புதுடில்லி, அக்.6- ஒன்றிய உள்துறையின் கீழ் செயல்படும் டில்லி காவல்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘கான்ஸ்டபிள்’ பிரிவில் மொத்தம் 7565 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2
வயது: 18-25 (1.7.2025இன் படி)
தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை
தேர்வு மய்யம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலுார்
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 21.10.2025
விவரங்களுக்கு: ssc.gov.in.
2026இல் தகவல் தொழில்நுட்ப (அய்.டி.)
வேலை வாய்ப்பு : 8.5 சதவீதம் உயரும்
சென்னை, அக்.6- வேலை வாய்ப்பு இணையதளமான ‘இண்டீட்’ சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 2026இல் தகவல் தொழில்நுட் பத்துறையில் (அய்.டி.) வேலைக்கு ஆள் எடுப்பது 8.5 சதவீதம் உயரும் என தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டின் பிற்பகுதி மற்றும் இந்த ஆண்டின் முற்பகுதியில் மந்தமாக இருந்த திறமையான அய்.டி. ஊழியர்களுக்கான தேவை இப்போது அதிகரித்து வருகிறது.
தற்போது இண்டீட் தளத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்ப வேலைகளில் சுமார் 70% மென்பொருள் தொடர்புடையதாக உள்ளது. இதில், அதிக அளவாக அப்ளிகேஷன் டெவலப்பர் பங்கு 7.29% ஆக உள்ளது. இதுதவிர மென்பொருள் பொறியாளர் (5.54%), முழு ஸ்டாக் டெவலப்பர் (.434%), மூத்த மென்பொருள் பொறியாளர் (4.22%), பிஎச்பி டெவலப்பர் (2.52%) ஆகிய பதவிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
4 மாதங்களுக்கு முன்பு இறந்தவருக்கு அ.தி.மு.க.வில் ‘கட்சிப் பதவியாம்’
ஈரோடு, அக்.6- அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கெடு விதித்ததைதொடர்ந்து, அவர் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும் அவருடைய ஆதரவாளர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதிதாக நிர்வாகிகள் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நம்பியூர் ஒன்றிய பொருளாளராக எஸ். கே.செல்வராஜ் என்பவர் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். இதைக்கூட விசாரிக்காமல் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள் என மேனாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுதான் பா.ஜ.க. ஆட்சி!
உத்தராகண்ட் மாநிலத்தில் கர்ப்பிணிப்
பெண்ணுக்கு சிகிச்சை மறுக்கப்பட்ட கொடுமை
அரித்துவார், அக்.6- உத்தராகண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்ட
கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை தரையிலேயே குழந்தையை ஈன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண் 30.9.2025 அன்று இரவு அரித்வாரில் உள்ள அரசு பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் உறவினப் பெண் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.
பணம் தர முடியாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பணியில் இருந்த மருத்துவர், பிரசவம் பார்க்க முடியாது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. சிகிச்சை மறுக்கப்பட்ட அந்தப் பெண் பிரசவ வலியில் நகர முடியாமல் மருத்துவமனையின் தரையிலேயே அதிகாலை 1:30 மணியளவில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணி பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், “என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?” என்று நக்கலாக பேசி கேலி செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து புகார் எழுந்த நிலையில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இரவுப் பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் சோனாலி உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். மேலும் பிரசவித்த தாயும் சேயும் நலமாக உள்ளாதாகவும் அவர் தெரிவித்தார்.