‘‘உலகின் துயரத்தைப் போக்கவே வால்மீகி இராமாயணத்தைப் படைத்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பகவான் ராமர் எப்போதும் நம்முடன் இருந்தாலும், அவரை அனைவரது வீடுகளுக்கும், வாழ்க்கையிலும் கொண்டு சென்றது வால்மீகிதான்’’ என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ‘‘இந்தப் பாரம்பரியத்தை மனித குலம் பொறுப்புணர்வுடன் முன்னோக்கி எடுத்துச் செல்லவேண்டும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
(Way2 News, 9.10.2025).
சுருதிகள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் எனப்பட்டவை எல்லாம் பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடிக்கக் கூடியவை – பிறப்பின் அடிப்படையில் அவர்களை ஆதிக்க நிலையில் நிலை நிறுத்துபவை!
450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்ற கட்டுக்கதையை வைத்து, ராமன் கோவிலைக் கட்டியவர்கள் இப்படித்தானே பேசியாகவேண்டும்; அதுவும்
ஆர்.எஸ்.எஸ். தலைவராயிற்றே! அப்படித்தான் பேசுவார்.
ஒரு கேள்விக்கு
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மட்டுமல்ல – ஜீயர்கள், சங்கராச்சாரியார்கள், குருமூர்த்திகள் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்!
வால்மீகி இராமாயணம் உத்தரகாண்டத்தில் சம்புகன் வதை என்று வருகிறதே! அது என்ன சம்புக வதை?
சம்புகன் தவமிருந்தான், அதனால் ஒரு பார்ப்பனக் குழந்தை மரணம் அடைந்துவிட்டதாம்; சம்புகன் தவம் செய்யக் கூடாதா? ஆம், கூடாது! ஹிந்து மதப்படி சூத்திரன் தவம் செய்யக்கூடாது; சம்புகன் சூத்திரனாயிற்றே!
‘பார்ப்பனக்’ குழந்தையின் தந்தை, ‘‘சூத்திரன் தவமிருந்ததால்தான் தர்மம் கெட்டுப் போய்விட்டது; தர்மம் கெட்டதால்தான் பார்ப்பனக் குழந்தை மரணம் அடைந்துவிட்டது’’ என்று கதறினான்!
அரசனாகிய ‘இராமச்சந்திர பிரபு’ என்ன செய்கிறான்? சம்புகனைத் தேடிச் சென்று, அந்த சூத்திர சம்புகனின் தலையை வாளால் வெட்டுகிறான் (கருணையே வடிவானவன் ராமனாம் – நம்பித் தொலையுங்கள்!).
என்ன ஆச்சரியம்!
சூத்திரன் சாகிறான்; அக்கணமே செத்துப் போன பார்ப்பனக் குழந்தை உயிர் பிழைத்தது!
இந்த இராமாயணம் உலகின் துயரத்தைப் போக்கத்தான் தோற்றுவிக்கப்பட்டதாம்!
மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து வாலியைக் கொன்றவனும் சாட்சாத் கோழையும் இதே இராமன்தான்.
இந்த இராமாயணம்தான், அதன் கதாபுருஷன் இராமன்தான் உலகின் துயரத்தைப் போக்க உண்டாக்கப்பட்டதாம்!
ஓர் உண்மை மட்டும் தெற்றெனப் புலனாகிறது. உலகின் துயரம் போக்க என்றால், அது பார்ப்பனர்களுக்கு ஏற்படும் துயரம்தான்?! இந்த உலகத்தைப் பார்ப்பனர்களுக்காகத்தான் பிர்மா படைத்தான் என்பதுதானே மனுதர்மம்!
– மயிலாடன்