தஞ்சை, அக்.11- திருச்செந்தூர் கோவி லுக்குச் சென்று திரும்பிய போது காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் செங்கல்பட்டை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அய்யனார் கோவில் தெரு கோட்டாகுப்பத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 50). இவர் தனது உறவினர்களான சுகன்யா (33), லதா(50), கீர்த்திகா(25), சிந்து(23), வினோ தினி (19), அரிகரன் (12), மனீசா (1), சிறீ நிகா(2) உள்பட 10 பேருடன் ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.
பின்னர் அவர்கள் நேற்று (10.10.2025) காலை கிழக்குக் கடற்கரை சாலைவழியாக மீண்டும் செங்கல்பட்டுக்குக் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அருள்தாஸ் காரை ஓட்டினார்.
கார்-லாரி நேருக்கு நேர் மோதல்
தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம் – புதுப்பட்டினம் நிழற்குடை அருகே கார் வந்தபோது, எதிரில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஒரு லாரி சென்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும், காரும் நேருக்கு தேர் மோதிக்கொண்டன.
2 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் செல்வம், சுகன்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கீர்த்திகா, சிந்து, காரை ஓட்டிச்சென்ற அருள்தாஸ், லதா, வினோதினி, அரிகரன், மனீசா, சிறீநிகா ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் பீமாராவை (வயது 28) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.