சென்னை அக். 14- அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அநாகரிகமாக பேசித் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் அமலாகி 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு 12.10.2025 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஒன்றியபாஜக அரசு நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஆர்டிஅய்-யில் ஒன்றியபாஜகஅரசு மேற்கொண்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஒருமையிலும், கொச்சைபடுத்தியும் பேசி தரம்தாழ்ந்த அரசியலை செய்கிறார். எங்களை வம்புக்கு இழுத்து அநாகரிகமாகப் பேசி வருகிறார். நாங்கள் மக்கள் பிரச்சினைகளில் எந்த சமரசம் செய்து கொள் ளாமல், கூட்டணியில் இருந்ததாலும் மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகிறோம். கூட்டணியில் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என தலைவர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றனர்.
அதுபோன்று நான் பொதுவெளியில் பேச முடியாது. நாங்கள் கூடுதல் தொகுதி கேட்கவில்லை என யார் சொன்னது? எங்களுடைய பிரச்சாரங்களை ஆரவாரம் இல்லாமல், உயிரிழப்பு இல்லாமல் செய்து வருகிறோம். எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த ஜனவரியிலேயே தொடங்கிவிட்டோம். இவ்வாறு தெரிவித்தார்.