‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ தமிழர் தலைவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை

5 Min Read

அபத்த உளறல்களும், அறியாமைப் பேச்சுகளும் ‘எடப்பாடி–யார்?’ என்பதைப் புரிய வைக்கின்றன!
*ஆம்புலன்ஸ்கள்மீது தாக்குதலுக்குத் தூண்டியவர் தானே இவர்?
* பெயர் மாற்றங்கள் ‘பண்பாட்டுப் புரட்சி’யின் வெளிப்பாடுகள் – புரிந்து கொள்ளுங்கள்!

அபத்த உளறல்களும், அறியாமைப் பேச்சுகளும் ‘எடப்பாடி–யார்?’ என்பதைப் புரிய வைக்கின்றன என்றும், ஆம்புலன்ஸ்கள்மீது தாக்குதலுக்குத் தூண்டியவர் தானே இவர்?  பெயர் மாற்றங்கள் ‘பண்பாட்டுப் புரட்சி’யின் வெளிப்பாடுகள்! என்பதை அறியாதவர் ‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை  பேசலாமா?  என்று கேள்வி எழுப்பியும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வருகின்ற 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமது தலைமையில் உள்ள அ.தி.மு.க. கட்சியை, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவைகளிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் அடகு வைத்துள்ள நிலையில் தொடர் பரப்புரை நடத்துகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்!

அபத்த உளறல்கள்

ஆனால் அந்தப் பரப்புரையில் நாளும் அவர் பேசும் பேச்சுகள், அபத்தமான உளறல்களாகவும்,  அரசியல் அறியாமையின் அப்பட்டமான வெளிப்பாடாகவும் அமைகின்றன. அவரின் கேலிக் கூத்தான, தரம் தாழ்ந்த வார்த்தைகள்  வாக்காளர்களுக்கும் மட்டும் அல்ல, நாட்டிற்கே ‘எடப்பாடி – யார்?’ என்பதைப் புரிய வைக்கும் பரிதாப நிலைக்குத்தான் அவரை ஆளாக்கியுள்ளன.

அவரது பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் உரையாற்றும்போது, கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ் பற்றி அவர் ஆவேசப்பட்டுப் பேசிய வன்முறை  தடித்த வார்த்தைகள் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் – அடுத்த முதலமைச்சர் கனவில் மிதந்து வரும் ஒருவர் பேசியது – எவ்வகையில் ஏற்கத்தக்கது? நியாயமானது?

‘ஆத்திரம் அறிவுக்கு விரோதி’ என்பதையும், ஆம்புலன்ஸ் நடைமுறை ‘அரிச்சுவடி’யையும்கூட அறியாமல்  அபத்தமாக   காலியாக இருந்த ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குக் குறுக்கே திட்டமிட்டு வந்ததாகக் கூறினார் – முதலமைச்சராக இருந்தவர்!

‘நோயாளிகளை’ – (அதுதானே  இன்று அவருக்குப் பிடித்த வார்த்தை; அதனால் ‘மருத்துவப் பயனாளிகள்’ என்றால் அவருக்குப் புரியாத, பிடித்தமில்லாத வார்த்தை) அழைத்து வருவதற்காக அப்போது ஆம்புலன்சுகள் காலியாகத்தானே கருவிகளோடு செல்லும், குறைந்தபட்ச அறிவுள்ளவர்களுக்குக் கூட இது தெரியுமே!

ஆம்புலன்ஸ் மீதான
தாக்குதல்களுக்குக் காரணம்

ஆம்புலன்ஸ் குறுக்கே வந்து விட்டதென்று ஆத்திரத்தோடு கண்டனம்  தெரிவித்தபோது, அவர் கூறிய வார்த்தைகள் எத்தகையவை? ‘‘இனி ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரையும் நோயாளியாக்கி ஆஸ்பிட்டலுக்கு அனுப்பும் நிலை ஏற்படும்’’ என்ற பேச்சு நியாயமா? கட்சியினரை வன்முறைத் தூண்டலுக்கு ஏவி விடும் பொறுப்பற்ற வன்முறைப் பேச்சு  அல்லவா? அதன் விளைவு அடுத்து   துறையூரில் அவரது நிகழ்ச்சியில், அவரது கட்சியினர்   வழி விடாது  ஆம்புலன்ஸ் ஒட்டுநரை அடித்துக் காயப் படுத்தியது உண்மையா இல்லையா?

இதற்கே அவர்மீது சட்ட நடவடிக்கைகள் பாய்ந்திருக்க வேண்டும்.

அடுத்து நேற்று  (12.10.2025) அவரது பரப்புரையில், அண்மையில் ‘திராவிட மாடல்’ அரசு  முதலமைச்சரின் ஆணையில் மருத்துவமனைகளில் ‘நோயாளி’ என்பதற்குப் பதிலாக ‘மருத்துவப் பயனாளர்கள்’ என்று பெயர் மாற்றம்பற்றி அறியாமையின் உச்சத்திற்குச் சென்று, அவமானத்தை அவரே தனக்குத் தானே வரவழைத்துக் கொண்டுள்ளார்.

‘‘இன்றுகூட செய்திகளில் பார்த்தேன். இனிமேல் மருத்துவமனையில் ‘பயனாளிகள்’ என்று சொல்ல வேண்டுமாம். ‘நோயாளி’ என்று சொல்லக் கூடாதாம். பெயர் வைக்கிறதில் ஒரு விவஸ்தை வேண்டாமா? ஸ்டாலின் அவர்களே இரண்டு பெயர்களை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள்.

அப்பா, அம்மா பெயரை மாற்றி விடாதீர்கள்.’’

இப்படிப் பேசும் இவர்கள் ‘அம்மா’ என்பதையே முன்பு மாற்றினார்கள்.  அண்ணா ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி என்பதைத் தவிர்த்து தனது ஆட்சியை ‘அம்மா’ ஆட்சி என்று கூறியதை ஏனோ வசதியாக மறந்து கூறியுள்ளார். பெயர் மாற்றத்தின் பின்னால் உரிய பெரிய காரணங்கள்பற்றிப் புரிந்து கொள்ளாமல் இப்படி உளறலாமா?

பெயர் மாற்றங்கள் ஏன்?

மனிதப் பண்பாட்டுக்காகவும், பண்பாட்டுப் புரட்சியாகவும் பெயர் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவது உரிமை, மனித நேயம், இவற்றைப் பொறுத்தது என்பது அவருக்குப் புரியவில்லையா? புரிந்தும் ‘அரசியல்’ ஆயுதம் என்று இப்படி அபத்தக் குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் – தி.மு.க. அரசு மீது கூறுவதா?

எம்.ஜி.ஆர் ஆட்சியில்கூட ‘மாயவரம்’ ஏன் ‘மயிலாடுதுறை’யாகியது என்பதாவது அவருக்குத் தெரியுமா?

‘அரிஜன நல இலாகா’  என்பது  ஆதிதிராவிடர் நலத்துறை என்று மாற்றப்பட்டது தெரியுமா?

‘‘ஊனமுற்றோர்’ என்பதை‘மாற்றுத் திறனாளி’ என்பதில் எவ்வளவு தன்னம்பிக்கை அவர்களுக்கு உருவாகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

சென்னை ராஜ்ஜியம் –
தமிழ்நாடு ஆனது தெரியுமா?

கொச்சையாக அழைக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தினர் ‘திருநங்கையர்’ என்றானதில் என்ன தவறு?  இவரது கட்சியில் ‘அண்ணா’  பெயர் உள்ளதே அந்த அண்ணா அவர்கள் ‘சென்னை ராஜ்ஜியம்’ என்பதைத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றினாரே அது பற்றியாவது அவருக்கு ஏன் – எதற்கு என்று புரியுமா?

ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நமது சகோதரர், சகோதரிகளை வெளிப்படையாக குற்றப் பரம்பரையினர் (Criminal Tribes) என்று இருந்ததை ‘சீர் மரபினர்’ என்று மாற்றியது எத்தகைய ‘மானமீட்பு’ என்பதாவது அவருக்குப் புரியுமா?

அடகு வைக்கப்பட்ட அ.தி.மு.க.

‘இனி எக்காலத்திலும் பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணி கிடையாது’ என்று கூரை ஏறி கூவியவர்,  இப்படி ‘அமித்ஷா’ அ.தி.மு.க.வை ‘அடகு தி.மு.க.வாக்கி’ விட்டு, கூட்டணிக்கு வருவதற்கு   ஆறு மாதங்களாக அழைத்து அலுத்துப் போய், தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழாதா என்று வாய்ப்பிளந்து நிற்பவர், இப்படி வக்கணைப் பேசலாமா?

நோயாளி என்றால் மனரீதியாக ஒரு தாக்குதல். ‘மருத்துவப் பயனாளி’ என்பது அவர்களுக்குப் ஒரு புது நம்பிக்கை – கவுரவமான அந்தச் சொல்மூலம் கிடைக்கிறது.

இவையெல்லாம் புரியாமல்  இப்படி நாளும் பேசி,  நாட்டிற்கு அவர் தன்னை (எடப்பாடி) – யார் என்று காட்டிக் கொள்கிறார்.

பேசுங்கள்; நிறைய பேசுங்கள்; அன்றாடம் பேசுங்கள்.

உங்களது அரசியல் – அறிவு ஊற்று எப்படி என்பதை அந்தப் பேச்சுகள் புரியாதவர்களுக்குப்  புரிய வைக்கும்.

புரிந்த சிலரும்கூட தான் உங்களை  நாளும்  விமர்சிக்கின்றனரே.

‘‘தன்னை வென்றால் தான் தரணியை வெல்ல முடியும்’’ எடப்பாடியாரே புரிந்து கொள்ளுங்கள்.

‘‘இந்த லேடியா?, மோடியா?’’ என்று ‘அம்மா’ கேள்வி கேட்டதை  மக்கள் மறக்க மாட்டார்கள், ஆனால் நீங்கள் மறந்து விட்டீர்களே!

அந்தோ பரிதாபம்! பரிதாபம்!!

கி.வீரமணி


தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை
13.10.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *