‘திராவிட மாடல்’ அரசின் சாதனை!
இந்தியாவிலேயே படிப்பறிவுமிக்க மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது!
‘தி வீக்’ ஆங்கில ஏட்டின் இணைய இதழ் பாராட்டு!
சென்னை, ஆக.14 தமிழ்நாட்டில் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதற்கு ‘தி வீக்’ ஆங்கில ஏட்டின் இணைய இதழ் பாராட்டுத் தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலேயே படிப்பறிவுமிக்க மாநில மாகத் தமிழ்நாடு திகழ முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பெருமளவு உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்குக் காலை உணவினை பரிமாறி தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.8.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊராகிய திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 26.8.2025 அன்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
முதலமைச்சரின் உரை!
அன்றைய தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய பகுதி வருமாறு: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் இனி 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவியர்-கள் பயன்பெறுவர்.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள், அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
முதல்கட்டமாக, ஆயிரத்து 545 பள்ளிகளில், ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்தார்கள்.
பிறகு, 25.08.2023 அன்று, முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்தோம்.
2024 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில், ஊரகப் பகுதிகளில் இருக்கக்கூ-டிய அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை, 17 இலட்சம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வந்தார்கள். இந்தத் திட்டத்தின் அட்டகாசமான சக்சஸ் மற்றும் இது கொடுக்கக்கூடிய அபாரமான ரிசல்ட்டைப் பார்த்து, இனி, நகர்ப்புற பகுதிகளில் செயல்படுகின்ற 2 ஆயிரத்து 429 அரசு உதவிபெறும் பள்ளிக-ளுக்கும் விரிவாக்கம் செய்கிறோம். இதனால், கூடுதலாக 3 இலட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற இருக்கிறார்கள். கிராண்ட் டோட்டலாக சொல்லவேண்டும் என்றால், இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் நாள்தோறும் காலையில் சூடாக, சுவையாக, சத்தான உணவைச் சாப்பிட்டு, வகுப்பறைக்குள்ளே தெம்பாக நுழைவார்கள்.
ஆண்டொன்றுக்கு 600 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இதை செலவு என்று நான் சொல்ல மாட்டேன். இது ஒரு சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்தார்.
‘தி வீக்’ – காட்சிப் பதிவு!
‘இந்நிலையில் முதலமைச்சரின் இந்தக் காலை உணவுத் திட்டம் குறித்து ‘தி வீக்’ ஆங்கில ஏட்டின் காட்சிப் பதிவில் சிறப்பாக விமர்சித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் திருவான்மியூரில் காலை உணவு தயாரிக்கும் இடத்தை படமாக்கி அங்கு அதிகாலை முதல் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் 1,500 பள்ளிகளில் செயல்பட்ட இத்திட்டம் தற்போது 35,000 பள்ளிகள் வரை விரிவடைந்துள்ளதை அதில் குறிப்பிட்டுள்ளது.
படிப்பறிவுமிக்க மாநிலம் தமிழ்நாடு!
காலையில் மாணவ–மாணவியர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதில் உடல்நிலையில் வளர்ச்சி, கல்வியில் கவனம், பள்ளிக்கு தொடர்ந்து வருகை, தோழமை உணர்வு அதிகரிப்பு உள்ளிட்டவைகள் அவர்களிடம் நிலவுவதாக ‘தி வீக்’ சுட்டிக்காட்டியது. இத்திட்டத்தால் மாணவர்களின் பொதுவான திறன் வளர்ச்சி ஏற்பட்டு வருவதை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்று மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டியும் அதில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வியில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டுள்ள தமிழ்நாட்டில் 1957 இல் பெருந் தலைவர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் பல்வேறு மாற்றங்களுடன் 2025–லும் தொடர்ந்து வருவதை அது சுட்டிக்காட்டியுள்ளது. அது மட்டுமின்றி இந்தியாவில் படிப்பறிவு அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பெருமளவு உதவுவதாகவும் ‘தி வீக்’ ஏடு குறிப்பிட்டுள்ளது.
வலைதளப் பதிவு!
சூரியன் உதயமாவதற்கு முன்பே சமையல் கூடங்கள் தயார்!
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தக் காணொலியை மேற்கோள் காட்டி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே தமிழ்நாடு முழுவதும் குழந்தைகளுக்கான சமையல் கூடங்கள் தயாராகி விடுகின்றன. தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த வயிறுடன்தங்களின் நாளைத் தொடங்குகின்றனர்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமிதம் பொங்க குறிப்பிட்டுள்ளார்.