கேள்வி 1: ‘பகுத்தறிவுச் சிந்தனையும்-சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு கருப்புச் சட்டைக்காரர் ஓர் ஊரையே முன்னோக்கி இழுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவர்’ என்றுகூறி, மறைமலை நகரில் மக்கள் கடலாய்-கருஞ்சட்டைக் கடலாய் காட்சியளித்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா (04.10.2025) மாநாட்டில் ‘கருஞ்சட்டைக்காரர்களுக்கு – ஒரு சல்யூட்’ என திராவிட ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சல்யூட் அடித்த அந்தத் தருணத்தில் தங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?
– ந. கண்மணி, காஞ்சிபுரம்
பதில்: நமது அறிவு ஆசானின் தொண்டறமும், தலைமையும், அதன் வெற்றிச் சாதனைகளும் பூத்துக் குலுங்கிக் கனியாக – பலதலைமுறைகளுக்குப் பின்னும் இது வாழும் – வளரும் மக்கள் இயக்கம் என்ற பிரகடனம், உண்மையின் தெறிப்பு, பெரியாருக்குப் பின் இந்த இயக்கம் இருக்காது என்று எள்ளி நகையாடி, தம் ஆசையை வெளிப்படுத்தியவர்
களுக்கு காலம் உணர்த்திடும் பாடம். பெரியாரின் ‘சட்டாம்பிள்ளைக்கு’ இது
வாழ்நாள் இளமையைத் தந்த மா மருந்தாக இருந்தது.
கேள்வி 2: ‘2050க்குள் மீன்களைவிட அதிகமாக நெகிழியே கடலில் மிதக்கக்கூடும்’ என்று பிரபல தமிழ் நாளேடு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருப்பதை ‘திராவிட மாடல்’ ஆட்சி கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமா?
– த. முனியாண்டி, ஆரணி.
பதில்: ‘திராவிட மாடல்‘ முதலமைச்சரின் விழியும் பார்வையும் எப்போதும் அகலத் திறந்து ஆழமாகச் சிந்தித்து ஆவன செய்யும் என்பதால் அவ நம்பிக்கை தேவையே இல்லை.
கேள்வி 3: மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் பொதுமக்களை ‘நோயாளிகள்’ என்று அழைக்கும் நிலையே காணப்படுவதால், இனி அவர்களை ‘மருத்துவப் பயனாளிகள்’ என அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது படி மருத்துவப் பயனாளிகள் அடைக்கூடிய பயன் என்ன?
இ.அன்புச்செல்வன், துறையூர்
பதில்: ‘உடல் ஊனமுற்றவர்’ என்ற சொல்லைக் கேட்டு தங்களை அறியாமல் தாழ்வு உணர்வில் உறைந்தவர்கள் ‘மாற்றுத்திறனாளி’ (கலைஞர் ஆட்சியில்) என்றவுடன் அவர்களிடம் பிறந்த அந்த மனவளமும், நம்பிக்கையின் பரிணாமும் ‘மருத்துவ பயனாளிகள்’ எனப்படுவதின் மூலம் மருத்துவ சிகிச்சையில் இருப்போரும் பெறுவர். ‘பெயரில் என்ன இருக்கிறது, பெயரை மாற்றினால் நோய் தீர்ந்து விடுமா?’ என்போர் முதலில் நோய் தீர மனத்தெளிவு முக்கியம் என்பதை உணராதவர்கள் – பிறகு உணருவார்கள்.
கேள்வி 4: கரூர் துயரச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டவுடன் இரவோடு இரவாக ஜெட் வேகத்தில் பறந்து சென்று அங்கேயே தங்கி களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அனைத்து உதவிகளையும் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டுகின்ற நிலையில், நடிகர் ஒருவர் ‘வீடியோ காலில்’ பேசிக் கொண்டிருப்பது அரசியல் வரலாற்றில் ஓர் அவலம் எனலாமா?
– ச. கருப்பையா, கரூர்.
பதில்: வரலாற்றின் அவலம் என்பதை விட ‘வரலாற்றின் அபத்தம்’ என்பதே பொருத்தம்! காலம் அவரது அரிதாரத்தைக் கலைத்திடும். அவரது உண்மை சரக்கை உலகத்திற்கு உணர்த்தியுள்ளது என்பதை எவரே மறுப்பர்?
கேள்வி 5: உலகமே உற்று நோக்கும் வகையில் தங்கள் தலைமையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா (04.10.2025) மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது, இந்த வையகம் உள்ளவரை பேசுபொருளாக அமையுமா?
– எஸ். பத்ரா, வந்தவாசி.
பதில்: ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று உணரும்; உலகத்தின் வரலாற்றின் வைர வரிகளாக என்றும் ஒளியோடு பாடம் கற்றுக் கொடுக்கும் – நமது மீட்சிக்கு!
கேள்வி 6: பீகார் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து வெளிநாட்டினர் எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்று சொல்லும் துணிச்சல் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதற்கு உரியவர்களிடம் இருந்து பதில் இல்லையே – ஏன்?
– ம. கண்ணன், கருங்குழி.
பதில்: திருடனைத் தேள் கொட்டும் போதுள்ள நிலை போலவே அது!
கேள்வி 7: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. பி.ஆர். கவாய் மீது காலணி வீச முயன்ற ராகேஷ் கிஷோர் எனும் வழக்குரைஞர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நடந்த சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று பேட்டி அளித்திருப்பது பற்றி?
– இரவி கார்த்தி, புதுடில்லி.
பதில்: ஆரியத்தின் அடிமையானால் அறியாமை மட்டுமல்ல, ஆணவமும் அத்தகைய மூடத்தனத்திற்கு முன்னுரையிடும் – என்பது புரிகிறதா? இன்று சட்டம் மவுனமாக இதை விட்டால் அவமானம் – அதற்குத்தான், தலைமை நீதிபதிக்கு அல்ல!
கேள்வி 8: அறிவியல் புரட்சியின் அடுத்த டிஜிட்டல் புரட்சியாக, இனி பின் நம்பர் இல்லாமல், யு.பி.அய். யில் முகத்தைக் காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும் என்பதும், ஏ.டி.எம். எந்திரத்திலும் பணம் வரும் என்பதும் கிராப்புற ஏழை எளிய பாமர மக்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமையும்?
– வி. வித்யாசாகர், ஆந்திரா.
பதில்: படித்தவர்களே ஏ.டி.எம். இல் பணம் எடுக்கும் போது ஏமாறுகிறார்கள். எளிய பாமர மக்களுக்கு இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற சந்தேகத்திற்குரிய கேள்விக்கு அறிவை விரிவு செய்து ஆய்வது முதற்கண் தேவை.
கேள்வி 9:. ‘தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய் வெளியே வர பயப்படுகிறார்’ என்று அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்திருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என்று கருதலாமா?
– அ.அப்துல்சமத், வேலூர்.
பதில்: கேள்வியும் நீங்களே, பதிலும்
நீங்களே – நன்றி!
கேள்வி 10: ‘இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்கடி தம்பட்டம் அடித்துக்கொள்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகா?
– ரேவதி சுதாகர், புதுவை.
பதில்: அவர் விரும்பும் பதவிக்கு அழகா என்பதை விட அவரது நோபல் பரிசு விருப்பத்திற்கு விளம்பர வெளிச்சம் – ஒரு கை ஓசையில் என்றும் மகிழ்பவர் அவர்!