தஞ்சை, அக்.10- சுவாமிமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கோவில் அர்ச்சகர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவில் அர்ச்சகர்
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் வெள்ளப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது. அதனைத் தொடர்ந்து இந்தக் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்தக் கோவிலில் அர்ச்சகராக இருப்பவர் திருவலஞ்சுழியைச் சேர்ந்த விஸ்வநாதன் (வயது 75). சம்பவத்தன்று இந்தக் கோவிலுக்கு ஒரு குடும்பத்தினர் வழிபாடு செய்ய வந்தபோது, அவர்கள் கருவறைக்கு அருகே ஒரு பையை மறந்து வைத்து விட்டு கோவிலுக்கு வெளியே வந்து விட்டனர்.
சிறுமிக்கு…
இதைத்தொடர்ந்து அந்த பையை எடுத்து வருவதாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தையிடம் கூறிவிட்டு, கோவிலுக்குள் சென்றுள்ளார். பையை எடுக்கச் சென்ற சிறுமிக்கு, கோவில் அர்ச்சகர் விஸ்வநாதன் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் அந்தச் சிறுமி சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அந்தச் சிறுமியின் பெற்றோர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்தச் சிறுமி கோவில் அர்ச்சகர் விஸ்வநாதன் தனக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்தச் சிறுமியின் தந்தை, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவில் அர்ச்சகர் விஸ்வநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சி மச்சேந்திரநாதன் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர் தேவநாதன் கோவில் கருவறையில் வைத்து பல பெண்களை சீரழித்தது தெரிந்ததே!