மந்தைகள் அல்ல… இளைஞர்கள்! தலைவர்களின் பின்னால் கும்பலாகத் திரள்வதோ, உணர்ச்சிவசப்படுவதோ, வெறுப்பைப் பரப்புவதோ அரசியல் அல்ல!

5 Min Read

மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்
சிவபாலன் இளங்கோவன்

ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதன் பொருளாதார வளர்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது, நிலையான எதிர்காலத்துக்கான எத்தகைய வளங்களை அந்தச் சமூகம் கொண்டிருக்கிறது என்பது முக்கியமான அம்சம். இளைய தலைமுறையினரே சமூகத்தின் எதிர்கால மனிதவளம்; அவர்களின் அரசியல் புரிதல் சமூக வளர்ச்சியுடன் நேரடித் தொடர்புடையது.

சமூகத்தின் அரசியல், பொருளாதார நிலை, பல்வேறு வரலாற்றுத் தருணங்கள், ஏற்றத்தாழ்வுகள், இன்றைய சவால்கள், வளர்ச்சிக்கான தடைகள், அந்தச் சமூகத்தின் கூட்டு மனசாட்சி போன்ற வற்றைக் கட்சி சாய்வின்றிப் புரிந்துகொள்வதே அரசியல் புரிதல். அந்த வகையில், தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளங்களான மொழி யுணர்வு, கூட்டாட்சி, சமூகநீதி போன்றவற்றை அதன் உண்மையான பொருளோடு புரிந்துகொள்வதும் இவற்றை உள்ளடக்கிய ஓர் ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதும்தான் இன்றைய இளைஞர்களின் முன் உள்ள சவால்கள். தமிழ்நாட்டின் கூட்டு மனசாட்சியின் நிரந்தர அம்சங்களான இவை பற்றியெல்லாம் இன்றைய இளைஞர்கள் எந்தப் பக்கச் சாய்வின்றியும் தெரிந்துகொள்வதே முதல் படி. ஆனால் தனிநபர் அபிமானம், ரசிக மனநிலை,வறட்டு இனவுணர்வு, மேலோட்டமான தகவல்கள் போன்றவை இளைஞர்களின் அரசியல் புரிதலுக்கான தடைகளாக இருக்கின்றன.

மாறிவரும் மனநிலை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் நடந்த இளைஞர்களின் பல்வேறு போராட்டங்களே அதன் இன்றைய வடிவத்தை நிர்ணயித்திருக்கின்றன. பல்வேறு மாணவப் போராட்டங்கள் சீரான ஒழுங்குடனும், தெளிவான அரசியல் நோக்கங்களுடனும் தேசத்துக்கே முன்னுதாரணங்களாக இருந்திருக்கின்றன. ஆனால், கட்டுப்பாடற்ற கும்பல் மனநிலை, கூச்சல், ஆரவாரம், எந்த அரசியல் நோக்கமும் அற்ற ரசிக மனநிலை, ஒழுங்கின்மை, வன்முறை என இளைஞர்கள் கூடும் சமீபத்திய அரசியல் கூட்டங்கள் பெரிதும் வருத்தம் அளிக்கின்றன. அரசியல் முதிர்ச்சியற்று, சுயமரியாதை யற்று வெறும் மந்தைகளாக இளைஞர்கள் திரள்வது சமூகத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. மந்தை மனநிலையிலிருந்து அவர்களை உண்மையான அரசியல் இயக்கமாகத் திரட்டுவதே சிவில் சமூகத்தின் முன்னுள்ள சவால்.

இளைஞர்களின் ஆளுமைப் பண்பு என்பது பதின்பருவம் முடியும்போது முழுமையடைகிறது. அதுவரை மாறிக்கொண்டேயிருக்கும் இந்தப் பண்புகள் 20 வயதுக்கு மேல் ஒரு வடிவத்தை வந்தடைகின்றன. கிட்டத்தட்ட நிலையான இந்தப் பண்புகள்தான் இளைஞர்களின் எதிர்கால முடிவுகளைத் தேர்வு செய்கின்றன; மதிப்பீடுகள், முன்னுரிமைகள், உணர்வுகளைக் கையாளுதல் போன்றவற்றை எல்லாம் நிர்ணயிக்கின்றன. இதில் மூன்று நிலைகள் மிக முக்கியமானவை. தன்னை அறிதல், சுய அடையாளம் உருவாதல், சமூகத்துடனான இணக்கமான பிணைப்பு உருவாதல். இவை முழுமை அடையும்போது ஆரோக்கி யமான, பண்பட்ட, முழுமையான ஆளுமையை அது உருவாக்குகிறது.

மாறாக, பல்வேறு காரணங்களால் இந்த மூன்று நிலைகள் பாதிக்கப்படும்போது, அது பிளவுபட்ட ஆளுமையை உருவாக்குகிறது. அதேபோல, இந்த மூன்று நிலைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது அந்தச் சமூகத்தின் அன்றைய மதிப்பீடுகளுடனும், நலனுடனும் நேரடித் தொடர்புடையது. ஒரு சமூகத்தின் மதிப்பீடுகள் வீழ்ச்சியடையும் போது, அதன் தாக்கம் இளைஞர்களின் இத்தகைய வளர்ச்சியிலும் எதிரொ லிக்கும்.

மிகைப்படுத்தப்பட்ட சுய பிம்பம்

இன்றைய இளைஞர்களின் தன்னறிதல், சுய அடையாளம், சமூகப் பிணைப்பு ஆகிய மூன்று முக்கியமான வளர்ச்சிகளுமே முழுமையானதாக இல்லை. உதாரணத்துக்கு, இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனைத்து வசதிகளுடனும் வளர்க்க முற்படுகிறார்கள். இதன் விளைவாக அவர்களுக்கு மிகைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சூழலை உருவாக்கிக்கொடுக்கிறார்கள். இதில் வளரும் இளைஞர்கள் அதை உண்மை என நம்புகிறார்கள். இந்த மிகைப்படுத்தப்பட்ட வசதியை அவர்கள் தங்கள் சாதனையாகக் கருதுகிறார்கள். தங்களைப் பற்றிய ஓர் உயர்வான, அதேநேரம் போலியான மனநிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

ஜாதி, இனம், நாயக அபிமானம் அவர்களுக்கு ஓர் எளிய அடையாளத்தை உருவாக்கிக் கொடுக்கின்றன. சமூக வலைத்தளங்களில் இந்த அடையாளம் கூர்மைப்படுத்தப்படுகிறது. எந்த மெனக்கெடலும் இன்றி மிக எளிமையாகக் கிடைக்கும் அடையாளம், ஒரு குறுஞ்சமூகமாகத் தன்னை உணர்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. இந்த அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு அவர்கள் செய்யக்கூடிய எளிய செயல், எதிர்க்குழுக்களின் மீது வன்மத்தையும் வெறுப்பையும் பரப்புவது; இதன் வழியாகவே தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். இப்படித்தான் கும்பல் அடையாளம் உருவாக்கப்படுகிறது. அதேபோலச் சமூகப் பிணைப்பு என்பது ஒட்டுமொத்தச் சமூக நலன் மீதான அக்கறையினால், அதன் செயல்பாடு களால் உருவாகாமல், தாங்கள் சார்ந்த குழுக்களின் கூட்டு நடவடிக்கைகள் ஒன்றிணைவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. அதனால், சமூகத்தின் மீதான பிணைப்பு என்பது ஜாதி, இன, திரைப்பட ரசிகக் குழுக்களின் நடவடிக்கைகளில் ஒன்றிணைவதுடன் முடிவுக்கு வந்துவிடுகிறது.

இந்தக் குழுக்களில் இளைஞர்கள் தங்களது அடையாளத்தை இழக்கிறார்கள்; அதன் வழியாக உருவாக்கப்பட்ட வெறுப்பும் வன்மமும்தான் அரசியல் என நம்புகிறார்கள். தங்களைப் பற்றியும் தங்கள் அடையாளத்தைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் அவர்கள் கொண்டிருப்பதெல்லாம் மிகைப்ப டுத்தப்பட்ட போலியான பிம்பங்களே என்பதை உணராமல், அதில் இன்னும் தீவிரமாக இயங்குவதே அவர்களின் இந்த மனநிலைக்கு அடிப்படைக் காரணம். இந்தக் குழு மனநிலையை அவர்கள் தீவிரமாக ஏற்றுக்கொள்ளும்போது சுய அடையாளமற்ற மந்தைகளாக மாறுகின்றனர். ஓர் ஆழமான அரசியல் புரிதலை உருவாக்கிக் கொள்வதோ, ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுப்பதோ, வன்முறைகள் அற்ற தெளிவான பாதைகளை வகுத்துக்கொள்வதோ அவர்களுக்குச் சாத்தியமாவதில்லை. சுய அடையாளமற்ற இந்தத் தீவிரத்தன்மைகளை, அவர்கள் பின்தொடரும் தலைவர்கள் புரிந்துகொண்டு, அவர்களின் சுய அடை யாளத்தை மீட்க வேண்டும். அவர்களோ இந்த மனநிலையைத் தங்களது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்; அவர்களை இதே நிலையில் வைத்திருக்கும் உத்திகளைத் திட்டமிட்டுத் தொடர்கிறார்கள்.

போலி மயக்கங்கள்

எப்போதெல்லாம் ஒரு சமூகம் அதன் மதிப்பீடுகளில் வீழ்ச்சியடைகிறதோ, அப்போதெல்லாம் அந்தச் சமூகத்தின் இடுக்குகளிலிருந்து எழுந்து வரும் இளைஞர்கள்தான் அந்தச் சமூகத்தைச் சமன்படுத்தி யிருக்கிறார்கள். ஆழமான அரசியல் எதிர்க் குரல்களைச் சமூகத்தில் அவர்கள் எழுப்புவதே அந்தச் சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கு அவசியம். இளைஞர்களின் இந்த அரசியல் புரிதலை நாம் பக்குவப்படுத்த வேண்டும், போலி மயக்கங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அவர்களை அரசியல்படுத்தும் வழிகளை ஜனநாயக இயக்கங்கள் திட்டமிட வேண்டும். சினிமாக்களின் கவர்ச்சியிலிருந்து சமூகத்தை நோக்கி இளைஞர்களைத் திரட்ட வேண்டும். சமூகத்தின் மீதான உண்மையான புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்துவதற்கான வழி முறைகளை சிவில் சமூகம் ஆராய வேண்டும்.

தங்கள் தலைவர்களின் பின்னால் கும்பலாகத் திரள்வதோ, உணர்ச்சிவசப்படுவதோ, வெறுப்பு களைப் பரப்புவதோ அரசியல் அல்ல; சமூகத்தின் மீதுள்ள உண்மையான அக்கறையிலிருந்து வெளிப்படு வதே மக்களுக்கான அரசியல் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய தலைவர்கள் சுய அடையாளமற்ற, வெற்றுக் முழக்கமிடும் கும்பலாகத் தங்களைப் பின்தொடரும் இளைஞர்களை வைத்திருக்காமல், அவர்களை அரசியல் புரிதல்கொண்ட, சமூக நலன் மீது உண்மையான அக்கறை கொண்ட இளைஞர்களின் இயக்கமாக உருவாக்க முற்பட வேண்டும். அந்த வழியில்தான் ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டமைக்க முடியும்

நன்றி: ‘இந்து தமிழ் திசை’, 8.10.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *