பெங்களூரு, மே 21 கருநாடக தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற் றுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் சித்தராமையா, நேற்று (20.5.2023) வெளியிட்டார்.
கருநாடக முதலமைச்சராக பொறுப்பேற்ற சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது அமைச்சரவை சகாக்களுடன் நேற்று பிற்பகலில் பெங்களூருவில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு சென்றார். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று கோப்புகளை பார்வையிட்டனர்.
பின்னர், முதலமைச்சர் சித்த ராமையா தலைமையில் முதல் அமைச் சரவைக் கூட்டம் நடந்தது. அதில், தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் சித்தராமையா ஆலோசனை நடத்தி னார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதம் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000, டிப்ளமா படித்தவர்களுக்கு ரூ.1,500 உதவித் தொகை என காங்கிரஸ் வழங்கிய 5 முக்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து முதல் அமைச் சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட் டது. அதை நிறைவேற்ற கொள்கை அளவில் இன்றே அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அதற்கான உத்தரவும் இன்றே பிறப்பிக்கப்படும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும். முந்தைய பாஜக ஆட்சியில் மாநில நிதி நிலைமை சீர்குலைக்கப்பட்டுள்ளது. எனினும், 5 வாக்குறுதிகளை அமல்படுத்துவதற் கான ஆணை அடுத்த வாரம் நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் வெளியிடப்படும். பிறகு 5 திட்டங்களும் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த கருநாடக மக்களுக்கு மனப்பூர்வமான நன்றி. நாங்கள் வாக்குறுதி அளித்தவாறு ஊழலற்ற, நேர்மையான அரசை அளிப்போம் என உறுதியளிக்கிறேன். நாங்கள் அளித்த வாக்குறுதிகள் ஒவ் வொன்றையும் கட்டாயம் நிறை வேற்றுவோம். ஏழை எளியவர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், விவசாயிகள் நலனுக்காக இந்த அரசு செயல்படும்’’ என்றார்.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியபோது, ‘‘ரூ.2000 நோட்டுகளை பிரதமர் மோடி எதற்காக அறிமுகப்படுத்தினார், இப்போது எதற்காக ரத்து செய்தார் என்றெல்லாம் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிப்பது இல்லை. கடந்த முறை பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாகினர். இந்த முறையும் மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.