திருச்சி, அக். 10- பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் 08.10.2025 அன்று காலை 9 மணியளவில் ‘உலக சேவை நாள் மற்றும் கண் பார்வை பாதுகாப்பு குறித்த’ மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
இப்பேரணியை திருச்சி மாநகராட்சி காவல்துறை ஆணையர் காமினி கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்சி மாநகர துணை ஆட்சியர் செல்வி தீப்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உலக சேவை நாள் குறித்தும் கண் பார்வை பாதுகாப்பு குறித்தும் பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் தலைவர் லயன் சுதா பன்னீர் செல்வம், லயன் பன்னீர் செல்வம், லயன் ஸ்டாலின், மாக்ஸி விஷன் கண் மருத்துவமனையின் மருத்துவர் மஞ்சுளா மற்றும் திருச்சி மாவட்ட தேசிய மாணவர் படையின் குழுத் தலைவர் கர்னல் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
தொண்டற உள்ளத்தோடு…
மக்களின் நலவாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான சேவைகளை தொண்டற உள்ளத்தோடு தொடர்ந்து செய்வதனையும் கண் பார்வை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடைபெற்ற இப்பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலு வலர் பேராசிரியர் ஏ. ஜெசிமா பேகம், பேராசிரியர் தினேஷ், பேராசிரியர் பிரகதி, பேராசிரியர் கீர்த்தனா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி கலையரங்கம் வளாகத்தில் நிறைவு பெற்றது. திருச்சி மாவட்டத்திலுள்ள 32 அரிமா சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய இம்மாபெரும் விழிப்புணர்வு பேரணியை பன்னாட்டு அரிமா சங்கம் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.