ஒடுக்கப்பட்டோர் அரசியல் தெரியுமா? புரியுமா?

5 Min Read

தற்குறி பழனிசாமி வாயைத் திறந்தால் உளறுவார் என்பதை தமிழ்நாடு அறியும். அந்த உளறலை ஊர் அறிய வைப்பதற்காகத் தான் ஊர் ஊராக ‘சுந்தரா டிராவல்ஸ்’ எடுத்துச் சுற்றிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. அவரது சமீபத்திய உளறல்களில் ஒன்று…

“இன்று கூட செய்திகளில் பார்த்தேன், இனிமேல் மருத்துவமனையில் ‘பயனாளிகள்’ என்று சொல்ல வேண்டுமாம். நோயாளி என்று சொல்லக்கூடாதாம். பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாமா? ஸ்டாலின் அவர்களே, இரண்டு பெயரை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள்.

அப்பா, அம்மா பெயரை மாற்றி விடாதீர்கள். விட்டால் அதையும் மாற்றிவிடுவார். எல்லாவற்றுக்கும் பெயர் மாற்றம், இரண்டாவது பெயர் வைப்பார். இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது” என்று சொல்லி இருக்கிறார் தற்குறி பழனிசாமி.

மருத்துவமனைக்கு வருபவர்களை ‘நோயாளிகள்’ என்று சொல்லக் கூடாது, ‘பயனாளிகள்’ என்று சொல்ல வேண்டும் என்ற உத்தரவுக்குப் பின்னால் ஒரு பண்பாடு இருக்கிறது. இதெல்லாம் பண்பற்ற பழனிசாமிக்குப் புரியாது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டார்கள். அதனை ஏற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதனை அறிவித்தார்கள். இதில் சொல்லாராச்சியாளர் பழனிசாமி என்ன குறை கண்டார்?

சமூக வலைத்தளத்தில் மருத்துவர் ஒருவர் எழுதி இருக்கிறார்… இதனை பழனிசாமிக்கு அறிவுப்புரிதல் இருந்தால் வாசிக்க வேண்டும்.

“மதுரையில் உள்ள ‘தோப்பூர் ஆஸ்டின் பட்டி அரசு நெஞ்சக மருத்துவமனை’, ஒரு காலத்தில் வேலிக்காத்தான் முள்காடுகள் சூழ்ந்த, மிகக் கொடூரமான, அச்சமூட்டுகிற வளாகமாக இருந்தது. பல ஆண்டுகளாக நீடித்த அந்த மருத்துவமனையின் இத்தகைய அவலநிலைக்கு, மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் ஒரு வழக்கு தொடுத்து முடிவு கட்டினார், ‘சம உரிமை அமைப்பு’ என்கிற சமூக நல அமைப்பின் நிறுவனத் தலைவரும், தீவிரமான சமூகநலச் செயற் பாட்டாளருமான எனதன்பு இளவல் திரு. ஆனந்தராஜ் அவர்கள்.

அவர் தொடுத்த வழக்கிற்குப் பிறகு, மருத்துவர் காந்திமதிநாதன் என்கிற உன்னதமானவொரு மகத்தான, ‘மருத்துவ மானுடன்’ அந்த மருத்துவமனையின் புதிய நிர்வாகியாகப் பணியேற்றார். அவர் மருத்துவமனையையே மாற்றி அமைத்தார். இந்த நிலையில், அந்த மருத்துவமனையின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளுமாறு ஒரு சிறப்பு அழைப்பாளராக என்னை அங்கு அழைத்துக் கொண்டு போனார், அன்புத்தம்பி ஆனந்தராஜ். அப்போது நெகிழ்ந்த மனநிலையில் நான் உரையாற்றினேன்.

‘நீங்கள் நோயாளிகள் அல்ல… இந்த அற்புதமான மருத்துவ மனையின் பயனாளர்கள். இந்த மருத்துவமனை, யார் யாருக்கு எப்படி எப்படிப் பயன்பட வேண்டுமோ அப்படியெல்லாம் பயன்பட்டுக் கொண்டி ருக்கிறது. இந்த மருத்துவமனையால் யார் யாரெல்லாம் எப்படியெப்படிப் பயன்பெற வேண்டுமோ அப்படியெல்லாம் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே உங்களில் ஒருவர்கூட நோயாளிகள் அல்ல, இந்த மருத்துவ மனையின் பயனாளர்கள்’ என்கிற செய்தியையே என்னுடைய செய்தியாக முன் வைத்து நான் எனது உரையை நிறைவு செய்தேன்.

அடுத்ததாக நன்றி சொல்ல முன்வந்த மருத்துவர் காந்திமதிநாதன் அவர்கள்,

‘இனி இந்த மருத்துமனையில், ‘நோயாளிகள்’ என்று எவரும் கிடையாது. இங்கே சிகிச்சை பெறுகிற அனைவரும் இதன் பயனாளர்கள்தான். இனிமேல் இந்த மருத்துவ மனையில், நோயாளிகள் என்று குறிப்பிடாமல், ‘பயனாளர்கள்’ என்கிற சொல்தான் பயன்படுத்தப்படும்’ என்று ‘பயனாளர்களின்’ வலுத்த கரவொலிக்கிடையே அறிவித்தார் மருத்துவர் காந்திமதிநாதன்.

அன்றுமுதல் இன்றுவரை கடந்த பத்து ஆண்டு களுக்கும் மேலாக, மருத்துவப் பயனாளர்கள்’ என்கிற சொல்லையே தனது நடைமுறைகளில் பயன்படுத்தி வருகிறது அந்த மருத்துவமனை!

தற்போது அச்சொல்லுக்கு, அதிகாரப் பூர்வமாக ஏற்பிசைவு அளித்து, ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ மனைகளில், ‘மருத்துவப் பயனாளர்’ என்கிற சொல்லையே பயன்படுத்த வேண்டும்!’ என்று அரசாணை வெளியிட்டிருக்கிறார், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதன் பொருட்டு அவருக்கு உளம் நிறைந்து நன்றி கூறுகிறேன்.

காசு வைத்துக்கொண்டு அதை ஆளுகிறவர்கள் காசாளர்கள். எழுத்துகளை ஆளுகிறவர்கள் எழுத்தாளர்கள். ஆனால் நோயுற்றவர்களை, ‘நோயர்கள்’ எனலாமே தவிர அவர்களை நோயாளிகள் என்பது தவறு! அவர்கள் நோய்களை வைத்துக் கொண்டு ஆளுகிறார்களா என்ன? என்பார், பெரும்புலவர் அய்யா கி.த.பச்சையப்பன் அவர்கள்” என்று எழுதி இருக்கிறார் அந்த மருத்துவர்.

ஒரு சொல் மாற்றமானது அந்த சமூகத்தையே பண்படுத்துகிறது. அழுக்கை துடைக்கிறது. அவமானத்தை அகற்றுகிறது. இதெல்லாம் பழனிசாமிக்குத் தெரியுமா? ‘கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்’ என்ற புத்திசாலி அவர். அவரிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

பெயரை மாற்றுவது சாதனையா என்று கேட்கிறார் பழனிசாமி. பெயரை மாற்றுவதுதான் சாதனை. பெயரில் என்ன இருக்கிறது என்று நினைக்கிறார் பழனிசாமி. பெயரில் தான் எல்லாம் இருக்கிறது.

மகள் நீலாம்பிகை படித்த பாட்டில், ஒரு சமஸ்கிருதச் சொல் இருந்ததால் மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் உருவாக்கிய மண் இது. சமஸ்கிருத,  ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக திராவிட இயக்கம் 100 ஆண்டுகளாக போராடி வரும் மண் இது. அக்கிராசனாதியை அவைத்தலைவர் ஆக்கியவர்கள் நாம். இப்போது அபேட்சகர்கள் இல்லை, வேட்பாளர்கள் தான் இருக்கிறார்கள். கான்பரன்ஸ் நடக்கவில்லை, மாநாடு தான் நடக்கிறது. விவாகம், திருமணம் ஆனது. இவை அனைத்தும் தமிழின் 100 ஆண்டு வரலாறுகள் ஆகும். இதையெல்லாம் பழனிசாமி அறிவாரா?

மாற்றுத் திறனாளிகள் உடலால் மட்டுமல்லாமல் உள்ளத்தாலும் வருந்தி வாழ்ந்தார்கள். அவர்களை ஊனமுற்றோர் என்பதில் இருந்து மாற்றி மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வைத்தார் கலைஞர். இந்த சொல் மாற்றத்துக்குள் அந்த தோழர்களுக்கு கிடைத்த சுகத்தை பழனிசாமி அறிவாரா?

அதே போல் திருநங்கைகளும், திருநம்பிகளும் அடைந்து வந்த மனத்துன்பம் ஏராளம். அதனையும் கலைஞரின் சொல்தான் மனதாரக் காத்து வருகிறது. இதனை பழனிசாமி அறிவாரா?

ஜாதி அடையாளம் கொண்ட விடுதிகளை சமூகநீதி என்று விடுதிப் பெயர்கள் வைத்ததை பழனிசாமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை போலும். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் தனது வீட்டு வாசலில் சைக்கிளில் சென்றார் என்பதற்காக கட்டி வைத்து அடித்த கதையை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அருந்ததியர் இனச் சகோதரர்களைவீட்டுக்குள் அனுமதிக்காமல் கார் பார்க்கிங்கில் உட்கார வைத்து சால்வை வாங்கிய மேட்டிமைத்தனைத்தையும் தான் நாம் பார்த்தோம்.

இது போன்ற நிலப்பிரபுத்துவக் குணங்கள்தான் இது போன்ற குற்றச்சாட்டுகளைச் சொல்ல வைக்கிறது.

நன்றி: ‘முரசொலி’  13.10.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *