கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு என்ற அதிசய மனிதர்! (1)

3 Min Read

வாழ்வியல் சிந்தனைகள்

கோவையில் அண்மையில் தமிழ்நாடுஅரசின் பொதுப் பணித் துறையால் அமைக்கப்பட்ட 10 கிலோ மீட்டர் நீளப் பாலத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பாலம் என்று பெயரைச் சூட்டினார்கள்.

உள்ளூர் மக்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் புதுமைகளையும் அவரது ஆற்றலை அறியும். பொறியியல், வேளாண்மை முதலிய பல துறைகளில் அவரது கண்டுபிடிப்புகள் பெரிதும் வியக்கத்தக்கவை.

ஓர் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சியாளர்!

அவரது ஒப்பற்ற  சுயசிந்தனைகள் பெற்றெடுத்தவையே

அவரது அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள்!

எளிய ஓர் ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்.  யு.எம்.எஸ். (United Motor Service)  என்று பல பேருந்துகளை மக்கள் நலனுக்காக உருவாக்கி, ஓட்டி, தனிப் பெருமை கொண்டவர்.

பிறகு  ‘ரேடியேட்டர்கள்’  இறக்குமதிக்காகக் காத்திருக்காமல் கோவையிலேயே அவற்றைத் தயாரிக்கும் தனித்த ஒரு நிறுவனத்தையே உருவாக்கிக்காட்டி வெற்றி பெற்றவர்.

அவரது கண்டுபிடிப்புகள்;  நாம் தினசரி  முகச் சவரம் செய்கிறோம். ஒரு வாரத்திலேயே பல முறை  ஷேவிங் பிளேடு – ஷேவிங் ஸ்டிக்ஸ்  மாற்றுவதற்கு பதில், ஒன்று, இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒரே கருவி பயன்படும் என்று கண்டுபிடித்தவர்.

மற்றவர்கள் நினைக்க முடியாததை அவர் தனது வழி தனிவழி என்று செயல் திறன் ஆற்றல் மூலம் நேர்த்தியாக  செய்துகாட்டியவர்.

ஒரு சிறு எடுத்துக்காட்டு:

மாணவர்களுக்கு ஓட்டுநர் – மெக்கானிக் பயிற்சி தரும் அமைப்பை   அமைத்தார். ஒரு வாரம், 7 நாள்களில் இரவு, பகல் பாராத பயிற்சி வகுப்பில் இடைவெளி பெறுவது சில மணிகள் என்பதாக வரையறுத்து ‘கடும் பத்தியம்’ போன்ற கட்டுப்பாட்டுடன்  நடத்திக் காட்டினார்.

அந்த வகுப்புகளுக்கு இலவச அனுமதிதான்!

திடீரென்று வகுப்புகளைப்பற்றி ஆராய நடு இரவில்கூட வந்து மாணவர்களின் கவனம் – ஈர்ப்பு எத்தகையது என்று கூர்ந்து கவனித்துப் பாராட்டிற்குரியவர்களுக்குப் பாராட்டு;  கண்டனம் – தண்டனைத் தர வேண்டியவர்களுக்குக் கடுமையான தனித் தண்டனை என்ற விசித்திர முறையைக் கையாண்டவர்.

பெரிய பெரிய இயந்திரங்களை யெல்லாம் புதுமை – புத்துலகு நோக்கிக் காலத்தை வென்று அவர் தயாரித்து அதை  மார்க்கெட்டிங் செய்ய ஒன்றிய  அரசிடமே சட்டப்படி அனுமதி கேட்டு வந்தார்; தொடர்ந்து அந்நாளைய ஒன்றிய அரசு (பெரிதும் கார்ப்பரேட் கனவான்களுக்குக் கண் ஜாடையிலே அவ்வரசு அனுமதியும் தரும்) இவர் ‘‘தெற்குப் பகுதி மனிதர்’’ என்ற வெறுப்பு அலை, ஒருபுறம் – எல்லாம் சேர்ந்து இவருக்குப் பல லட்சம் (அன்றைய அரசு) வருமான வரி போட்டு,  ஆதரவுக் கரம் நீட்டி ஊக்கப்படுத்த வேண்டிய அந்நாளைய ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையே காட்டி வருமான வரித்துறை, தொழில்  அனுமதித்துறை போன்றவைகளால்   புறக்கணிக்கப்பட்டதால் மனச்சலிப்பும், உளச்சோர்வும் கொள்ளும் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அவரது கண்டுபிடிப்புகளை – அனுமதி வழங்கப்படாத அத்தனை இயந்திரங்கள், கண்டுபிடிப்புகளை – சென்னை S.S.A.A. மைதானத்தில் (சென்னை மாநகராட்சிக்  கட்டடம் பக்கம் உள்ளது) காட்சியாக வைத்து தமிழ்நாட்டின் அத்தனைக் கட்சித் தலைவர்களையும் – அவர்கள் எவ்வளவுக் கொள்கை மாறுபாடு காரணமாக எதிரும் புதிருமாக இருந்தவர்களானாலும் ஒரே மேடையில் திரட்டி, ‘‘இவைகளை உடைக்கலாமா? வேண்டாமா?’’ என்று மக்களைத் திரட்டி கருத்துக் கேட்பு  அரங்கமாக நடத்தினார்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரள்,  பல தலைவர்கள் கூடிய கூட்டத்தில் உடைக்க வேண்டும் என்று பலரும், உடைக்கக்கூடாது என்றுபலரும் பேசினர். அக்கூட்டத் தலைவர்   தந்தை பெரியார் பேசு முன்னரே தனது ஆட்களைச் சம்மட்டியோடு தயார் நிலையில் நின்றவர்கள் ‘தடால்’, ‘தடால்’ என்று உடைத்தனர். அடுத்துத் தந்தை பெரியார் என்ன பேசினார்? சுவையான வரலாறு.

(நாளை கூறுகிறோம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *