ஸநாதனத்தின் பெயரில் செருப்பு வீச்சா?

3 Min Read

உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீசினார். வீசியவர் சொன்ன காரணம் மிகவும் மோசமானது.

‘ஸநாதனத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது!’ என்று தாக்குதல் நடத்திய வழக்குரைஞர் கூறியதுதான் முக்கிய பிரச்சினை.

வடமாநிலங்களில் சங்பரிவார்களும், ஆளும் பிஜேபியும் எந்தவிதமான மதவெறி நஞ்சை ஊட்டியுள்ளனர் என்பதுதான் கவலைக்குரிய ஒன்றாகும்.

இதுகுறித்து தலைமை நீதிபதி  பெரிதாக எடுத்துக் கொள்ளாதது – அவரின் பெருந் தன்மையைக் காட்டுகிறது.

‘‘கவனத்தைச் சிதற விடாதீர்கள், அது தன்னைப் பாதிக்காது’’ என்று கூறி எந்தப் பரபரப்புமின்றி, விவாதங்களைத் தொடருங்கள் என்று வழக்குரைஞர்களைப் பார்த்துக் கூறியது – அவரின் மன உறுதியையும், கடமை உணர்வையும் வெளிப்படுத்துகின்றன.

அப்படி என்ன தலைமை நீதிபதி ஸநாதனத்தை அவமதித்து விட்டார்?

சில நாட்களுக்குமுன் கஜுராேஹாவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்தபோது, ‘நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதைக் கேளுங்கள்’’ என்று கூறினார் தலைமை நீதிபதி.

இது ஸநாதன தர்மத்தை அவமதித்து விட்டதாம். இதனால் மனம் புண்பட்டு நீதிபதியை நோக்கிக் காலணியை அந்த வழக்குரைஞர் வீசினாராம். விஷ்ணுக்குச் சக்தியில்லை என்று ஒப்புக் கொள்வதால் ஏற்பட்ட கோபமோ!

கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே! ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணத்தை எழுதி வைத்து, அக்கோயிலின் சக்தியைப் பற்றி எல்லாம் அளந்து கொட்டி வைத்திருக்கவில்லையா?

சம்பந்தப்பட்ட அந்தக் கோயிலில் உள்ள சிற்பங்களும், சித்திரங்களும் எத்தகையவை என்று சொன்னால் ‘அய்யய்யோ ஸநாதனத்தைப் புண்படுத்துகின்றனர்!’ என்று ஓலமிடுவார்கள்.

இருப்பதிலேயே மிகப் பெரிய உயர்ந்த அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம்! அதில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய். அத்தகைய ஒருவர்மீது மெத்தப் படித்த வழக்குரைஞர் காலணியை வீசுகிறார் – அதற்குக் காரணம்  ‘ஸநாதனத்தை தலைமை நீதிபதி அவமதித்து விட்டார்’ என்கிறார்.

இதன் மூலம் இவர்கள் நம்பும் – கூறும் ஸநாதனம் எந்தளவு தரமானது – ஒழுக்கமானது என்பது விளங்குகிறதல்லவா!

ஸநாதனம் என்பது சமத்துவத்தின் மறு பெயரா? அவர்கள் நம்பிக்கைப்படியே அனைவரும் ஆண்டவனின் குழந்தைகள்தான், அதில் ஏற்ற, தாழ்வு கிடையாது என்று ஸநாதனம் கூறுகிறதா?

‘‘பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன்; தோளில் பிறந்தவன் சத்திரியன்; இடுப்பில் பிறந்தவன் வைசியன்; காலில் பிறந்தவன் சூத்திரன்; பிர்மா இந்த உலகத்தை பிராமணர்களுக்காகவே படைத்தார்; சூத்திரன் பிராமணனுக்கு அடிமைத் தொண்டூழியம் செய்யவே படைக்கப்பட்டவன் – விபசாரி மகன்’’ என்று கூறும் மனுதர்மம்தான் ஸநாதனத்தின் துலாக்கோலா?

வைசியர்களும், சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று ‘பகவான் கிருஷ்ணன்’ என சொல்லப்படும் கிருஷ்ண பகவானாலேயே அருளப்பட்டதே – இதுதான் ஸநாதானத்தின் இலக்கணமா?

‘‘நம் தேசத்தில்கூட பண்புக் குறைவான போக்கு, கிளர்ச்சி,  ‘டெமான்ஸ்ட்ரேஷன்ஸ் புரட்சி’ ஆகிய எல்லாம் கடந்த 40,50 ஆண்டுகளாகத்தான் உண்டாகி இருக்கின்றன. அதாவது, மற்ற தேசங்கள் மாதிரி நாமும் வெளியில் சமத்துவம் கொண்டாட வேண்டும் என்று ஆரம்பித்த பிறகுதான் உண்டாகியிருக்கின்றன’’ என்று கூறியிருப்பவர் யார் தெரியுமா? சாட்சாத் காஞ்சிப் பெரியவாள் என்று பார்ப்பனர்களாலும், அடி வருடிகளாலும் பல்லக்கில் வைத்துக் கொண்டாடப்படும் மூத்த சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி தான் (‘கல்கி’ 4.4.1976)

நாம் எல்லோரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்பதே தவறான ஒன்றாம் – அதற்காக கிளர்ச்சிகள் செய்யவும் கூடாதாம்! ஒருக்கால் இதனைத்தான் ஸநாதனம் என்று சொல்ல வருகிறார்களா?

ஸநாதனம் என்ற வார்த்தையை எடுத்தாலே சுள்ளென்று கோபம் பீறிட்டுக் கிளம்புகிறதே – அந்த ஸநாதனம் பிறப்பிலேயே பேதம் பேசுகிறதே – பிறப்பிலேயே மேல் ஜாதி, கீழ் ஜாதி பேசுகிறதே – இந்த நிலையில் இழிவுபடுத்தப்படும் மக்கள் கிளர்ச்சி செய்யக் கூடாதா? போராடக் கூடாதா?

காஞ்சிபுரத்தில் ஒவ்வாரு ஆண்டும் வடகலை பார்ப்பானும், தென் கலை பார்ப்பானும் ஒருவருக்கொருவர் வீதிகளில் அடித்துக் கொண்டு கட்டிப் புரள்கிறார்களே! முதலில் வேதத்தைப் பாடுவதா? பிரபந்தத்தைப் பாடுவதா என்பதில் குஸ்தி! இன்று நேற்றல்ல – நூற்றாண்டுகளாக!

இது எந்த வகை ஸநாதனம் என்பதை ஹிந்துத்துவாவாதிகள் விளக்குவார்களா?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி ஸநாதனத்தை அவமதித்து விட்டார் என்று காலணியை ஒரு வழக்குரைஞர் வீசுகிறார் – அதற்கு ஆர்.எஸ்.எஸ். பிரிவான விசுவ ஹிந்து பரிஷத் வக்காலத்து வாங்குகிறது என்றால் இவர்களைப்பற்றிப் புரிந்து கொள்ள வேண்டாமா?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பெருந்தன்மை எங்கே? இந்த ஸநாதன சில்லரைகளின் கீழ்மை நிலை எங்கே? சிந்திப்பீர்!

மறைமலை நகர் மாநாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை என்ற தீர்மானத்தின் சாரத்தையும் இத்தோடு இணைத்துப் பார்ப்பது அவசியம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *