தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்க அறிக்கை
‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால் பாலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதின் நோக்கம் நிறைவேறுமா? என்று திராவி டர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது விளக்க அறிக்கை வருமாறு:
‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர், தமிழ்நாட்டிலே வாழ்ந்த, வாழும் மிக முக்கியமான தலைவர்கள், அறிஞர்கள் யாரையெல்லாம் கவுரவிக்க வேண்டும், எப்படியெல்லாம் சிறப்பு செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து, புதிய திட்டங்கள், கட்டடங்கள், சாலைகள், மேம்பாலங்கள் போன்றவற்றிற்கு அவர்க ளுடைய பெயர்களை எல்லாம் சூட்டி மகிழக்கூடிய, வருங்கால தலைமுறைக்கு அவர்களை எல்லாம் நினைவூட்டக்கூடிய ஓர் அற்புதமான ஒரு சாதனையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
பாராட்ட வேண்டியதாகும் இந்த செய்தி!
அண்மையில் தமிழ்நாட்டில் மிக நீளமான பாலமாகக் கட்டப்பட்டுள்ள அவிநாசி பாலத்திற்கு, மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் குடியிருக்கும் கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களுடைய பெயரை வைத்திருப்பது, கோவை மக்கள் மட்டுமல்ல, பலதரப்பட்ட மக்களும் பாராட்டக் கூடிய ஒரு செயலாகும்.
தமிழ்நாட்டிலேயே நம்முடைய விஞ்ஞானி
ஜி.டி.நாயுடு அவர்கள் ஒரு தனித்தன்மையாக, மற்ற வர்களுடைய கவனத்தை ஈர்த்த ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அதிசய மனிதர் அவர். அவருடைய பெயரை தக்க வகையில், தமிழ்நாட்டின் நீண்ட பாலத்துக்குச் சூட்டி இருப்பது, வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலை யில், தேவை இல்லாமல், அதை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சில அரசியல் அரை வேக்காடுகளும், புரிந்துகொள்ளாதவர்கள் சிலரும்
‘ஜி.டி.நாயுடு’ என்று ஜாதிப் பெயருடன் வைக்கலாமா? என்று கேட்கிறார்கள்.
சிலவற்றுக்கு விதிவிலக்கு வேண்டும்!
இது ஒன்று, விஷமம் அல்லது புரியாத்தனம்.
விஷமத்தைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. புரியாதவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஜி.டி.நாயுடு, ராஜகோபாலாச்சாரியார் போன்ற பெயர்கள் இருக்கிறது என்று சொன்னால், தங்களுடைய கையொப்பங்களையும் அப்படித்தான் போடுவார்கள். அவர்கள் அப்படியே அடையாளப்பட்டிருக்கிறார்கள். அதை நீக்கி, துரைசாமி பாலம் என்றால், எந்தத் துரைசாமி என்று யாருக்கும் தெரியாது. கோயம்புத்தூரிலேயே துரைசாமி என்றால் தெரியாது. இன்னுங்கேட்டால், அவருடைய பேரப் பிள்ளைகளுக்கே துரைசாமி யார் என்று கேட்டால், தெரியாது என்றுதான் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், சிலவற்றுக்கு விதிவிலக்கு வேண்டும். ஜி.டி.நாயுடு என்று சொல்லும்போது, அவரை நாயுடுவாக யாரும் பார்க்கவில்லை; விஞ்ஞானியாகத்தான் அவரைப் பார்க்கிறார்கள். அந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு என்றுதான் அடையாளமாக இருக்கிறார். ஆகவே, ஜி.டி. பாலம் என்று வைக்க முடியாது.
ஜாதி ஒழிப்புக்காகப் போராடியவர்கள்!
ஒருமுறை எழும்பூரில் டி.எம். நாயர் சாலை என்பதற்குப் பதிலாக, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில், அந்த நாயரை எடுத்துவிட்டு, ‘‘டி.எம். சாலை’’ என்று மாற்றப்பட்டது. ‘‘டி.எம். சாலை’’ என்றால், யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
அதேபோன்று, மாதவன் நாயர் என்ற பெயரை எடுத்துவிட்டு, வெறும் மாதவன் என்றால், எத்தனை மாதவன் இருக்கிறார்கள்? ஆகவே, பல மாதவன்களில் இது எந்த மாதவன் என்று தெரியாது.
ஆகவே, டி.எம்.நாயர், மாதவன் நாயர் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அது ஜாதியைக் குறிக்காது, ஜாதி ஒழிப்புக்காகப் போராடியவர்கள் அவர்கள் அனைவரும்! அது ஒரு வரலாற்றுப் பெயராக, நிலையாகி இருக்கிறது.
எனவே, இதில் கொண்டு போய் குறுக்குச்சால் ஓட்டு வது அவர்களுடைய குறுகிய புத்தியையும், ‘திராவிட மாடல்’ ஆட்சியில், குறைகாண வேண்டும் என்கின்ற ஓர் அற்பத்தனத்தையும்தான் வெளிப்படுத்துகின்றதே தவிர, எந்த அர்த்தத்தையும் வெளிப்படுத்தவில்லை.
இந்த வீராதிவீரர்கள் ஜாதி ஒழிப்பிற்காக இதுவரை செய்த பங்கென்ன? பணியென்ன? இவர்கள் ஜாதியை வெட்டி விட்டவர்களா? நெஞ்சில் கை வைத்துப் பார்த்துச் சொல்லட்டும்!
மக்கள், இவர்களைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பார்களே தவிர, அது எடுபடாது.
குறுக்குச்சால் ஓட்டும் வேலைகளால் ‘திராவிட மாடல்’ ஆட்சியை வீழ்த்த முடியாது!
மக்கள் மத்தியில் எப்படிச் சொன்னால், புரியுமோ, அப்படி சொல்வதுதான் அது.
முதலமைச்சருக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
ஏற்கெனவே அறிமுகம் ஆன பெயரும்கூட!
ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டதன் நோக்கம் – நாயுடு என்பதை நீக்கினால் நிறைவேறுமா?
எனவே, எல்லா விதிக்கும் விலக்கு உண்டு. இதற்கும் விலக்கு உண்டு.
ஜி.டி.நாயுடு அவர்களின் மகன் ஜி.டி.கோபால் அவர்கள் உள்பட, அவரது குடும்பத்தினர் யாரும் அடுத்தடுத்த தலைமுறையில் ஜாதிப் பெயரொட்டு பயன்படுத்துவதில்லை என்பது சுயமரியாதை இயக்கத்தின் வெற்றியல்லவா!
கோவை பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்த முதலமைச்சருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.10.2025