தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தொகுதியான கொளத்தூர் பெரியார் நகரில், அந்நகர் உருவான காலத்தில் இருந்து ‘பெரியார் நூலகம்’ சிறப்பாக இயங்கி வருகிறது.
அந்நூலகத்தில் ஏராளமான நூல்கள் உள்ளதோடு, பொது நல அமைப்புகள் அவ்வப்போது மக்களிடம் – மாணவர்களிடம் அறிவு வளர்ச்சி ஏற்படும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதும் சிறப்புக்குரியதாகும்.
தற்போது, அந்நூலகத்தை மேம்படுத்திட புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் கல்வி பயிலுகின்ற மாணவர்கள், பணிபுரியும் இளைஞர்கள் எனப் பலரது பயன்பாட்டுக்கு ஏதுவாக ‘முதல்வன் படைப்பகமும்’ அங்கு அமையவுள்ளது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு அந்நகரில் – அப்பகுதியில் சிலை இல்லையென்பது அங்கு வசிக்கின்ற மக்களின் பெருங்குறையும், நீண்ட கால எதிர்ப்பார்ப்புமாகும்.
கொளத்தூர் தொகுதி மக்களின் பெரு விருப்பப்படி பெரியார் நூலகத்தின் முகப்பில் – வளாகத்தில் பெரியார் சிலை அமைக்கப்படுவது மிகவும் பொருத்தமானதாகும்.
அச்சிலை அங்கு அமைக்கப்படுவது, தந்தை பெரியார் பிறந்த நாள் – சமூகநீதி நாள் (செப்.17), நினைவு நாள் (டிச.24), பிற நிகழ்வுகளின்போதும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், அப்பகுதி வாழ் பொது மக்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு நல் வாய்ப்பாக அமைந்திடும்.
எனவே, பெரியார் நகர் – பெரியார் நூலகத்தில் தந்தை பெரியார் சிலை அமைக்கப்படுவதற்கு சமூகநீதிக்கான சரித்திர நாயகர், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரிய ஆவன செய்திடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
– கொளத்தூர் பகுதி திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை,
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), புரட்சிகர இளைஞர் முன்னணி,
கொளத்தூர் கலை இலக்கிய மன்றம்,
மண்ணின் மைந்தர்கள், பெரியார் நகர் நூலக வாசகர்கள், ஜவஹர் நகர் நூலக வாசகர்கள்
குறிப்பு: இதுகுறித்த கோரிக்கை மனுவை தமிழ்நாடு முதலமைச்சர் (தனிப்பிரிவு, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்) அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.