நமது முதலமைச்சர் உணர்வு பீறிட்ட பெருமிதத்துடன் ‘சல்யூட்’ சொன்ன பேறு, வேறு யாருக்குக் கிடைக்கும்?
மக்கள் ஆதரவுடன் ‘பெரியார் உலகம்’ என்பதன் அடையாளம்தான் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு!
ஓர் ஆட்சித் தலைவர் உணர்வு பீறிட்ட பெரு மிதத்துடன் ‘சல்யூட்’ சொன்ன பேறு யாருக்குக் கிடைக்கும்? மக்கள் ஆதரவுடன் ‘பெரியார் உலகம்’ என்பதன் அடையாளம்தான் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நன்றி தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது நன்றி அறிக்கை வருமாறு:
என்னைப் பணித் தோழனாக்கி, முதுமையா, இளமையா, வளமையா என்று யோசிக்கவிடாமல், கடமையாற்றும் சிப்பாய்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டு, அழைத்தவுடன் வருவோம், அவசர உதவிக்கு வரும் ஆம்புலன்ஸ்களைப் போல, தீயணைப்பு வீரர்களைப் போல, தீவிர சிகிச்சை மருத்துவர்களைப் போல, கால நேரம் பாராமல், கஷ்ட நஷ்டங்களை எண்ணிடாமல் இலட்சியப் பயணம் ஒன்றே நம் ஒரே இலக்கு என்று ஓடி ஓடி வந்து கடமையாற்றும் கருஞ்சட்டைக் குடும்பத்தினரே,
தந்தை பெரியார் என்ற வீழ்த்தப்பட முடியாத தலைவரின் தத்துவக் கொள்கை வாரிசுகளே, சுய மரியாதைச் சூரணங்களே,
பகுத்தறிவாளர்களே, கட்சி அரசியலைத் தாண்டி மறைமலை நகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா வெற்றி மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் கூடி, அடுத்த தலைமுறையின் மானத்தைக் காக்க தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஆட்சியை – அதன் மாட்சியை உணராதவர்களுக்கும் உணர்த்தி, மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியே – அது ஒப்பற்ற முதலமைச்சர் என்று உலகம் பாராட்டும் ஒருவரின் தலைமையில், கூட்டணிக் கட்சிகளின் குதூகல ஒத்துழைப்புத் தோழமையுடன் புதிய அரசியல் வரலாறு படைக்கப்படுவதற்கு முன்னோட்டமாக வந்து, கூடி, சூளுரைத்துச், சூடேற்றிக் கொண்டு சென்ற திராவிடச் செம்மல்களே மகிழ்ச்சி! உங்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த, தலைசாய்ந்த நன்றி! நன்றி!!
கருஞ்சட்டைக்காரர்களுக்கு ‘சல்யூட்’!
பதவியாசை, புகழாசை என்ற ஏதும் அறியாது, பெரியார் ஆணை எதுவோ அது நிறைவேற்றப்படவேண்டும் என்ற ஒரே ஆசையைப் பெற்று, பருவம் பாராமல் உழைக்கும் கருஞ்சட்டைப் பட்டாளத்தின் கடமை யாற்றலை எண்ணி, ‘‘கருஞ்சட்டைக்காரர்களான உங்களுக்கு இதோ என் சல்யூட் – வணக்கம்’’ என்று நமது முதலமைச்சர் நெஞ்சை நிமிர்த்தி, உண்மை உணர்வு பீறிட்ட பெருமிதத்துடன் சொன்னாரே! இந்தப் பேறு, இந்தப் பொன்னான சரித்திரம் படைத்திட்ட சுயமரியாதை மாநாட்டில் வேறு யாருக்குக் கிடைக்கும்?
எந்தப் பட்டங்கள், பவிசுகளானாலும் இதற்கு ஈடு உண்டா? இணையுண்டா?
நம் அறிவாசான் பெரியார் மறைந்தாரா? இல்லை, நம் உள்ளந் தொடங்கி, உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறார் என்பது எவரும் பெற முடியாத பெரும் பேறு அல்லவா?
4.10.2025 அன்று நடைபெற்ற செங்கை – மறை மலை நகர் மாநாடு, 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் விதைத்த கொள்கைப் பயிர்கள் வளர்ந்திருக்கும் செழுமையைப் பார்த்து, செம்மாந்து நின்று பூரிக்கும் மாநாடல்லவா!
வீறுநடைக்குப்
புதிய உத்வேகம்!
சுயமரியாதை இயக்கத்தை உலக இயக்கமாக்கும் தொலைநோக்கோடு, அதைத் தொடங்கும்போதே பிரகடனப்படுத்திய தலைவர் தந்தை பெரியாரின் விருப்பம் வெற்றிக் கனியாக ஆகி, உலகத்திற்கு, ‘திராவிட மாடல்’ ஆட்சியையும், அதன் சிறப்புமிகு முதலமைச்சரின் செயல்திறனையும் முன்னிறுத்தி, இனி செல்லவேண்டிய பாதையின் கண்ணி வெடிகளைக் கவனமாக வெளிப்படுத்தி, இராணுவம் செல்வதற்கு முன்பு, நோட்டம் பார்த்துப் பாதையமைக்கும் ‘‘சேப்பர்ஸ் & மைனர்ஸ்’’ படைபோல கருஞ்சட்டைப் படையின் வீறுநடைக்குப் புதிய உத்வேக மும், ஊக்கமும் தரும் ஓர் அரிய உணர்வின் ஊற்றாகியது – 4.10.2025 அன்று வரலாறு படைத்த மறைமலை நகர் மாநாடு!
இம்மாநாட்டின் வெற்றிக்கு இரட்டைக்குழல் துப்பாக்கி என்று அண்ணா சொன்னதை நிரூபித்துக் காட்டி, மக்கள் கடலை திரளச் செய்து, வெற்றித் திருப்புமுனைக்கு வீரகாவியம் படைத்த, உரைப் பீடிகைதான் வாழ்த்துரை.
நன்றி உணர்வின் திரட்சி!
எனவே, எல்லையற்ற மகிழ்ச்சியும், பெருமித உணர்ச்சியும் வெள்ளமென நமது உள்ளத்தில் பொங்கியது. நிறைவுரையில் தமது சங்கநாதத்தால் நமக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி தந்தார் ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர்!
திருச்சி சிறுகனூரில் உலகம் வியக்கும் வண்ணம் எழும்பிக் கொண்டிருக்கின்ற ‘பெரியார் உலகத்’ திட்டத்திற்கு வாழ்த்துக் கூறி, அதனை முடிப்பதற்கு என்றும் உங்களோடு துணை நிற்போம் – தமிழ்நாட்டின் அனைத்து மக்களின் பங்களிப்புடன் அது உருவாகும் என்று உலகுக்குப் பிரகடனப்படுத்துகின்ற வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோர், தங்களின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடை யாகத் தந்து (ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்) மக்கள் தலைவரது தொண்டுக்கு, மக்கள் காட்டும் நன்றி உணர்வின் திரட்சிதான் இந்த நிதி என்று வரலாற்றின் வைர வரிகளில் பதியப்படும்படி அளித்துள்ளார்கள்! பொறுப்புப் பகிர்வே இது!
இதுவும் ஓர் அமைதிப் புரட்சியே!
பதவி நாடா மக்கள் தலைவரின் தலைமையேற்று, பதவிகளைப் பொறுப்புகளாக்கி, ஆட்சியைக் கொள்கைத் தளங்களாக்கியதுடன், தங்களை ஆளாக்கிய தலைவருக்கு, அரசியல் ஆளுமைகளின் அன்புக் காணிக்கை என்று, புதியதொரு சரித்திரம் படைத்த நம் ஒப்பிலா முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பெருமக்களுக்கும்,
தாய்க்கழகம் தனது சீரும், சிறப்பும் மிக்க நன்றியைத் தலைதாழ்ந்து தெரிவித்துக் கொள்கிறது.
இதனை இப்படி புதுமையாக ஒருங்கிணைத்து, ‘பெரியார் உலகம்’ வளர்ச்சியில் பெரும்பாலானோருக்கு வழிகாட்டியவருக்கும், நன்கொடை நல்கும் அனை வருக்கும் எமது வணக்கம், நன்றி! நன்றி!! நன்றி!!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.10.2025