தஞ்சை, மே 22 தமிழ்நாட்டின் நெற் களஞ்சியமாக திகழ்வது டெல்டா பாசனப் பகுதிகள். டெல்டா பாசனத்திற்கு நீர் வார்க்கும் மேட்டூர் அணை சேலத்தில் உள்ளது. இந்த அணையில் இருந்து திறக் கப்படும் நீரால், மொத்தமாக தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இதில் காவிரி டெல்டா பகுதிகளின் குறுவை சாகுபடிக்காக, ஆண்டு தோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப் படுவது வழக்கமாக உள்ளது. கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை என்ற மனக்குமுறல் விவசாயிகளிடம் இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும், வழக்கம் போல் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப் பட்டது.
இது விவசாயிகளை பெரும் மகிழ்ச் சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, கடந்தாண்டு (2022) ஜூன் 12ஆம் தேதிக்கு முன்பாகவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மே மாதம் 20ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்திற்கான நீரை திறந்துவிட்டார். மேட்டூர் அணை வரலாற்றிலேயே, கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வு முதல் முறையாக நிகழ்ந்தது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடப்பாண்டும் மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12ஆம் தேதி, டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகிறது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகும். இது 20.5.2023 அன்றைய நிலவரப்படி 103.81 அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 69.868 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளவில் 74.75 சதவீதம் ஆகும். நீர்வரத்து விநாடிக்கு 924 கன அடியாக உள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 1503 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. இதனால் வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12ஆம் தேதியே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார்.