சென்னை, அக். 14- தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று கூடியதும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மறைவுற்ற மேனாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும், மறைந்த தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (14.10.2025) காலை 9.30 மணியளவில் கூடியதும், மறைவுற்ற மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ச.புரட்சிமணி, சு.குணசேகரன், வீ.செ.கோவிந்தசாமி, ஓ.எஸ்.அமர்நாத், ஆ.அறிவழகன், துரை அன்பரசன் (என்கிற இராமலிங்கம், ம.அ.கலீபூர் ரஹ்மான், இரா.சின்னசாமி ஆகியோரின் இரங்கல் குறிப்பை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.
இதையடுத்து மறைவுற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் பெருமக்கள், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப் பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
கரூர் நெரிசலில்..
27.9.2025 அன்று கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய தலைவர்கள் மறைவுக்கு…
கேரள மாநில மேனாள் முதல மைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்ண்ட் மேனாள் முதலமைச்சர் சிபு.சோரன், முதுபெரும் அரசியல் தலைவர் மற்றும் நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு அரசின முதன்மைச் செயலாளர் மருத்துவர் பீலா வெங்கடேசன், சட்டமன்றப் பேரவை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தினர். இத்துடன் இன்றைய சட்டமன்ற நிகழ்வு முடிவுற்றது. மீண்டும் நாளை காலை அவை நிகழ்வு தொடங்கும் என பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
