உத்தரப்பிரதேச ஆளுநரும், குஜராத் மாநில மேனாள் முதலமைச்சருமான ஆனந்திபென் படேல், வாரணாசியில் உள்ள ‘‘மகாத்மா காந்தி காசி வித்யாபீட், மற்றும் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில்’’ நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், இளம் பெண்கள் ‘தங்கள் விருப்பப்படி வாழும் லிவ்-இன்-டுகெதர் என்பதை தவிர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அதோடு நிறுத்தவில்லை ஆளுநர்.
இப்போதெல்லாம் லிவ்-இன்-டுகெதர் உறவுகள் ஒரு நாகரிகமாக மாறி விட்டன என்று கூறிய அவர், அதிலிருந்து பெண்கள் விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “அப்படி வாழ்ந்தால் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள்’’ என்றும் அவர் அதிர்ச்சி தரும் விதமாகப் பேசினார்! இவ்வளவுக்கும் இப்படிப் பேசிய ஆளுநர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதலால், பெண்கள் தங்கள் கல்வி மற்றும் சிறந்த குறிக்கோள்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். கணவர் வீட்டில் மாமனார் மாமியாரோடு வாழும் சூழலில் தான் பிள்ளைகள் நன்றாக வளரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கல்வியின் முக்கியத்துவம், கல்வி கற்றவர்களின் எதிர்காலத்திற்கான வேலை வாய்ப்பு, சமூகத்தில் அவர்கள் ஆற்றவேண்டிய பணிகள் என்று ஏராளமானவைகள் இருக்கும் போது தலிபான்களைப் போல் பெண்கள் விருப்பப்படி வாழக்கூடாது என்று ஆளுநர் அதுவும் பெண்ணே பேசி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த 2025ஆம் ஆண்டிலும் உயர்ந்த பதவியில் இருக்கும் பெண் ஒருவர் பெண்களைப்பற்றி இப்படிப் பேசி இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு கருத்தைக் கூறுவதற்கு உரிமை உண்டு என்றாலும், அது வன்மம் உடையதாகவும், வன்முறைத் தன்மையுடனும் இருப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
‘லிவ்-இன்-டுகெதர்’ என்ற முறை உலகின் பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளதுதான். உச்சநீதிமன்றமும் இது குறித்து பல தீர்ப்புகளையும் வழங்கியுள்ளது.
இது இந்திய அரசமைப்புச் சட்டம் 21ஆவது பிரிவின்கீழ் உள்ள வாழ்வுரிமையின் வரம்புக்குள் வருவதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீண்ட காலம் நீடிக்கும் திருமணத்தின் தன்மை கொண்ட உறவுகளில் உள்ள பெண்களுக்கு குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி (Domestic Violence act 2005) பாதுகாப்பும், சில நிபந்தனைகளின் கீழ் ஜீவனாம்சம் (Maintenance)கோரும் உரிமையும் உண்டு என்றும் கூறியுள்ளது. இந்த உறவில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சட்ட பூர்வமான உரிமைகள் உள்ளன.
(1) 2006 – லதாசிங் எதிர் உத்தரப்பிரதேச மாநில அரசு வழக்கில் வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு.
(2) குடும்ப வன்முறைச் சட்டம் மூலம் பாதுகாப்பு:
தீர்ப்பு வழங்கப்பட்ட ஆண்டு 2010, வழக்கு டி. வேலுசாமி எதிர் டி. பச்சையம்மாள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு.
‘‘நீண்ட காலம் சேர்ந்து வாழும் ஒரு பெண் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005இன் கீழ் மனைவிக்குரிய உரிமைகளுடன் (குறிப்பாகப் பராமரிப்புத் தொகை) பாதுகாப்புப் பெறவும் தகுதி உடையவர் என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2015இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: அதன் முக்கிய அம்சம் ஒரு ஆணும் பெண்ணும் நீண்ட காலமாக கணவனும், மனைவியுமாக வாழ்ந்தால், அவர்கள் திருமணம் செய்த கொண்டவர்களாகவே கருத்துப்படுவர். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் சட்டப் பூர்வமானவர்கள் மற்றும் சொத்துரிமை உண்டு என்றும் நீதிமன்றம் பல வழக்குகளில் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சட்டப்படியான உரிமை உள்ள பிரச்சினையில் ஓர் ஆளுநர் அதற்கு எதிராகவும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆளுநரின் அந்தக் கருத்தை எதிர்த்து மாணவர்கள் போராடியதும் வரவேற்கத்தக்கதே!
