சுயமரியாதை இயக்கம் – 100 : நேரடிப் பதிவு!

3 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு 04.10.2025 சனிக்கிழமை காலை 8.30 முதல் இரவு 8.30 வரை செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திராவிடர் கழகத் தோழர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.

காலை 9 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர்கள் மாநாட்டுப் பந்தலில் புதிதாக நிறுவியுள்ள 60 அடி உயரக் கொடிக் கம்பத்தில் திராவிடர் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.

மாநாட்டில் அமைந்துள்ள வரலாற்றுக் கண்காட்சி அரங்கை மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்
தா. மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்.

இந்த அரங்கில் சுயமரியாதை வரலாற்றை விளக்கும் பல்வேறு விளக்கப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய கருத்தோவியங்களும் மிக நேர்த்தியான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஆழ்வார் பேலஸ் மண்டபத்தில் நூற்றாண்டு நிறைவு மாநாடு துவங்கியது.

மாநாட்டைத் திறந்து வைத்து மானமிகு ஆ. ராசா. எம்.பி. சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன், விசிக தலைவர் தோழர் தொல். திருமாவளவன், பேரா.
எம்.ஹெச். ஜவாஹிருல்லா மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதன் தொடர்ச்சியாக கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு வழக்குரைஞர் அ.‌அருள்மொழி தலைமையேற்றார். கழகத்தின் முன்னணிப் பேச்சா ளர்கள் இதில் உரையாற்றினார்கள். கருத்தரங்க நிறைவுரையை மானமிகு கனிமொழி கருணாநிதி எம்.பி. வழங்கினார்.

மாலை 5 மணிக்கு ‘திராவிடர் இன எழுச்சிப் பேரணி’ மறைமலை நகரின் அண்ணா சாலை – பாவேந்தர் சாலை சந்திப்பில் தொடங்கி, மாநாட்டுப் பந்தல் வரை கருஞ்சட்டைத் தோழர்களின் எழுச்சி மிகு முழக்கங்களோடு நடந்து முடிந்தது.

மாநாட்டுப் பந்தல் கருஞ்சட்டைத் தோழர்களாலும் திமுக தொண்டர்களாலும் நிரம்பி வழிந்தது. மாலை 6.30 மணியளவில் கருஞ்சட்டைத் தோழர்களின் ஆரவாரத்தோடும், திமுக தொண்டர்களின் கைதட்டல்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு, மானமிகு மு.க.ஸ்டாலின், ஆசிரியர்
கி. வீரமணி அய்யா வழிநடத்திக் கூட்டி, வர மேடைக்கு வந்தார். சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள் பற்றிய கலை நிகழ்ச்சி நடந்தது.

மாநாட்டுத் தலைமையுரையை தமிழர் தலைவர் மிகுந்த எழுச்சியோடு நிகழ்த்தினார். ‘திராவிட மாடல் ஆட்சியை எந்த கொம்பனும் வீழ்த்த முடியாது’ என்றும் ‘உங்களைக் கோட்டைக்குள்ளே அனுப்புவது எங்கள் வேலை!

Entry உங்களது அதற்கான Sentry (பாதுகாப்பு) எங்களது!” என்று கூறி முடித்தவுடன் கைதட்டல்களும் ஆரவாரமும் அரங்கை அதிரச் செய்தது!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கல்வெட்டைத் திறந்து நிறைவுரையாற்றினார் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின்.

திராவிடர் கழகம்

சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளையும் அதன் அடிப்படையில் வந்த திராவிட மாடல் ஆட்சி யின் சாதனைகளையும் விளக்கினார். ஆசிரியர் அய்யாவின் அயராத தொண்டை வெகுவாக பாராட்டிப் பேசினார்.‌

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயங்குகின்ற கருஞ்சட்டை தோழர்களை, “கருப்புச் சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன்! திராவிடர் கழகத் தொண்டர்களுக்கு எனது சல்யூட்!” என முதலமைச்சர் சல்யூட் அடித்துப் பாராட்டினார்!

கருஞ்சட்டைக்காரர்களின் கரங்கள் சிவப்பாகும் வரை கைதட்டல்கள் நீண்ட நேரம் ஒலித்தது!

பெரியார் உலகத்திற்கு திமுகவின் பங்களிப்பாக கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை ஏறத்தாழ 1.50 கோடி ரூபாயை தர உள்ளதாக மகிழ்ச்சியோடு அறிவித்தார்.

திராவிடர் கழகம்

கருஞ்சட்டைத் தோழர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு அந்த அறிவிப்பை கைதட்டல்களுடன் ஏற்றுக் கொண்டார்கள்!

நூறாண்டுகளுக்கு முன்னர் இதே செங்கல்பட்டில் (1929) நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாடு படைத்த சரித்திரத்தைப் போல இந்த நூற்றாண்டு நிறைவு விழா மாநாடும் வரலாறு படைக்கும் என்ற நம்பிக்கையோடு திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைத் தோழர்கள் மாநாடு முடிந்த பின்பு கலைந்து சென்றார்கள்!

பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்

மணாவின் ‘‘தாய்’’ இணைய இதழிலிருந்து

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *