தாம்பரம்: திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., உரை
தாம்பரம், மே 22 ‘‘தந்தை பெரியாரின் கொள்கைகள், கருத்துகள் ஆழமானவை, நேர்மையானவை, எதைப்பற்றியும் அஞ்சாதவை” என்றார் தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண்முகம் அவர்கள்..
திராவிடர் தொழிலாளர் கழக
4 ஆவது மாநில மாநாடு
கடந்த 20.5.2023 அன்று காலை சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாட்டினைத் தொடங்கி வைத்த தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநி லங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண்முகம் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
அவரது தொடக்கவுரை வருமாறு:
எங்களுக்கெல்லாம் ஆக்கமும், ஊக்கமும் கொடுப்பவர் ஆசிரியர்
திராவிடர் கழக தொழிலாளர் அணியின் 4 ஆவது மாநில மாநாட்டிற்கு வருகை தந்து, எங் களுக்கெல்லாம் ஆக்கமும், ஊக்கமும் தர பல்வேறு கருத்துகளை எடுத்துச் சொல்வதற்காக வருகை தந்துள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பு செய்துகொண்டிருக்கின்ற இயக்கத்தினுடைய முதுபெரும் தலைவர்களில் ஒருவரான அன்பிற்குரிய பூங்குன்றனார் அவர்களே,
எனக்குப் பின் இங்கே உரையாற்றவிருக்கின்ற குமரேசன் அவர்களே, வழக்குரைஞர் மதிவதனி அவர்களே, கருணாநிதி அவர்களே, துரை.சந்திர சேகரன் அவர்களே, அனைவரையும் வரவேற்று உரையாற்றிய போக்குவரத்துத் துறையைச் சார்ந்த அன்பிற்குரிய சகோதரர் மோகன் அவர்களே,
எனக்குமுன் உரையாற்றி பல கருத்துகளை எடுத்துச் சொல்லி அமர்ந்துள்ள அன்பிற்குரிய சகோ தரி வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,
திரளாகக் கூடியிருக்கக் கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, அன்பு சகோதர, சகோதரிகளே, என்னோடு தொ.மு.ச. பேரவையிலிருந்து வருகை தந்துள்ள பேரவையினுடைய பொருளாளர் நடராசன் அவர்களே, அமைப்புச் செயலாளர் வேலுசாமி அவர்களே, தனசேகர், பொன்னுராம், அருணகிரி நாதன் ஆகியோர்களே, உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநில மாநாட்டினைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் அய்யா அவர்களும், கவிஞர் அவர்களும் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்கள்.
எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டேன்!
நான் எந்தவித மறுப்பும் சொல்லாமல் அதனை ஒப்புக்கொண்டேன். ஆனால், திட்டமிட்டபடி 7 ஆம் தேதி மாநாடு நடப்பதற்கு – திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத் தினால் அன்று நடைபெறாமல், இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டது என்பதையும் என்னிடம் தெரி வித்தார்கள்.
தாய் வீட்டிற்கு வந்து உரையாற்றுவதற்கு
ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது
அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்று சொன்னால், இங்கு வந்து இந்த மாநாட்டினைத் தொடங்கி வைக்கும்பொழுது, எனக்கு ஓர் உணர்வு – தாய் வீட்டிற்கு வந்து உரையாற்றுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது என்பதைத்தான் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
வழக்குரைஞர் அவர்கள் இங்கே எடுத்துக் கூறி னார். தந்தை பெரியார் அவர்களுடைய கொள் கைகள், கோட்பாடுகள் இவை அனைத்தையும் அறிந்தவர்கள்தான் நீங்கள். அதை நான் உங்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவேண்டிய அவசிய மில்லை.
இருப்பினும், இந்தத் தொழிற்சங்கம் என்பது எப்படி இருக்கின்றது என்பதை நாம் பார்க்கின்றபொழுது, அதிகமான பணிகள் நமக்கு இருக்கின்றன என்பதை சற்று கவனத்தில் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
தந்தை பெரியார் தன்வாழ்நாள் முழுவதும் உழைத்து சமத்துவத்தை உருவாக்கிக் கொடுத்தார்!
பல்வேறு பாகுபாடுகள் – மேடு பள்ளமாக இருந்த நிலங்களைத் திருத்தி, சமப்படுத்தி, வயல்களாக்கி, கழனிகளாக்கி அதில் பயிர் செய்து வாழ்ந்த இனம் நாம். நிலமே மேடு பள்ளமாகத்தான் இருந்தது. அதைவிட மோசமாக சமுதாயம் இருந்தது. அந்த சமுதாயத்தை சரி நிலைப்படுத்துவதற்கு தந்தை பெரியார் அவர்கள், வாழ்நாள் முழுவதும் உழைத்த உழைப்பினால், நமக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கின்ற அந்த நிலத்தில் வாழ்கின்ற நாம், கொஞ்சம் கொஞ்சமாக அந்த சமத்துவத்தைவிட்டுப் பின்னோக்கிச் சென்று விடுகின்றோம்.
அதைத்தான் நாம் நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும்.
தொழிலாளர்கள் மத்தியில் அந்த உணர்வுகள் இன்னமும் அதிகம் தேவைப்படுகின்றது. தந்தை பெரியர் அவர்கள் தொடர்ந்து தேவைப்படுகின்றார் என்பதற்குப் பல்வேறு உதாரணங்களை நாம் எடுத்துச் சொல்லலாம்.
ஓர் இரண்டாண்டுகளுக்கு முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த ஓர் இயக்கம், அதனுடைய தொழிற்சங்கம் ஏ.அய்.சி.சி.டி.யூ. என்று சொல்லக்கூடிய அந்த இயக்கத்தின் சார்பில் பஞ்சாபில் ஒரு மாநாடு நடத்தினார்கள்.
பெண்களுக்கென உழைத்த ஒரு பெருந்தலைவர் தந்தை பெரியார்
அவர்களிடம் நான் அடிக்கடி பழகக்கூடியவன். அவர்களிடம் சொன்னேன், ‘‘எல்லா சமத்துவமும் பேசுகின்றீர்கள்; பெண்களுக்கென உழைத்த ஒரு பெருந்தலைவர் இருக்கின்றார் என்றால், அது தந்தை பெரியாரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது” என்று தெரிவித்தேன்.
பெரியாருடைய கருத்துகளைப்பற்றி இரண்டு நாள்கள் பாடம் எடுத்தேன். அதனுடைய விளைவாக, அந்த மாநாட்டிலே, பெரியார் அரங்கம் என்ற ஒரு பொருட்காட்சியை வைத்து, அதில் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூல் உள்பட பல்வேறு நூல்களை மொழியாக்கம் செய்து வைத்திருந்தார்கள். அந்த ஒளிப்படத்தையெல்லாம் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன்.
எதற்காக இதை நான் சொல்கின்றேன் என்றால், கருத்துகள் ஆழமானவை,நேர்மையானவை, எதைப் பற்றியும் அஞ்சாதவை.
அப்படிப்பட்ட கருத்துகளை சொல்லக்கூடிய ஒரே ஒரு மனிதர் தந்தை பெரியார் ஒருவர்தான்.
எனக்குக்கூட அந்த வாசனை கொஞ்சம் இருப்ப தினால்தான், சில சமயம், பல பேருக்கு முன் நான் எதிரியாகக்கூட இருக்கிறேன்.
கருத்துகளைச் சொல்லும்பொழுது
ஆணவம் இருக்கவேண்டும்!
ஏனென்றால், கருத்துகளைச் சொல்லும்பொழுது கொஞ்சம் தொய்வுகள் ஏற்பட்டுவிடுமேயானால், அந்தக் கருத்துகளுக்கு வேண்டிய பலன் கிடைக்காது. ஆகையால், கருத்துகளைச் சொல்லும்பொழுது அந்த ஆணவம் இருக்கவேண்டும். அந்த ஆணவத்தோடு நாம் அந்தக் கருத்துகளை எடுத்துச் சொன்னால்தான், நமக்கு அதற்கு வேண்டிய விடை கிடைக்கும்.
‘‘என்னுடைய இருக்கை இருக்கிறதே,
அது எனக்கு நிரந்தரமானது!”
சில நேரங்களில் நான் பேசும்பொழுது, அமைச் சர்கள் சொல்வார்கள், ‘‘இப்படி இருக்கின்றது, அப்படி இருக்கின்றது; அதிகாரிகள் அதை செய்கிறார்கள்; இதை செய்கிறார்கள்” என்று.
நான் சொல்வேன், ‘‘நீங்கள் அமர்ந்திருக்கின்ற சீட் என்பது தற்காலிகமானது. அய்ந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான். அதற்குப் பிறகு நான் ஓட்டுப் போட் டால்தான் நீ மீண்டும் அங்கே அமர முடியும். ஆனால், இங்கே உட்கார்ந்திருக்கின்ற என்னுடைய இருக்கை இருக்கிறதே, அது எனக்கு நிரந்தரமானது; நான் பர்மனென்ட்” என்றேன்.
இதை நான் ஒருமுறை சொல்லும்பொழுது, ஒரு அமைச்சர், பேராசிரியரிடம் புகார் கொடுத்தார்.
பேராசிரியரின் ஒப்புதல்!
பேராசிரியர் சொன்னார், ‘‘அவன் சொன்ன தில் தவறு கிடையாதே – நீயும், நானும் நிரந்தர மில்லாதவர்கள்தான்; அவன்தான் நிரந்தரமானவன்” என்றார்.
இதை எதற்காகச் சொல்கின்றேன் என்றால், பல அதிகாரிகள் சொன்னார்கள், இப்படி ஒரு கேள்வியை கேட்கின்றீர்களே என்று.
நான் சொன்னேன், ஒரு பொறுப்புக்குப் போய் விட்டால், நம் முன்னால் இருப்பவர்களைப்பற்றி நிதானத்தோடு கவனிக்கவேண்டும். அந்த நிதானத் தைத் தவற விடுவார்களேயானால், அது மிகப்பெரிய ஆபத்தாக விளையும் என்பதுதான் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு.
பல்வேறு கருத்துகளை முதலமைச்சர்முன் வைத்தார் நமது ஆசிரியர்!
அந்த நிகழ்விலே, நம்முடைய ஆசிரியர் அவர் கள் கழகத்தினுடைய தலைவர், முதலமைச்சர் அவர் களிடம், அவர் உடல்நிலை சரியில்லாத நிலையில்கூட அங்கே வந்து, பல்வேறு கருத்துகளைக் கூறி அய்ந்து மணித்துளிகளுக்குள் எடுத்துச் சொல்லி, முதலமைச்சரை இணங்க வைத்தார்.
அவர் பேசிய பேச்சு, சொன்ன ஆணித்தரமான கருத்துகளைப்பற்றியெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள், எனக்குத் தொலைப்பேசியின்மூலம் சொன்னார்.
அதற்கு முன்பாக நடந்த கூட்டத்தில், அனைத் துத் தொழிற்சங்கத் தலைவர்களுடன் நான் பேசும் பொழுது, அதனைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தேன். அதே கருத்தை ஆசிரியர் அவர்கள், பல்வேறு உதாரணங்களுடன், நம்முடைய இயக்கம் எப்படி வளர்ந்தது என்பதை நம்முடைய தலைவர் அவர்களுக்கு, முதலமைச்சர் அவர்களுக்கு அறிவுரையாக எடுத்துச் சொன்னார்.
அதுதான் நமக்குத் தேவை!
பயந்து பல கெடுதல்களை
நாமே விலைக்கு வாங்கிக் கொள்கிறோம்!
ஒன்றை நாம் இங்கே சொல்லவேண்டும்; இப்படி நாம் பேசினால், அவர் ஏதாவது சொல்வாரா? அவருடைய நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பார்த்து பயந்து பல கெடுதல்களை நாமே விலைக்கு வாங்கிக் கொள்கிறோம்.
தாகத்திற்காக தண்ணீர் குடிக்கும்பொழுதுகூட, நல்ல தண்ணீரா என்று பார்த்துக் குடிக்கின்றோம்.
அதேபோன்று, எதுவும் கெடுதல் வரக்கூடாது என்பதற்காக நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கின்றோமோ, அதேபோல, நாம் அதில் முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய அவசியம் இருக் கின்றது என்பதுதான் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள்.
இன்னும் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன்.
இப்பொழுது நான் சொல்வது சற்று வித்தியாசமாக இருக்கும் உங்களுக்கு.
தனிக்குவளை முறையை அடித்து உதைத்துத் தூக்கி எறிந்தவர் தந்தை பெரியார்!
பல நிறுவனங்களில், பல ஒப்பந்தங்களை நாங் களே போட்டிருக்கின்றோம். நெய்வேலி நிறுவனம் போன்ற பல நிறுவனங்கள். அங்கே வேலைக்குச் செல்கின்ற நிரந்தரத் தொழிலாளர்கள். அங்கே நிரந்தரமில்லாத ஒப்பந்தத் தொழிலாள சகோதரர்களும் வேலை செய் கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத் தனியாக ஒரு கேண்டீன். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு தனியாக ஒரு கேண்டீன்.
இதுபோன்று தனிக்குவளை முறை முன்பு இருந் தது; அதை அடித்து உதைத்துத் தூக்கி எறிந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
ஆனால், உங்களுக்கு ஒரு வாழ்க்கைக் கிடைத்த வுடன், பார்ப்பனர்களைவிட மோசமாக இருக் கிறீர்களே?
மற்றவரையும் மனிதனாக நேசிக்கக்கூடிய பண்பு உங்களிடம் இருக்கவேண்டும்!
எத்தனை லட்சம் ரூபாய், எத்தனை கோடி ரூபாய் நீங்கள் சம்பளமாக வாங்கினாலும், ‘‘நான் ஒரு மனிதன், நான் மனிதனாக இருப்பவன்; இன்னொரு வனையும் மனிதனாக நேசிக்கக்கூடிய பண்பு உங்களிடம் இருக்கவேண்டும்.”
அந்தப் பண்பு உங்களிடம் இருக்குமேயானால், உங்களை யாரும், எதுவும் செய்ய முடியாது.
ஓர் உதாரணம் சொல்கிறேன், கள்ளக்குறிச்சியில் ஒரு சர்க்கரை ஆலையில், தற்காலிக தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அங்கே என்ன ஒப்பந்தம் என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்கள் காலத்திலேயே – தற்காலிகத் தொழிலாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்களின் பணியை செய்தால், அன்றைக்கு நிரந்தரத் தொழிலாளியின் சம்பளத்தைக் கொடுக்கவேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால், அவன் வேலை செய்யமாட்டான்; அப்படி ஒரு ஒப்பந்தம் இருக்கிறது ((Occupational Wages)). அந்த சர்க்கரை ஆலையில் நிரந்தரமில்லா தொழிலாளி, 30 ஆண்டுகளாக பணியாற்றுகின்றவன் – அவனை அழைத்து, நிரந்தரத் தொழிலாளியின் வேலையை செய்யச் சொன்னால், ‘‘இன்றைக்கு அந்த சம்பளத்தை என்னுடைய கணக்கில் சேர்ப்பீர்களா?” என்று கேட்கிறான்.
அப்படி அவன் கேட்டவுடன், அந்த நிர்வாகம் பயந்துகொண்டு, அதுபோன்றே சம்பளத்தைக் கொடுக்கிறார்கள்.
உரிமையைக் கொடு என்று கேட்பதற்கும் தயக்கம் நம் மத்தியில் இருக்கிறது
ஆனால், அரூரில் இருக்கக்கூடிய சர்க்கரை ஆலையில் பணியாற்றக் கூடிய நிரந்தரமில்லா தொழிலாளி, Occupational Wages கேட்டு, நிர்வாகம் கொடுக்கவில்லை என்றால், எங்களிடம் வருகிறான்.
ஏனென்றால், அந்தத் தைரியம், என்னை இந்த வேலை செய்யச் சொன்னால், அதற்குரிய ஊதியத் தைக் கொடு என்று – அதற்குரிய உரிமையைக் கொடு என்று கேட்கின்ற தயக்கம் நம் மத்தியில் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இது இப்பொழுது ஒரு பெரும் வியாதியாக வருகின்றது.
நான்கு சட்டங்கள் இந்தியாவில் கொண்டுவரப் பட்டு இருக்கின்றன. அந்த நான்கு தொகுப்புகளும் முதலாளிகளுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்டன. தொழிற்சங்க ரீதியாக எதிர்த்தோம்; நாடாளுமன் றத்தில் நாங்கள் வாதாடுவதற்கு வாய்ப்பில்லாமல், வேளாண் சட்டங்களை எதிர்த்து நாங்கள் எல்லாம் சஸ்பெண்ட்டாகி வெளியில் இருக்கும்பொழுது, எல்லா சட்டங்களையும் நிறைவேற்றி விட்டார்கள்.
அதற்காக ஒன்றிய அரசு விதிகளை வகுத்திருக் கிறது. அதை முடிவும் செய்துவிட்டார்கள். ஆனால், தொழிலாளர் நலன் என்பது மாநில அரசின் பட்டி யலிலும் இருக்கின்றது; ஒன்றிய அரசின் பட்டியலிலும் இருக்கின்றது.
ஒன்றிய அரசு சட்டத்தை இயற்றினாலும், மாநில அரசு, அந்த விதிகளை இயற்றினால்தான் அந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
முதலமைச்சரிடம்
கோரிக்கை வைத்தேன்!
எனவேதான், இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற தொ.மு.ச. பேரவை மாநாட்டில் அந்தக் கோரிக்கையை முதலமைச்சரிடம் நான் வைத்தேன். தமிழ்நாட்டில் அந்த விதியைக் கொண்டு வரக்கூடாது. அதன்மூலம் அந்த சட்டத்தை இங்கே அமல்படுத்தக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களிடமும் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கின்றோம்.
இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால், இதுபற்றி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து உள்ளே புகுத்திவிடப் பார்க்கிறார்கள்.
(தொடரும்)