நீங்கள் உங்கள் வழக்கைத் தொடருங்கள்’’ என்று தலைமை நீதிபதி கூறியது அவரின் உயர்ந்த பண்பைக் காட்டுகிறது. அவர் வேண்டுமென்றால் வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று கூறலாம், ஆனால் காவல்துறை ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பினார். வழக்குரைஞர்களுக்கும், சட்டம் தெரிந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும் இது ‘Cognizable Offence’ என்பதைக் குறிப்பிட்டு, சான்றாக காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றார். ஒருவேளை அந்தக் கொலை முயற்சியில் காந்தி உயிர்தப்பி இருந்தால், கோட்சேவை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கூறி இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்திருக்குமா? பொதுவாக கொலை, பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்களில் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வழக்குப்பதிவு செய்த பின் நடைபெறும் நடைமுறைகள் என்பது வேறு. ஆனால், வழக்கே பதிவு செய்யப்படவில்லை என்றால் இது எதைக் குறிக்கிறது என்ற கேள்வியை எழுப்பினார்.
தொடர்ந்து வயர் (The Wire) இணையப் பக்கத்தில் சித்தார்த் வரதராஜ் அவர்கள் எழுப்பிய சில வினாக்களையும், ‘விடுதலை’ நாளிதழில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் எழுப்பிய கேள்விகளையும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக பாபர் மசூதி வழக்கில் ஓர் இஸ்லாமிய வழக்குரைஞர் நீதிபதி சந்திரசூட் அவர்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு செருப்பை வீசி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும், இந்தியாவின் பிரதமர் மோடி எட்டு மணி நேரத்திற்கு பிறகு ஒரு ட்வீட் செய்கிறார் பொதுவாக அவரின் ட்வீட்டை ஆயிரக்கணக்கில் மறு ட்வீட் (Retweet) செய்யக்கூடியவர்கள்கூட இந்த சம்பவத்தில் செய்யவில்லை என்றார்.அது மட்டுமின்றி மேனாள் நீதிபதி கட்ஜூ, செருப்பு எறிந்தது தவறு – ஆனால் கவாய் பேசியதும் தவறு தான் என்கிறார். 2006 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அவசர சட்டத்தை கொண்டு வந்தார். அவசர சட்டத்தின் காலம் ஆறு மாதம் என்பதை நாம் அறிவோம். அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றபோது அந்த அவசர சட்டத்திற்கு தடை பிறப்பித்தது. அதனால் அவசர சட்டம் வெறும் ஆணையாக மட்டுமே இருந்தது. அந்த சட்டத்திற்கு தடை கொடுத்தவர்களில் ஒருவர் கட்ஜூ என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார். இந்த சம்பவத்தை அவர்கள் யாரும் கண்டிக்கவில்லை. மேற்சொன்ன அனைத்தும் நமக்கு உணர்த்த வேண்டிய செய்தியாக நீதிபதி அரிப்பாரந்தாமன் அவர்கள் மிக முக்கியமான குறிப்புகளை பகிர்ந்தார்.
உச்சநீதிமன்றத்தில்
உரிய பிரதிநிதித்துவம் தேவை!
இன்றைக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பட்டியலின, பழங்குடியின வகுப்பினை சார்ந்த நீதிபதிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும், உரிய பிரதிநிதித்துவத்துடன் நாம் பெரும்பான்மையுடன் இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது என்றும் குறிப்பிட்டு, அச்சூழலில் ஒருவேளை இந்த சம்பவம் நடந்திருந்தால் அதற்கான எதிர்வினை மிகப்பெரிய அளவில் இருந்திருக்கும் என்பதை எடுத்துரைத்தார். 1950இல் தொடங்கி 2025 வரை மொத்தமே ஏழு பட்டியலின வகுப்பைச் சார்ந்த நீதிபதிகள் தான் இருக்கிறார்கள், பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்கள் ஒரு சதவிகிதம்தான், பெண்கள் நியமனத்திலும் நீதித்துறையில் சமூக நீதி பின்பற்றப்படுவதில்லை என்றார். இதுகுறித்து பேசுகையில் பெண் வழக்குரைஞர்கள் தங்களுக்கென்று தனி அறை (chamber) வேண்டும் என்ற மனுவினை வழங்கியபோது நீதிபதி சூர்யா காந்த் அவர்கள் பெண்கள் தான் முன்னேறி விட்டீர்களே என்று சமூக நீதி புரிதலின்றியும், இதுவரை உச்ச நீதிமன்றத்தில் எத்தனைப் பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள் என்ற கேள்வியை முன் வைத்து சிந்திக்காமலும், எத்தனை பெண் நீதிபதிகளால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு வர முடிந்தது என்ற கேள்விக்கு பதில் இன்றியும் இத்தகைய வார்த்தைகளைப் பேசுவது எதைக் காட்டுகிறது என்பதையும் அனைவருக்கும் புரியும் வகையில் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார்.
குறிப்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகளுக்கும் தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகளுக்கும் எண்ணிக்கை வகையிலான வேறுபாட்டினை விளக்கி, அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு செல்கின்றபோது தமிழ்நாட்டை விட குஜராத்தை சார்ந்த நீதிபதிகள்தான் தலைமை நீதிபதிகளாக எளிமையாக வர முடிகிறது என்பதையும் விவரித்தார். குஜராத்தில் 50 நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் இருக்கிறார்கள் என்றால் உச்சநீதிமன்றத்தில் மூன்று பேர் நீதிபதிகளாக முடிகிறது; தமிழ்நாட்டில் 75 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தால் அதில் ஒருவர் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற முடிகிறது. எண்ணிக்கை முழுவதும் யார் இருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பட்டியலின, பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் கணிசமாக இருந்திருந்தால் இந்த தாக்குதலுக்கு எதிர்வினை வேறு மாதிரி இருந்திருக்கும் என்றார். செருப்பை வீசிய வழக்குரைஞர் ஸநாதனத்திற்கு ஒரு இழுக்கு ஏற்பட்டால் பொறுத்துக்கொள்ள முடியாது; பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று செருப்பை வீசி இருக்கிறார்.
துக்ளக் நோக்கம் என்ன?
தமிழ்நாட்டில் கண்டிப்போம்!
இதனை துக்ளக் எப்படி காட்சிப்படுத்தி இருக்கிறது என்பதை வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்கள் வழங்கிய குறிப்பின் மூலம் அறிந்தேன் என்று கூறி, துக்ளக் இதழில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரும் பேசிக் கொள்வது போல் வெளியிடப்பட்ட கார்ட்டூனில் உள்ள செய்தியை குறிப்பிட்டார். ஸநாதனத்தை பற்றி உச்சநீதிமன்றம் பேசினாலே செருப்பை வீசுகிறார்கள்; ஆனால் ஸநாதனத்தை பற்றி நாம் எவ்வளவோ பேசுறோம் ஒருவருக்கும் ரோஷம் வரவில்லையே அதனால் நாம்தான் ஜெயிப்போம் என்று ஆசிரியர் சொல்வது போல் வெளியான அந்த கார்ட்டூன் எதைக் குறிக்கிறது என்ற கேள்வியை எழுப்பினார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மீது நடந்த தாக்குதலை நியாயப்படுத்தியும், அதுதான் சரி என்றும், அதேபோல் தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள் என்பதைதான் இது குறிக்கிறது என்றார். எனவே நீதிபதி நியமனங்களில் சமூகநீதித் தேவை என்பதுதான் நம்முடைய கோரிக்கையாக இருக்க வேண்டும். செருப்பை தூக்கி எறிந்தவன் ஒரு கோட்சே; காரணம் காந்தியை கொன்ற வழக்கின் விசாரணையில் கோட்சே நான் காந்தியைக் கொன்றேன் என்று ஒப்புக்கொண்டார். அதற்காக நான் வருந்தவில்லை என்றார். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார். ஸநாதனத்தின்படி தான் கோட்சே அப்படி நடந்து கொண்டார் நம் மாநிலத்தின் துணை முதலமைச்சர் மட்டுமல்ல, நாம் அனைவருமே ஸநாதனத்தை எதிர்த்துதான் பேசுகிறோம். இங்கு இருக்கும் கடவுள் பக்தியாளர்கள்கூட ஜாதிக்கு எதிராக பேசுவார்கள். ஸநாதனத்தை எதிர்த்த நீதிபதியின் மீது செருப்பை வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் நாம் எப்படி பேச முடிகிறது? காரணம் ஸநாதனத்தை எதிர்ப்பவர்கள் தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மை. இதே நோக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும், மகாராட்டிரா மாநிலத்திற்கு தலைமை நீதிபதி சென்ற போது உரிய மரியாதை வழங்கப்படாத நேரத்தில் அதனை Ignore (புறந்தள்ளுங்கள்) செய்யுங்கள் என்று அவர் கூறினார். அவர் இக்னோர்(ignore) செய்யலாம் நாம் இக்னோர் செய்யக்கூடாது என்றார். ஜாதிய உணர்வு தலையில் ஏறி உள்ளதால் தலைமை நீதிபதியின் மீது செருப்பை வீச துணிகிறார்கள் என்றும், நீங்கள் எல்லாம் தலைமை நீதிபதிகளாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்ற அவர்களின் ஸநாதன சிந்தனையை தான் இது குறிக்கிறது என்றார். இதை கண்டிக்க வேண்டும். ‘துக்ளக்’ இதை ஆதரித்துச் செய்தி வெளியிட்டால் அதனையும் நாம் கண்டிக்க வேண்டும்; எதிர்வினை ஆற்ற வேண்டும். தமிழ்நாட்டில் சுணக்கம் இல்லை! கண்டிப்போம்! என்று சட்டரீதியாகவும், சுயமரியாதை உணர்வுடனும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் கழகத்தின் செயலவை தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்கள் நன்றி கூறினார். இரவு சரியாக 8.30 மணிக்குக் கூட்டம் நிறைவுற்றது. சிறப்புக் கூட்டத்திற்கு ஏராளமான வழக்குரைஞர்களும், பல்துறை பெருமக்களும் திரளாக வந்திருந்தனர்.