சென்னை, அக்.10- விழாக் காலங்களில் பலகாரம் தயாரிப்பவர்கள் விதிமுறையை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிக அபராதம்
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
விழாக் கால இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, உணவுப் பொருட்களை மற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் முன்பு அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ் பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும். உரிமம் இல்லாமல் உணவு வணிகம் புரிவது சட்டப்படி குற்றமாகும்.
மேலும், உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி ரூ.10 லட்சம் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளது. பால்பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும், பால் அல்லாத பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும் தனித்தனியே பொட்டலமிடுதல் வேண்டும். உணவு தயாரிப்புக்கு தரமான எண்ணெய், நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு மூலப்பொருட்களை பலகையின் மீது மூடிய நிலையில் வைத்திருத்தல் அவசியம்.
தகுதிச் சான்று
பேக்கிங் செய்யப்படும் உணவுப் பொட்டலங்கள் உணவுப் பாதுகாப்பு லேபிள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பரிசுப் பெட்டிகளில் பேக்கிங் செய்யப்படும் இனிப்பு, காரம், உலர்ந்த பழங்கள் போன்ற பொட்டலங்கள் கண்டிப்பாக லேபிள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். உணவு கையாளுபவர்கள் அனைவரும் மருத்துவத் தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.
வெற்றிலை, புகையிலை மெல்லுதல், புகைப்பிடித்தல், எச்சில் உமிழ்தல் போன்ற செயல்பாடுகளை உணவு தயாரிக்கும் வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. பணியாளர் கள் அனைவரும் தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது அவர்களுக்கு உரிய பதில் அளிக்கும் வகையில் பொறுப்பாளர் ஒருவரை நியமிக்கவேண்டும் உணவு பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை 944404232 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் மற்றும் டி.என்.எப்.எஸ்.டி. செயலியிலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.