மன்னார்குடி மாவட்டம், முல்லைவாசல் கிராமத்தில் தந்தை பெரியார் அவர்களது கொள்கைகளை ஏற்று மிகப் பெரும் பெரியாரிஸ்ட் ஆகவே வாழ்நாள் முழு வதும் வாழ்ந்து மறைந்த சுயமரியாதை வீரர் அய்யா முல்லைவாசல் பட்டா மணியர், மிராசு, இரத்தினசபாபதி அவர்கள். அக் காலத்திலேயே சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர். அவரது குடும்பம் – பிள்ளைகள் அத்துணை பேரும் சுயமரியாதை – திராவிடர் கழகக் கொள்கை வயப்பட்டு வளர்ந்து வாழ்பவர்கள்.
அவரது அருமை மகன் நகர திராவிடர் கழகத் தலைவராகத் தொடர்ந்து, கட்டுப்பாடு மிக்க கடமை வீரராகவே இறுதிவரை வாழ்ந்த மானமிகு தோழர் அமிர்தராஜ் (வயது 82) அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துன்பமும், துயரமும் அடைகிறோம்.
நேற்று (21.5.2023) பிற்பகல் அவரது அன்பு மகள் தமது தந்தை இறந்த துயரச் செய்தியை (தொலை பேசியில் தொடர்பு கொண்டு) என்னிடம் கூறியபோது வேதனையுடன் அவருக்கு ஆறுதல் கூறினேன்.
எங்கு சந்தித்தாலும் அன்புடன் எனது நலம் விசாரிக்கத் தவறாதவர்; போராட்டங்களில் ஈடுபடவும் தவறாதவர்.
அவரது மறைவு அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல, இயக்கத்திற்கே ஒரு பெரும் இழப்பாகும்.
அவர்களது குடும்பத்தினருக்கு நமது ஆறுதலை யும், மறைந்த பெரியார் பெருந் தொண்டருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
22.5.2023