சென்னை, அக்.10 ‘‘நாளை நடக்க உள்ள கிராம சபை கூட்டங்களில், ‘பாரத் நெட் – டான் பி நெட்’ அதிவேக இணைய சேவையை பயன்படுத்தி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்,” என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு:
ஒன்றிய அரசு, ‘பாரத் நெட்’ எனும் திட்டத்தை, 2014-2019ஆம் காலகட்டத்தில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை, மாநில அரசு செயல்படுத்த, அ.தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 3,000 கோடி ரூபாய்க்கு, ‘டெண்டர்’ கோரப்பட்டது.
அதில், சட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, டெண்டர் விவரங்கள் சரி செய்யப்பட்டு, 2022ஆம் ஆண்டு, ‘பாரத் நெட்’ மற்றும் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் பங்களிப்புடன், தமிழ்நாட்டில், 12,525 ஊராட்சிகளுக்கு, அதிவேக இணைய சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுவரை 11,800 ஊராட்சிகளுக்கு, கண்ணாடி இழை கம்பி வடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் இணைய சேவை வழங்க, ஊராட்சிக்கு இருவருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், குறைந்த அளவே விண்ணப் பங்கள் வந்தன. அதிவேக இணைய சேவை செயல்பாட்டில் சில பிரச்சினைகள் உள்ளன.
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த, இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று, திட்டத்துக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும், அதிவேக இணைய சேவைக்கான நிர்வாகத்தை, மாநில அரசே மேற்கொள்ள வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டில், ‘பாரத் நெட் – டான் பி நெட்’ இணைய சேவை வழியே, முதல் முறையாக, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயி லாக, 10,000 ஊராட்சிகளில் நாளை (11.10.2025) நடக்கும் கிராமசபை கூட்டங்களில், முதலமைச்சர் ஸ்டாலின் பேச உள்ளார். விரைவில், நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்பட்டு, 199 ரூபாய் கட்டணத்தில் கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.