*இந்தியா முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 330 பணியிடங்கள் காலி!
* இதனால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 67 லட்சத்திற்குமேல்!
* தங்களுக்கு வேண்டியவர்களா என்று ஒன்றிய ஆளுமையாளர்கள் முடிவு செய்வதே தாமதத்திற்குக் காரணம்!
இந்திய அளவில் உயர்நீதிமன்றங்களில் 330 நீதிபதி பதவிகள் காலி – இதனால் 67 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. தாமதிக்கப்பட்ட நீதிபதி மறுக்கப்பட்ட நீதி என்று தெரிந்திருந்தும் இந்த நிலை நீடிக்கிறது. ஒன்றிய ஆளும் அரசு – முடிவெடுப்பதில் தாமதம் செய்வதே இதற்குக் காரணம்! சமூகநீதி அடிப்படையில் நீதிபதி நியமனங்கள் அவசியம்; இதற்கு சமூகநீதியாளர்கள் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை, அக்.6- சென்னை உள்பட 23 உயர்நீதி மன்றங்களில் 330 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
உயர்நீதிமன்றம்
டில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, அலகாபாத், கருநாடகா, கேரளா, குஜராத், கவுகாத்தி, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ராஜஸ்தான், திரிபுரா, பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட நாடு முழுவதும் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன. இந்த உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 1,122 ஆகும்.
இதில் 792 நீதிபதிகள் மட்டுமே இப்போது பணியாற்றுகிறார்கள். 161 நிரந்தர நீதிபதிகள், 169 கூடுதல் நீதிபதிகள் என 330 நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை உயர்நீதிமன்றங்களில் காலி யாக இருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 160 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 76 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
பணியிடங்கள் காலி
மும்பை உயர்நீதிமன்றத்தில் 94 நீதிபதி பணி யிடங்கள் உள்ள நிலையில், 26 நீதிபதி பணியிடங் களும், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி மன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 85 நீதிபதி பணியிடங்களில் 25 நீதிபதி பணியிடங்களும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் உள்ள 72 நீதிபதி பணியிடங்களில் 24 நீதிபதி பணியிடங்களும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 பணியிடங் களில் 19 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன.
தலா 3 நீதிபதிகளை கொண்ட சிக்கிம் மற்றும் மேகாலயா உயர்நீதிமன்றங்களில் மட்டும் அனுமதிக் கப்பட்டுள்ள பணியிடங்களில் நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். மீதம் உள்ள உயர்நீதி மன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் வழக்குகள் தீர்வை எட்ட முடியாமல் இழுத்துக்கொண்டே செல்லும் நிலை இருக்கிறது.
காரணம் என்ன?
நீதிபதிகளை ‘கொலிஜியம்’ என்ற அமைப்பு தேர்வு செய்து வருகிறது. நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான ஒப்புதலை அரசிடம் இருந்து, ‘கொலிஜியம்’ அமைப்புப் பெறுவதில் ஏற்படும் நடைமுறை தாமதம்தான் சென்னை உள்பட 23 உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 67 லட்சத்திற்கும் அதிகம்!
‘‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’’ என்பதை ஆளும் ஒன்றிய அரசில் உள்ளவர்களும், ‘கொலிஜியம்’ என்ற நீதிபதிகள் பணியிடங் களுக்குப் பரிந்துரைக்கும் மூத்த நீதிபதிகளும் அறியாதவர்களா?
‘‘நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான ஒப்புதலை ஒன்றிய சட்ட அமைச்சகம் மற்றும் உரிய அமைப்பு முறை அதிகார மய்யங்களிடமிருந்துப் பெறுவதில் ஏற்படும் நடைமுறைத் தாமதம்தான் சென்னை உயர்நீதிமன்றம் உள்பட 23 உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதற்கு மூல காரணம்!
நீதித்துறைதான், ஜனநாயக ஆட்சியில் மக்களின் ஒரே கடைசி நம்பிக்கை!
இதன் நிலை இப்படி இருப்பதற்கு உரிய மூலகாரணம் என்ன என்பதைத் தோண்டித் துருவி, அந்த முடிச்சினை வெட்டி விடுவதற்கு – வழியில் என்ன தடை?
சமூகநீதி எல்லா அரசுத் துறைகளில் குறிப்பாக, நிர்வாகத் துறை (Executive), சட்டமன்ற – நாடாளுமன்றத் துறை (Legislature), நீதித்துறை (Judiciary) மூன்றிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே– ஆட்சியாளர்கள், நீதிபதிகள் (குடியரசுத் தலைவர் தொடங்கி) அனைவரும் எடுத்துக் கொள்ளும் அரசியலமைப்புச் சட்டப்படியான பதவிப் பிரமாண உறுதிமொழி! – தத்துவம்.
ஆனால் இது இத்துறைகளில் முழுமையாக அல்லது பெரும்பான்மையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலாக, ஏமாற்றமே மிஞ்சுகிறது!
நீதிபதிகள் நியமனங்களில், ஆட்சியாளர் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்பதில் தாமதம் ஏன்?
தங்களது கொள்கைச் சார்புள்ளவர்கள் – தக்க வகையில் அடையாளம் காணப்பட்டு, தங்களுக்கு வேண்டியவர்களா என்பதை அறிந்து ஒன்றிய ஆளுமையாளர்கள் இறுதி இசைவு தருவதில் தாமதம் ஒருபுறம்.
மற்றொருபுறம், உயர்நீதிமன்றங்களின் மூத்த மூன்று நீதிபதிகள்தான் கொலிஜியத்தின் பரிந்துரைக் குழுவினர்.
இவர்களில் தலைமை நீதிபதி ஒருவர்; மற்றவர்கள் பணிமூப்பு அடிப்படையில் இரண்டு மூத்த நீதிபதிகள்.
இவர்களில் சமூகநீதி உணர்வாளர்கள் இடம் பெற்று விட்டால் – சீர்கேடுகளுக்கு அவர் ஒத்துப் போக மாட்டார்கள் என்று உணர்ந்து, சமூகநீதிக்கு எதிராக உள்ள ஆதிக்கவாதிகள் ஒரு தந்திர நடைமுறையை உயர் அமைப்புகளின் ஒத்துழைப்போடு கையாளுகிறார்கள் என்பது கண்கூடு.
இதில் உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் இடம்பெறத்தக்க சமூகநீதியாளர் இருந்தால் அவர் பதவி ஓய்வு பெறும் வரையில் தலைமை நீதிபதி பதவி அவருக்கு வராது. ஒன்று கிடப்பில் போடுவது, இல்லையேல், அவர்களை மிக லாவகமாக மற்ற உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதி பதவிக்கு மாறுதல் மூலம் அனுப்பி விடுவது!
இங்கே வரிசைப்படி சீனியர் – அங்கோ ஜூனியர் போல வரிசையில் பின்னுக்குத் தள்ளப்படும் விசித்திரம்!
இன்னும் சில உயர்ஜாதி நீதிபதிகளின் யுக்தி – தந்திரத்தால் – இங்கே சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி ஒருவர் மேலே உச்சநீதிமன்றம் செல்ல வெகு நாள் ஆகும்! அதற்குள் ஓய்வு வயதும் வந்துவிடும்; அதற்காக பக்கத்து மாநில உயர்நீதிமன்றத்திலும் மாறுதல் பெற்று, உச்சநீதிமன்றத்தில் இடம் பெற்று – ஓய்வு பெற்றும் புதிய பதவிகளைப் பெற்று விடுவர்.
இவையெல்லாம் உயர் ஜாதியினரின் உத்திகளும், தந்திரமும் பிணைந்து மேலே அதிகாரத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதற்கு முன் உதாரணம்!
இவை போல கண்டறிவதற்கு முடியாத ‘முகபடாம்’கள் பலப்பல!
பெண்களுக்கு வாய்ப்பு – பாலியல் நீதி என்ற கோரிக்கையை நிறைவேற்றும் பாவனையில் உயர் ஜாதிப் பெண்களையே வழக்குரைஞர்களிலிருந்து தேர்ந்தெடுத்து, சமூகநீதிக்கு இடந்தராத ‘பாலியல் நீதி’யை நடைமுறைப்படுத்திக் காட்டும் விசித்திர சமூக அநீதி!
இவையெல்லாம் பற்றி மக்கள் மன்றத்தில் எந்த உள்நோக்குகளும் இன்றிப் பொது நோக்கோடும் – மக்கள் நல சமூகநீதி – உண்மையான பாலியல் நீதி உணர்வுடன் விளக்கிட பல முற்போக்குச் சுயநலம் துறந்த, துணிச்சல் நிறைந்த பொதுநலவாதிகள் தேவை!
உச்சநீதிமன்றமும், கொலிஜியமும் – அண்மைக் காலங்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பரிந்துரை செய்யவேண்டும் என்று வெளிப்படையாகக் கூறிடும் நிலை தோன்றியுள்ளது. நமது இயக்கமும், சில முற்போக்கு சிந்தனை வழக்குரைஞர்களும் மேற்கொண்ட பணியால் சிறிது சிறிது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனை ஒரு மக்கள் இயக்கமாகவே நடத்தி, சமூகநீதி, பாலியல் நீதிப்படியே இனி நிரப்பப்பட வேண்டிய நீதிபதிகள் நியமனம் அமைவதற்கு அனைத்து சமூகநீதியாளர்களும் ஓரணியில் திரண்டு, ஒரே குரலில் மக்கள் பெரு விருப்ப நியாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்க, விழிப்புணர்வைத் தட்டியெழுப்புவதே ஒரே வழியாகும். உண்மை நீதி அங்கே கிடைக்க வேறுவழி ஏது?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.10.2025