சென்னை, அக்.8 ‘நான் முதல்வன்’ திட்டத்தால் தமிழ்நாடு திறன் மிக்க தலைநகரமாக மாறி வருகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரி வித்தார்.
சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் தரமணி மய்ய பாலிடெக்னிக் கல்லூரியில் 6.10.2025 அன்று நடைபெற்ற விழாவில் ரூ.50 லட்சத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மய்யத்தை (சுடரொளி) அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.
இதையடுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர் களுக்கு ‘நல் ஆசான்’ விருதுகளை வழங்கினார். தொடர்ந்து, தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரிந்து பணியில் இருக்கும்போது மறைந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர் நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:
‘நான் முதல்வன்’ திட்டம்
‘நான் முதல்வன்’ திட்டம் இளைஞர்கள் தலை நிமிர்ந்து தன்னம்பிக்கையோடு நிற்க உதவும் திட்டம். வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலையை உருவாக்கு பவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். இத்திட்டம் மூலம் தமிழ்நாடு திறன்மிக்க தலைநகரமாக மாறி வருகிறது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை 100 சதவீதம் ஆக்க உழைத்த 30 கல்லூரிகளின் முதல்வர் கள், பாலிடெக்னிக் கல்லூரியில் 50 வயதைக் கடந்த இரு மாணவர்கள் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட் டது. இவ்வாறு அவர் கூறினார்.
அறிவியல் அணுகல் கூடம் திறப்பு
முன்னதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் அறிவியல் படைப்புகளைத் தொட்டு உணரும் வகையில் சென்னை பிர்லா கோள ரங்கத்தில் அமைக்கப் பட்ட அறிவியல் அணுகல் கூடத்தை அமைச்சர் கோவி. செழியன், உச்சநீதி மன்ற மேனாள் தலைமை நீதிபதி ஒய்.சந்திரசூட் ஆகியோர் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.
சென்னை அய்அய்டியின் ஆராய்ச்சி மய்யம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் இணைந்து இந்த அறிவியல் அணுகல் கூடத்தை அமைத்துள்ளன.
நிகழ்ச்சியில் மேனாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ஓய்.சந்திரசூட் பேசுகையில், அறிவியல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கு சிறப்பாக உள்ளது. இதேபோன்ற ஆய்வுக் கூடங்களை அதிகளவில் அமைக்க வேண்டும். அதில் சுற்றுச்சூழல் பாதிப்புகள், தட்பவெட்ப நிலையால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றைப் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்க வேண்டும் என்றார்.