சென்னை: அக். 10- ”பிஎச்.டி., படிப்பு மாணவர் சேர்க்கையில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது,” என, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் தலைமை செயலர் வின்சென்ட் தெரிவித்தார்.
மறைந்த இயற்பியல் பேராசிரியர் ஜி.என். ராமச்சந்திரனின் 103ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மன்றம் சார்பில், ‘டிரிப்பிள் ஹெலிக்ஸ் – 2025’ என்ற தலைப்பில், அறிவியல் கருத்தரங்கு, சென்னை பல்கலை கிண்டி வளாகத்தில் 8.10.2025 அன்று நடந்தது.
இதில், ஜி.என். ராமச் சந்திரன் குறித்து, கல்லுாரி மாணவர்கள் இடையே, ‘ஆய்வு அறிக்கை’ சமர்ப் பிக்கும் போட்டி, துவக்கி வைக்கப்பட்டது.
கருத்தரங்கில், தமிழ் நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் தலைமை செயலர் வின்சென்ட் பேசியதாவது:
பேராசிரியர் ஜி.என். ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் அறிவியல் சொத்து. இவர் ‘ட்ரக் டிஸ்கவரி’ என்ற பெயரில் மேற்கொண்ட ஆராய்ச்சி அடிப்படையில், இன்று உலக நாடுகளில், பல்வேறு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. மேலும், ‘ராமச்சந்திரன் பிளாட்’ எனும் இவரது கோட்பாடு, மருத்துவ துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அறிவியல் தொழில் நுட்பத்தை பொறுத்தவரை, தமிழ்நாடு சிறந்த இடத்தில் உள்ளது. நாட்டிலேயே அதிகப்படியான ஆய்வுக் கட்டுரைகள், தமிழ்நாட்டில் தான் பிரசுரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு காப்புரிமை பெறுவதிலும், நாம் தான் முதலிடத்தில் உள்ளோம். அதேபோல், ‘பிஎச்.டி.,’ மாணவர் சேர்க்கையிலும், தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. கடந்த அய்ந்து ஆண்டில் மட்டும், 43,913 மாணவர்கள், ‘பிஎச்.டி.,’இல் சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.