சுயமரியாதைக்கு நூற்றாண்டு

4 Min Read

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், நூற்றாண்டு காண்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் முதலாவது மாநில மாநாடு நடைபெற்ற செங்கல்பட்டில், நூற்றாண்டு விழாவையும் வெகுசிறப்பாக நடத்திக் காட்டி இருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ‘92 வயது இளைஞர்’ என்று அவரைப் போற்றிப் பாராட்டி இருக்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் – தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை இயக்க மாநாட்டுக்கு அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன் வருகை தந்தார். செங்கல்பட்டு மாநாட்டின் 80 ஆவது ஆண்டு நிறைவு விழா 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போது அதில் பங்கெடுத்து பெருமை சேர்த்தார் அன்றைய முதல மைச்சர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது சுயமரியாதை இயக்கம். நூறு ஆண்டைக் கடந்த அந்த இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கெடுத்துள்ளார் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் ஆற்றிய இருபது நிமிட உரையானது இடியாய் இருந்தது. வெடியாய் வெடித்தது.

மானமிகு ஆசிரியர் அவர்கள், ‘பெரியார் உலகமயம்; உலகம் பெரியார் மயம்’ என முழங்கி வருகிறார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டுக் கருத்தரங்கை ஆக்ஸ்போர்டில் நடத்தி வைத்தும், பெரியார் படத்தை அங்கு திறந்து வைத்தும் உலகமயம் ஆக்கி வருகிறார் மாண்புமிகு முதல் அமைச்சர்.

“தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரை நோக்கி கல் வீசினார்கள். செருப்பு வீசினார்கள். கத்தி வீசினார்கள். ஆனால் இன்று தந்தை பெரியார் அவர்கள் உலகத்தால் கொண்டாடப் படுகிறார். போற்றப்படுகிறார். இதுதான் பெரியாரின் அறிவுக்குக் கிடைத்த மரியாதை ஆகும்.

திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு கிடைத்த மதிப்பு ஆகும்.இன்னும் சொன்னால் மானமிகு ஆசிரியர் அவர்களின் உழைப்புக்கு கிடைத்த பலன் ஆகும்” என்று குறிப்பிட்டார் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள்.

பெரியாரின் சிறப்பு என்பது, எந்த சீர்திருத்தக் கொள்கையை அவர் பேசினாரோ, பரப்புரை செய்தாரோ, அதற்காக பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தாரோ அதே கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை தனது வாழ்வில் நேரடியாகப் பார்த்தார். உலகில் எந்த சீர்திருத்தவாதிக்கும் கிடைக்காத சிறப்பு இது.

சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு, மூடநம் பிக்கைகள் ஒழிப்பு, பார்ப்பனத் தன்மைகள் மீதான தாக்குதல், பெண்களுக்கு சொத்துரிமை, தீண்டாமை ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, அனைத்து பொது இடங்களிலும் பட்டியலினத்தவர்க்கு தடை இருக்கக்கூடாது, நில உரிமை, விதவை மணம், பொதுவுடமை, பொது உரிமை என அந்தக் காலத்தில் பலரும் பேசப் பயந்த பேச்சுகளை பேசத் தொடங்கினார் தந்தை பெரியார்.

1929இல் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் திராவிட அரசியலின் முழுமையை முதன்முதலாக அறிவித்தது. மக்கள் பிறவியில் உயர்வு – தாழ்வு உண்டென்பதை மறுத்தல், வருணாசிரமத்தை ஏற்கக் கூடாது, அனைத்து இடங்களையும் அனைவரும் பயன்படுத்தலாம்; எந்தத் தடையும் யாருக்கும் இருக்கக் கூடாது, ஜாதிப்பட்டம் போடக்கூடாது, தீண்டாதாருக்கு இலவசக் கல்வி தர வேண்டும், காலியாகும் வேலையில் தீண்டாதாருக்கு முன்னுரிமை தர வேண்டும், பெண்களுக்கு ஆண்களைப் போலவே சொத்துரிமை தர வேண்டும், பள்ளி ஆசிரியர்களாக பெண்களை அதிகம் நியமிக்க வேண்டும், ஜாதி வேறுபாடு பார்க்கும் உணவு விடுதிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், ரயில்வே உணவு விடுதிகளில் ஜாதி வேறுபாடு இருக்கிறதா எனக் கண்காணிக்க வேண்டும் – ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு கொள்கையானது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அரசமைப்பு சட்டத்திலேயே இடம் பெறுவதை பெரியார் கண்டார். பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர் கல்வி, வேலை வாய்ப்பில் நுழைவதை பெரியார் பார்த்தார். ஜாதிப் பட்டங்கள் உதிர்ந்தன. அனைவர்க்கும் அனைத்து இடங்களும் பொதுவானதாக மாறின. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியின் மூலமாக, வேலைகளின் மூலமாக, அதிகாரம் பொருந்திய பதவிகளின் மூலமாக தலைநிமிர்ந்தார்கள். பெண்கள் அனைத்து இடங்களுக்கும் முன்னேறி வருவதைப் பார்த்தார். பொட்டு கட்டுதல் என்ற மாபெரும் இழிவு துடைக்கப்பட்டது. சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்பதை முதல் அமைச்சர் அண்ணா உருவாக்கிக் காட்டினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை உருவாக்கிக் கொடுத்தார் முதல் அமைச்சர் கலைஞர்.

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு என்ற சட்டத்தை முதல் அமைச்சர் கலைஞர் உருவாக்கித் தந்தார். அரசுப் பணிகளில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினார் கலைஞர்.

இதன் தொடர்ச்சியாக ‘திராவிட மாடல்’ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆன காட்சியைப் பார்க்கிறோம். பெண்களும் அர்ச்சகர் ஆகி இருக்கிறார்கள். பெரியார் பிறந்தநாளும், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளும் மாநிலமே உறுதிமொழி எடுக்கும் நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. ‘காலனி’ என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. ஜாதி விடுதிகள், ‘சமூகநீதி’ விடுதிகள் ஆகி இருக்கிறது. ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகநீதி சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஆணையமே அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கொள்கைக்கான ஆட்சியாக, கொள்கையை சரியாகப் பின்பற்றுகிறோமா என்பதை கண்காணிக்கும் ஆட்சியாக ‘திராவிட மாடல்’ ஆட்சியை வடிவமைத்து நடத்தி வருகிறார் மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“மானமிகு ஆசிரியர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ள மாநில மாநாட்டுத் தீர்மானங்களைப் பார்த்தேன். சமூகக் களத்தில் நீங்கள் அதற்கான பரப்புரையைச் செய்யுங்கள். திராவிட முன்னேற்றக் கழகமானது ஆட்சியைப் பயன்படுத்தி சட்டங்களாக, விதிமுறைகளாக, நெறிமுறைகளாக வகுப்போம்” என்று உறுதிமொழி அளித்துள்ளார் முதல் அமைச்சர் அவர்கள்.

இது சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா மட்டுமல்ல. சுயமரியாதைக் கொள்கையின் வெற்றி விழா ஆகும். சுயமரியாதைச் சமூகமாக மாறி வருவதன் அடையாளம் ஆகும். ‘சுயமரி யாதை உலகு’ என்பாரே பாவேந்தர். அத்தகைய ‘சுயமரியாதை உலகை’ நோக்கிப் பயணப்படுவோம்!

‘சுயமரியாதை’ என்ற சொல்லே அனைவருக்கும் வேண்டிய சொல் ஆகும். அதுவே வெல்லும் சொல் ஆகும்!

நன்றி: ‘முரசொலி’ தலையங்கம் 6.10.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *