மலையகத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமிடையே உள்ள தொப்புள்கொடி உறவை யாராலும் பிரிக்க முடியாது!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
இலங்கையில் நடைபெறவிருந்த மலையகத் தமிழர்கள் மாநாட்டில், தமிழ்நாடு அமைச்சரவை சார்பில் பங்கேற்க இருந்த அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களைப் பங்கேற்கவிடாமல் குறுக்குவழியில் செயல்பட்டதும்,தமிழ்நாடு முதல மைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்தினை ஒளிபரப்பாமல் செய்ததும் ஒன்றிய அரசின் அற்பத்தனத்தையே வெளிப்படுத்தும். மலை யகத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக் குமிடையிலான தொப்புள்கொடி உறவை இத்தகைய செயல்களால் மறைக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இலங்கையில் பொருளாதார வளர்ச்சி பெரிதும் அங்கு செழித்து வளர்ந்த தேயிலைத் தோட்டங்களாலும், காப்பித் தோட்ட எஸ்டேட்டுகளாலும் உருவாக்கப்பட்டது.
மலையகத் தமிழர்களின் நிலை!
இதற்காக தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப் பட்டு, கடும் உழைப்பை – ரத்தத்தை வியர்வையாக்கிய வர்கள் நமது மலையகத் தமிழர்கள் என்பது மறுக்கப்பட முடியாத வரலாற்று உண்மை.
அவர்களது உரிமைக்காக அங்கு நீண்ட நாள்களாகப் போராடிய மதிப்பிற்குரிய கருணாகர தொண்டைமான். அவர் வழியில் வந்தவர்கள் தலைமை மற்றும் அமைச்சர் பொறுப்பில் இருந்தும், பலவகையில் மலையகத் தமிழர் கள் வாழ்வுரிமைக்காகப் போராடி மற்ற பல மலையகத் தலைவர்களும் மலையகத் தமிழர்களின் நலவாழ்வுக்குப் போராடியும் வருகிறார்கள்.
அந்த மாநாட்டில் பங்கேற்க மலையக மக்களின் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
மலையகத் தமிழர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்து ஒளிபரப்புவதற்கு முட்டுக்கட்டை
முதலமைச்சர் அவர்கள் உடல்நிலை காரணமாக நேரடியாகச் சென்று அங்கு கலந்துகொள்ள இயலாத நிலையில், அவரது சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை அனுப்ப ஏற்பாடாகி இருந்தது.
ஆனால், மாநாடு நடைபெறவிருந்த முதல் நாள் இரவு வரை அமைச்சர் அவர்களுக்கு இலங்கை செல்ல ஒன்றிய அரசு அனுமதி தராமல் தாமதம் செய்தது. இதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கடைசி நேரத்தில் அங்கு செல்ல முடியாத சூழல் உருவானது.
அம்மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களது உரையும் ஒளிபரப்பப்படாத சூழல் உருவாக்கப்பட்டது. இது ஏதோ எதேச்சையாக நடைபெற்றதாகக் கருத முடியாது.
ஒன்றிய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்!
ஆனால், தமிழ்நாடு அமைச்சர் பயணம் தடை பட்டும், முதலமைச்சர் உரை – வாழ்த்தினை அங்கே கூற வேண்டியதைத் தடுத்தும் நடந்ததன் பின்னணியில் யார் இருந்திருப்பார்கள் என்பது எவருக்கும் நன்கு விளங்கவே செய்யும்.
இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இது ஒன்றிய அரசுக்கு அழகாகுமா? பயண அனுமதி வழங்குவதற்கு ஏன் தாமதம்?
இதை சிறுமதி, சின்னத்தனம் என்பதைத் தவிர வேறு என்ன சமாதானம் கூற முடியும்?
வரலாற்றை அற்பத்தனங்களால்
மறைக்க முடியாது!
கப்பல் கப்பலாக இலங்கை மக்களுக்கு வேறுபாடு எதையும் கருதாது, அத்தியாவசியப் பொருள்களை அனுப்பியவர் – நமது தமிழ்நாட்டு முதலமைச்சர் என்பதை மறைக்க முடியுமா?
அதற்கான ‘‘பரிசாக” இப்படி குறுக்குச்சால் ஓட்டி தடையைத் தந்திரமாக ஏற்படுத்தியது வன்மையான கண்டனத்திற்கும், பண்பற்ற நிலைக்கும் உரியதாகும். மலையகத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவு, உணர்வை, வரலாற்றை இப்படிப்பட்ட அற்பத்தனங்கள் மூலம் தடுக்க நினைத்தால், அவர்களின் அறியாமையைக் கண்டு எவரும் பரிதாபப்படத்தான் வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.11.2023